நீல அச்சுப்படி

நீல அச்சுப்படி (Blueprint) என்பது, தொழில்நுட்ப வரைபடங்களைப் படியெடுக்கும் ஒரு குறிப்பிட்ட முறை மூலம் பெறப்படும் அச்சுப்படிகளைக் குறிக்கும். அண்மைக்காலத்தில் பெரிய அளவு தாள்களில் ஒளிப்படப்படிகள் எடுப்பதற்கான பொறிகள் பயன்பாட்டுக்கு வரும்வரை கட்டிடக்கலை, பல்வேறு பொறியியல் துறைகள் போன்றவை சார்ந்த வடிவமைப்பு வரைபடங்களைப் படியெடுப்பதற்கு நீல அச்சுப்படி முறையே பயன்பாட்டில் இருந்து வந்தது. தொடக்க காலத்தில் இத்தகைய அச்சுப்படிகள் கடும் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறக் கோடுகளையும் எழுத்துக்களையும் கொண்டதாக இருந்தன. இதனாலேயே இவற்றை நீல அச்சுப்படிகள் என அழைத்தனர்.

கப்பலொன்றின் வரைபடத்தைக் கொண்ட ஒரு நீல அச்சுபடி.

வரலாறு தொகு

நீல அச்சுப்படி முறை பிரித்தானிய வானியலாளரான சான் ஏர்ச்செல் (John Herschel) என்பவரால் 182 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இம்முறையில் அச்சுப்படி எடுப்பதற்கு ஒளியுணர்திறன் கொண்ட சேர்வைகளின் பூச்சுக் கொண்ட தாள் பயன்படுகின்றது. இப் பூச்சு பெரிக் அமோனியம் சித்திரேட்டு, பொட்டாசியம் பெரிசயனைடு என்பவற்றைக் கொண்ட ஒரு கலவை ஆகும். அப் பூச்சின்மீது கடும் ஒளி படும்போது அப் பூச்சிலுள்ள சேர்வைகள், கரையாத்தன்மை கொண்ட நீல நிறமான பெரிக் பெரோசயனைடு ஆக மாற்றம் அடைகின்றன. நீல அச்சுப்படிகள் எடுப்பதற்கான வரைபடங்களை ஒளிபுகவிடும் படிவரை தாள்களில் இந்திய மை எனப்படும் கருநிற மையினால் வரைவர். இந்த மூல வரைபடத்தை முற்சொன்ன ஒளியுணர் தாளின் மீது வைத்து அதன்மீது ஒளி பட விடும்போது மூலப் படத்தின் கோடுகளும் எழுத்துக்களும் பின்னால் உள்ள பூச்சின் மீது ஒளி படாது தடுக்கின்றன. இதனால் அவ்விடங்களில் உள்ள கரையக்கூடிய பூச்சு மாற்றமடையாமல் அப்படியே இருக்கும். மூலப் படத்தின் பிற பகுதிகள் ஒளியைப் புக விடுவதனால் அவற்றின் பின்னுள்ள பூச்சுக்கள் கரையாத்தன்மை கொண்ட சேர்வையாக மாறுகின்றன. உடனடியாக இத்தாளை நீரில் கழுவும்போது மாற்றமடையாத கரையக்கூடிய பூச்சுக் கரைந்துவிட அவ்விடங்களில் வெள்ளைத்தாள் தெரியும். புதிதாக உருவான சேர்வை நீரிற் கரையாமல் தாளிலேயே ஒட்டிக்கொண்டு இருப்பதனால் வெள்ளைக் கோடுகளுக்கும் எழுத்துக்களுக்கும் அது நீல நிறப் பின்னணியாக அமைகின்றது.

உண்மையில் 1950களில் இந்த நீல அச்சுப்படிகள் வழக்கொழிந்து விட்டன. புதிதாக அறிமுகமான இதுபோன்ற முறைகளான ஓசாலிட் முறை, நீலக்கோடு முறை என்பவற்றின் மூலம் பெறப்பட்ட படிகளும் நீல அச்சுப்படி (Blueprint) என்ற பெயரிலேயே வழங்கி வருகிறது. இம்முறைகளில், கோடுகள், எழுத்துக்கள் என்பன கடுமையான நிறத்திலும், பின்னணி வெள்ளை அல்லது இளம் நீலம் போன்ற நிறங்களிலும் இருந்தன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_அச்சுப்படி&oldid=1377849" இலிருந்து மீள்விக்கப்பட்டது