நூருன்னிசா காதுன் வித்யாவிநோதினி

வங்காள தேச எழுத்தாளர்

நூருன்னிசா காதுன் வித்யாவிநோதினி (Nurunnessa Khatun Vidyavinodini) வங்காளதேச எழுத்தாளராவார். வங்காளத்தில் வெளியிடப்பட்ட முதல் இசுலாமியப் பெண் நாவலாசிரியராக இவர் கருதப்படுகிறார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

நூருன்னிசா 1894 ஆம் ஆண்டு பிரித்தானியப் பேர்ரரசின் , பெங்கால் மாகாணம் , முர்சிதாபாத்தின் சாப்பூர் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கொண்டகர் அபீபுசு சோபன் என்பதாகும். இவருடைய குடும்பம் பழமைவாத இசுலாமியக் குடும்பமாகும். பெண்கள் கல்வி கற்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை. திருமணமான பிறகே இவர் தனது கல்வியை கணவனும் கொல்கத்தாவில் ஒரு முக்கிய வழக்கறிஞருமான குவாசி கோலாம் முகமதுவின் தீவிர ஆதரவோடு ஆரம்பித்தார். ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் நூருன்னிசா பயின்றார். [3] இவரும் இவரது சமகால பெண் எழுத்தாளர்களும் அமதர் மகால் (எங்கள் வீடு) என்ற தலைப்பில் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வரம்புகள் பற்றி பேசினார்கள். [4]

தொழில் தொகு

நூருன்னிசாவின் கணவர் குவாசி கோலாம் முகமது ஒரு வழக்கறிஞர் என்பதால் வேலையின் காரணமாக நிறையப் பயணங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இதன் விளைவாக வெளி உலகத்தைப் பற்றிய நூருன்னிசாவின் அறிவு அதிகரித்தது. உலகத்தைப் பறறிய இவரின் பார்வையை விரிவாக்கவும் உதவியது. இப் பயணங்கள் நூருன்னிசாவின் எழுத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது கவிதையான அக்பானையும்-கீதி போயிசாக் மாதத்தின் மாதாந்திர பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

1923 ஆம் ஆண்டு இவரது முதல் நாவலான சுவப்னா-டிராசுடா சிறீராம்பூரில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த நாவல் ஒரு முசுலீம் குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றியதாகும். நூருன்னிசாவின் இந்நாவல் அவருடைய இலக்கியப் படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

1924 ஆம் ஆண்டில் இவர் இயானோகி பாய் பா பரதே முசுலீம் பிரத்வா என்ற பெயரில் இந்தியாவில் உள்ள முசுலீம் முன்னோடிகளைப் பற்றி ஒரு வரலாற்று நாவலை எழுதினார். இதன் மையக் கருப்பொருள் தேபோகிரியின் ராசா ராமதாசு மற்றும் அலாவுதீன் கல்சியின் தளபதி யூசுப் கானின் மருமகளான இயானோகி பாயின் காதல் கதையாகும்.

1925 ஆம் ஆண்டில் சுய தியாகம் பற்றி ஆத்மதன் என்ற புத்தகத்தை நூருன்னிசா எழுதினார். உள்நாட்டு வாழ்க்கையின் சோகக் கதைகளை இதில் நூருன்னிசா கையாள்கிறார். இவருடைய பிற்கால படைப்புகளில் முக்கியமாக மனிதனின் கதாபாத்திரங்களை விட சமூக சூழலின் சித்தரிப்புகள் பிரதானமாக இருக்கும்.

1926 ஆம் ஆண்டில் இவர் வங்காளத்தில் முசுலீம்களின் வீரம் மற்றும் முசுலீம்களின் ஆட்சி என்ற தலைப்பில் ஒரு வரலாற்று புத்தகத்தை எழுதினார்.

1929 இல் நூருன்னிசா கிரந்தபாலி என்ற பெயரில் இவரது கூட்டுப் படைப்புகள் வெளியிடப்பட்டன. இவர் பாங்கியா முசுலிம் மகளிர் சங்கத்தின் (வங்காள முசுலிம் பெண்கள் சங்கம்) தலைவராக பணியாற்றினார். இலக்கியப் பங்களிப்பிற்காக நிகில் பாரத் பங்கா சாகித்ய சம்மேளனத்தால் இவருக்கு வித்யாவினோதினி என்ற பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் இவர் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் மூர்சிதாபாத்திலிருந்து 1952 ஆம் ஆண்டில் வெளியேறி நிரந்தரமாக குடியிருக்கும் இடமான பாக்கித்தானின் கிழக்கு வங்காளத்தின் பகுதியான டாக்காவுக்குச் சென்றார்.[3] நூருன்னிசா பெண்கள் உரிமை ஆர்வலராக இருந்தார். தாய்மார்கள் தங்கள் மகள்களின் கல்வியை உறுதி செய்யவேண்டும் என அழைத்தார்.

இறப்பு தொகு

1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 அன்று நூருன்னிசா வங்காள தேசத்தின் டாக்காவில் இறந்தார். [3] டாக்கா பல்கலைக்கழகம் சிறந்த கல்வி சாதனைக்காக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நூருன்னிசா காதுன் பித்தா-பினோதினி தங்கப் பதக்கத்தை வழங்குகிறது. [5] [6]

மேற்கோள்கள் தொகு

  1. Amin, S. N. (1996) (in en). The World of Muslim Women in Colonial Bengal, 1876-1939. https://books.google.com/books?id=VcAfpv6x0m4C&q=Nurunnessa+Khatun&pg=PA228. பார்த்த நாள்: 5 November 2017. 
  2. Haan, Francisca de (2013) (in en). Women's Activism: Global Perspectives from the 1890s to the Present. https://books.google.com/books?id=f5mrIppA9c4C&q=Nurunnessa+Khatun&pg=PA112. 
  3. 3.0 3.1 3.2 Ahmad, Wakil. "Vidyavinodini, Nurunnessa Khatun". Banglapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  4. Jayawardena, Kumari (in en). Embodied Violence: Communalising Women's Sexuality in South Asia. https://archive.org/details/isbn_9781856494489. 
  5. "Department of Biochemistry & Molecular Biology". Dalhousie University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  6. "Samina Luthfa". oxford.academia.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.