இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்

(ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர் பல்கலைக்கழகம் (Leland Stanford, Jr. University) அல்லது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். இது கலிபோர்னியாவில் பாலோ ஆல்ட்டோ என்னும் பகுதிக்கு அருகே உள்ள இசுட்டான்போர்டு என்னும் ஊரில் 8,180-ஏக்கர் (3,310 எக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ள பல்கலைக்கழகம். இவ்விடம் வடமேற்கு சிலிக்கான் பள்ளத்தாக்கில், சான் ஒசே (San Jose) நகரத்துக்கு வடமேற்கில் ஏறத்தாழ 32 கி.மீ தொலைவிலும், சான் பிரான்சிசிக்கோ நகரத்துக்குத் தென்கிழக்கே 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது[6]

இலேலண்டு இசுடான்போர்டு சூனியர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைDie Luft der Freiheit weht
"விடுதலைக் காற்று வீசுகின்றது" (செருமன்)[1]
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1891[2]
நிதிக் கொடை$17.2 பில்லியன்[3]
தலைவர்சான் எல். என்னிசி
கல்வி பணியாளர்
1,807[4]
பட்ட மாணவர்கள்6,689[5]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,201[5]
அமைவிடம்
இசுட்டான்போர்டு (கலிபோர்னியா)
, ,
வளாகம்புறநகரம், 8,180 ஏக்கர் (33.1 கிமீஏ)
விளையாட்டுப்பெயர்இசுடான்போர்டு கார்டினல்
தடகள விளையாட்டுகள்என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு பாக்-10
நற்பேறு சின்னம்இசுட்டான்போர்டு மரம்
இணையதளம்Stanford.edu

கலிபோர்னியாவைச் சேர்ந்த இருப்புப்பாதை நிறுவன பெரும்பண முதலாளியும் அரசியலாளரும் ஆன இலேலண்டு இசுட்டான்போர்டும் அவர் மனைவி சேய்ன் இலாத்ரோப்பு இசுட்டான்போர்டு என்பாரும் சேர்ந்து 1891 இல் இப்பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள். இவர்களுடைய மகன் தைபாய்டு நோயில் தன் 16 ஆம் அகவை நிரம்ப இரண்டு மாதம் இருக்கும் முன்பாக இறந்து போனதினால் அவர் நினைவாக இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர் என தன் மகனின் நினைவாக பெயரிட்டு இப்பல்கலைக்கழகத்தை நிறுவினர். இப்பல்கலைக்கழகம் ஆண்-பெண் இருபாலாருக்குமான கல்வி நிறுவனமாகவும், சமயப் பாகுபாடுகள் பாராட்டாத கல்வி நிறுவனமாகவும் தொடங்கினார்கள். 1893 இல் தந்தரிலேலண்டு இசுட்டான்போர்டு இறந்து போகவும், 1906 ஆம் ஆண்டு சான் பிரான்சிசிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் பல்கலைக்கழகத்துக்குப் பணமுடை ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தின் முதல்வர் (புரவோசிட்டு, Provost) பிரடெரிக்கு தெர்மன் (Frederick Terman) பேராசிரியர்களையும், மேற்பட்டப்படிப்பு மாணவர்களையும் ஊக்குவித்து தொழில்முனைவோராக இருக்கச்செய்து தன்னிறைவு எய்தும் பல்கலைக்கழகமாக மலர உதவினார். இதன் விளைவாய்ப் பின்னாளில் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் தொழில்முனைவோர் செறிவாக வாழும் உயர்தொழிநுட்பம் மிகுந்த இடம் உருவானது. 1970 ஆம் ஆண்டளவில் இசுட்டான்போர்டு நேர்ப்பாதை அணுமுடுக்கி (SLAC) அமைப்பை நிறுவினர். இது அர்ப்பாநெட்டு என்னும் முதலில் தோன்றிய சிறுபொதி தகவல் பரிமாற்ற வலையின் நான்கு புள்ளிகளில் ஒன்றாக இயங்கியது. இவ்வாய்ப்புகளின் பயனாய் இப் பல்கலைக்கழகம் முக்கியமான ஆய்வுநிலைப் பல்கலைக்கழகமாய் கணினி அறிவியல், கணக்கு, இயற்கை அறிவியல், வாழ்வியல் அறிவியல் முதலான துறைகளில் முன்னணியில் நிற்கும் பல்கலைக்கழகமாய் வளர்ந்தது.

