நுண்ணிலை கற்பித்தல்

ஒரு வகை பயிற்று நுட்பமாகும்

நுண்ணிலை கற்பித்தல் (Micro teaching) என்பது ஆசிரியர் பயிற்சியில் பயன்படும் ஒரு வகை பயிற்று நுட்பமாகும். இது ஆசிரியரின் கற்பிக்கும் திறனை வளர்க்கப் பயன்படுகிறது.

தோற்றம் தொகு

1961-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர் கெய்த் அசெசன் (Keith Acheson) என்பவர்தான், கற்பித்தல் செயல்முறையை, ஒளிப்பதிவு செய்து பின்னூட்டம் வழங்கலாம் என முன்மொழிந்தார். 1963-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆலன் (Dwight.W.Allen) என்பவர்தான் நுண்ணிலை கற்பித்தல் என்னும் சொற்கோவையை முதன் முதலில் பயன்படுத்தினார்.

பொருள் தொகு

ஆசிரியரின் கற்பிக்கும் திறனை (Teaching skill) வளர்த்துக் கொள்ள கட்டமைக்கப்பட்ட கற்பிக்கும் வழிமுறையே நுண்ணிலை கற்பித்தலாகும். இங்கு நுண்ணிலை என்பது அளவு குறைக்கப்பட்டதை குறிக்கிறது. இதில்

  1. ஒரே ஒரு கற்பிக்கும் திறன்
  2. மாணவர்கள் 5 முதல் 10 வரை
  3. வகுப்பு நேரம் 5 முதல் 10 நிமிடங்கள்
  4. ஒரே ஒரு பாடக்கருத்து, என சிறிய அளவில் கற்பித்தல் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு உண்மைச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகச்சிறிய அளவில் இப்பயிற்சியை அமைப்பதால் இது "நுண்ணிலை கற்பித்தல் நுட்பம்" எனப்படுகிறது. இப்பயிற்சியில் சக பயிற்சி ஆசிரியர்களே மாணவர்களாக பாவிக்கப்படும்பொழுது, இது "ஒப்பார் குழு" (Peer group) கற்பித்தல் எனவும் அழைக்கப்படுகிறது.

வரையறை தொகு

டுவைட் ஆலன் (Dwight.W.Allen, 1966) கூற்றுப்படி, "நுண்ணிலை கற்பித்தல் என்பது வகுப்பு நேரம் மற்றும் வகுப்பு அளவு குறைக்கப்பட்ட கற்பிக்கும் செயல்பாடு". எம்.சி. நைட் (M.C.Knight, 1971) கருத்துப்படி, "நுண்ணிலை கற்பித்தல் என்பது அளவு குறைக்கப்பட்ட கற்பித்தல், இதில் புதிய திறன்களை வளர்க்கவும், பழைய திறன்களை மெருகேற்றவும் முடியும்". கல்வியியல் தகவல் களஞ்சியம் (Encyclopedia of Education, Ed.Deighton. LC-1971): "நுண்ணிலை கற்பித்தல் என்பது உண்மையான, கட்டமைக்கப்பட்ட, அளவு குறைக்கப்பட்ட கற்பிக்கும் செயல்பாடு; இது ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது".

நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி தொகு

இப்பயிற்சியின் சுழற்சியில் 6 படிகள் உள்ளன.

  • திட்டமிடல்: (Planning)

இதில் கற்பிக்கும் திறன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உட்கூறுகள் அறியப்படுகின்றன. ஒரு பாடக்கருத்தினைக் கொண்டு, திறனை வெளிப்படுத்தும் வகையில் குறு-பாடத்திட்டமாக பாடநிகழ்வு தயாரிக்கப்படுகிறது.

  • கற்பித்தல்: (Teaching)

இதில் பயிற்சி ஆசிரியர் பாடக்கருத்தினை, கற்பிக்கும் திறனை பயன்படுத்தி, 5 முதல் 10 மாணவர்களுக்கு, 5 முதல் 10 நிமிடங்களில் கற்பிக்கிறார். நோக்கர் மூலம், மதிப்பீடுகள் உட்கூறுகளின் அடிப்படையில், ஓர் அட்டவணையில் குறிக்கப்படுகிறது. மேலும் கற்பித்தல் செயல்முறை ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.

  • பின்னூட்டம்: (Feedback)

மேற்பார்வையாளர் அல்லது கண்காணிப்பு ஆசிரியர் மதிப்பீடுகளைக் கொண்டு பின்னூட்டம் அளிக்கிறார். திறன் திருப்தியாக கையாளப்படவில்லை எனில் மறுதிட்டமிடலுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

  • மறுதிட்டமிடல்: (Re-planning)

அதே பாடக்கருத்து மற்றும் திறனைக் கொண்டு, பின்னூட்டத்திற்கு ஏற்ப குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் பாடநிகழ்வு அமைக்கப்படுகிறது.