விளையாட்டு

தொகு

இங்கு 34 விளையாட்டுக் குழுக்கள் உள்ளன. இவை என்.சி.ஏ.ஏ போட்டிகளில் பங்கெடுக்கின்றன. இந்தப் போட்டிகளில் 104 முறை வாகையர் பட்டம் பெற்றுள்ளனர்.[7][8] இங்குள்ள தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். 1912 ஆம் ஆண்டில் தொடங்கி, இன்று வரை மொத்தம் 244 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இவற்றில் 129 தங்கப் பதக்கங்களும் அடக்கம் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலேயே அதிகப் பதக்கங்கள் பெற்றது இதுவே. [9]

வளாகம்

தொகு

இது 8,180-ஏக்கர் (3,310 ha) பரப்பளவில், சான் பிரான்சிசுக்கோ பகுதியில் அமைந்துள்ளது. முதன்மை வளாகம், பாலோ ஆல்டோ பகுதிக்கு அருகில் உள்ளது. இதற்கு தொலைதூர வளாகங்களும் உள்ளன,

வளாகத்தினுள் அருங்காட்சியகம், கவின் கலை மையம், ஸ்டான்போர்டு நினைவு தேவாலயம், அரிசோனா தோட்டம், கிரீன் நூலகம், உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கன.

வளாகத்தினுள் பணியாளர்க்கு தனியான குடியிருப்புகள் உள்ளன.

ஜாஸ்பர் ரிட்ஜ் பயாலஜிக்கல் பிரிசர்வ், என்னும் உயிரியல் பூங்கா வளாகத்தின் தெற்கே உள்ளது. இதை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவர். 1200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. நேசனல் ஆஃசிலரேட்டர் ஆய்வகம், பல்கலையின் ஆற்றல் துறைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது 426 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. [10] ஹாப்கின்ஸ் மரைன் ஸ்டேசன், கலிபோர்னியாவில் உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தொலைதூர வளாகங்கள் பல்வேறு நாடுகளில் உள்ளன. இது பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சீனாவில் சிறு வளாகத்தைக் கட்டியிருக்கிறது.

நிர்வாகம்

தொகு

இதை 35 பேர் கொண்ட தனியார் குழு நிர்வகிக்கின்றது. ஒவ்வொரு குழு உறுப்பினரும், ஐந்து ஆண்டுகள் பணியில் இருப்பார். ஒருவரின் பணிக்காலம் முடிந்ததும், மற்ற உறுப்பினர்கள் புதிய உறுப்பினரை, வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்வர். இந்த குழுவினால் பல்கலைக்கழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்களின் பணியை மேற்பார்வையிடுவது, நிர்வாக, நிதி வேலைகளை கவனிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வார். கலிபோர்னியா அரசு சட்டத்தில் இந்த பல்கலைக்கு விலக்கு உண்டு. நிதி தொடர்பான செயல்பாடுகளில் வரி கட்டத் தேவையில்லை. [11]

கல்வி

தொகு

இது பெரிய ஆய்வுப் பல்கலைக்கழகம். இங்கு தங்கிப் படிக்கும் வசதி உண்டு. மேற்கத்திய பள்ளி, கல்லூரிகளின் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது.[12] இங்கு பொதுப் பிரிவில் 27 துறைகளும், பொறியியல் பிரிவில் ஒன்பது துறைகளும், புவிப் பிரிவில் நான்கு துறைகளும் உள்ளன. இவற்றில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சட்டம், மருத்துவம், வணிகம் ஆகிய துறைகளில் முதுநிலைப் படிப்புகள் மட்டும் வழங்குகின்றனர்.[13]

ஆசிரியர்கள்

தொகு

இங்குள்ள ஆசிரியர்கள் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர்.