  • மறுகற்பித்தல்: (Re-teaching)

திருத்திய தயாரிப்புகளுடன் வேறொரு ஒப்பிடக்கூடிய மாணவக்குழுவிற்கு கற்பிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

  • மறுபின்னூட்டம்: (Re-feedback )

மறுகற்பித்தலை விமர்சித்து மறுபின்னூட்டம் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் கற்பிக்கும் திறனில் சிறந்தோங்கும் வரை இந்த சுழற்சி தொடர்கிறது.

தேவை மற்றும் முக்கியத்துவம் தொகு

கற்றல்-கற்பித்தல் செயல்முறையில் ஒரு குறிப்பிட்ட திறனை மட்டும் தனித்துப் பயன்படுத்த முடியாது. அதே சமயம் ஒரு ஆசிரியர் எல்லா திறன்களிலும் சிறந்து விளங்க வேண்டுமெனில், அவை ஒவ்வொன்றாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு நுண்ணிலை கற்பித்தல் அவசியம். நுண்ணோக்கியில் பார்ப்பது போல ஒவ்வொரு திறனும் கவனிக்கப்படுகிறது. "எதைக்கற்பித்தல்" என்பதை விட "எப்படிக் கற்பித்தல்" வேண்டும் என்பதே இதன் அடிப்படையாகும். ஆசிரியருக்கு நேரிடையாக இயற்கைச் சூழலில் பயிற்சியை தொடங்காமல், சிக்கல் இல்லாத செயற்கைச் சூழ்நிலை அமைத்துக் கொடுக்கப்படுவது இதன் சிறப்பாகும்.

நிறைகள் தொகு

  1. புதிய திறன்களில் பயிற்சி பெறவும், குறிப்பிட்ட திறனில் சிறந்தோங்கவும் உதவுகிறது.
  2. வகுப்பறையில் கற்பிக்கும் முறையை எளிமையாக்குகிறது.
  3. இதன் மூலம் ஆசிரியருக்கு தன்னம்பிக்கை வளர்கிறது.
  4. உடனடி பின்னூட்டம் / விமர்சனம் அளிக்கப்படுகிறது.
  5. கற்பித்தல் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது.

குறைகள் தொகு

  1. கற்பித்தலின் ஒட்டுமொத்த சூழலை பொருட்படுத்தவில்லை.
  2. கருத்து அடிப்படையில் அமையாமல் திறன் அடிப்படை பயிற்சியாக உள்ளது.
  3. பயிற்று நிறுவனங்களில் நுண்ணிலை கற்பித்தல் ஆய்வகம் விலையுயர்ந்தது.

துணைநூல்கள் தொகு

  • 1. Jagadish Prasad Sharma (2009), Teacher Education, Centrum Press, New Delhi.
  • 2. V.K.Maheshwari, Suraksha Bansal & S.C.Rawat, Essentials of Educational Technology, R.Lall Book Depot, Meerat.
  • 3. A.H.Komala (2009), Educational Activities, Saratha Pathippagam, Chennai.
  • 4. A.Rambabu & S.Dandapani (2007), Essentials of Micro Teaching, Neelkamal Publications Pvt. Ltd., Hyderabad.
  • 5. Vanaja.M & Rajasekar.S (2006), Educational Technology Computer Education, Neelkamal Publications Pvt. Ltd., Hyderabad.
  • 6. Y.K.Singh & Archnesh Sharma (2004), Micro Teaching, APH Publishing Corporation, New Delhi.
  • 7. S.K.Mangal, Teaching of Mathematics, Tandon Publications, Ludhiana.
  • 8. R.A.Sharma (2005), Essentials of Educational Technology, R.Lall Book Depot, Meerut.
  • 9. Shaik Mowla (2004), Techniques of Teaching English, Neelkamal Publications Pvt. Ltd., Hyderabad.
  • 10. Anice James (2005), Teaching of Mathematics, Neelkamal Publications Pvt. Ltd., Hyderabad.
  • 11. வி.நடராஜன் (2004), கணிதம் கற்பிக்கும் முறைகள், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.
  • 12. அ.பன்னீர் செல்வம் (1994), இயற்பியல் கற்பிக்கும் முறைகள், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.
  • 13. கே.ராஜம்மாள் (2005), உயிரியல் கற்பிக்கும் முறைகள், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.
  • 14. ஆர்.திருஞானசம்பந்தம் (2005), வரலாறு கற்பிக்கும் முறைகள், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணிலை_கற்பித்தல்&oldid=2366267" இலிருந்து மீள்விக்கப்பட்டது