  • இவர்களில் 22 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்[14]
  • 152 பேர் அமெரிக்க அறிவியல் கழகத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • 95 பேர் தேசிய பொறியியல் அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • 66 பேர் மருத்துவக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • 268 பேர், அமெரிக்க கலை, அறிவியல் கழகத்தில் உறுப்பினர் ஆவர்.
  • 18 பேர், தேசிய அறிவியல் பதக்கம் பெற்றுள்ளனர்.
  • 2 பேர், தேசிய தொழில்நுட்பப் பதக்கம் பெற்றுள்ளனர்.
  • 51 பேர், அமெரிக்க மெய்யியல் கழகத்தின் உறுப்பினர்
  • 56 பேர், அமெரிக்க இயற்பியல் சமூகத்தின் உறுப்பினர்
  • 4 பேர் புலிட்சர் விருதினைப் பெற்றுள்ளனர்.

நூலகம்

தொகு
 
கிரீன் நூலகம்

இங்கு 2,60,000 அரிய நூல்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் மின்னூல்களும், 1.5 மில்லியன் ஒலிக்கோப்புகளும், மற்றும் பல வகை ஆவணங்களும் உள்ளன. இங்குள்ளவற்றில் முதன்மையானது கிரீன் நூலகம். இங்கு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேயேர் நூலகத்தில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆசிய நூல்கள் உள்ளன.

மாணவர்கள்

தொகு

பெரும்பாலானோர், இங்குள்ள விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். இவர்கள் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் ஆவர். வேற்றுநாட்டு மாணவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். மாணவர்கள் ஏறத்தாழ 650 குழுக்களைக் கொண்டுள்ளனர். இவை, சமூகம், தன்னார்வம், இசை, பண்பாடு என வெவேறு வகையானவை. ஸ்டான்போர்டு டெய்லி என்ற மாணவர் இதழ் வெளியாகிறது. இவை தவிர, பாடம் தொடர்பான குழுக்களும் உண்டு. சூரிய வாகனத் திட்டம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் வழிபாடு நடத்த தேவாலயம் உள்ளது.


மேற்கோள்கள்

தொகு
  1. Casper, Gerhard. "Die Luft der Freiheit weht - On and Off" (1995-10-05).
  2. "Stanford University History". Stanford University. Archived from the original on 2008-01-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-26.
  3. "Stanford Management Company report issued". Stanford News Service. September 28 2007 இம் மூலத்தில் இருந்து 2008-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080529050310/http://news-service.stanford.edu/pr/2007/pr-smc-100307.html. பார்த்த நாள்: 2007-09-30. 
  4. "Stanford Facts 2007 (The Stanford Faculty)". Stanford University. Archived from the original on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2007-04-26.
  5. 5.0 5.1 "Stanford Facts 2007". Stanford University. Archived from the original on 2008-07-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-26.
  6. "Virtual Tours : Stanford University". பார்க்கப்பட்ட நாள் 2009-02-23.
  7. "NCAA Championships".
  8. Eddie Timanus (June 22, 2010). "Stanford locks up Directors' Cup award for 16th consecutive season". USA Today. http://www.usatoday.com/sports/college/2010-06-22-stanford-directors-cup_N.htm. 
  9. "Stanford Athletes Complete Olympic Action". Stanford Athletics. Archived from the original on மே 21, 2013. பார்க்கப்பட்ட நாள் November 11, 2013.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. "About SLAC". பார்க்கப்பட்ட நாள் April 4, 2011.
  11. Grodin, Joseph R.; Massey, Calvin R.; Cunningham, Richard B. (1993). The California State Constitution: A Reference Guide. Westport, Connecticut: Greenwood Press. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-27228-X.
  12. "Stanford Bulletin—Accreditation". Stanford University Registrar's Office. பார்க்கப்பட்ட நாள் November 27, 2008.
  13. Departments by School: Stanford University பரணிடப்பட்டது 2013-11-10 at the வந்தவழி இயந்திரம். Stanford.edu. Retrieved on July 15, 2013.
  14. "Stanford Facts 2013: Faculty". Stanford University. Archived from the original on 2011-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-12-03.

வெளி இணைப்புக்கள்

தொகு