நேரு அறிக்கை

இந்திய விடுதலைப் போராட்டம்

நேரு அறிக்கை (Nehru Report) என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகு அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1928 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை.[1][2] மோதிலால் நேரு தலைமையிலான அனைத்து கட்சிக் குழு ஒன்று இவ்வறிக்கையைத் தயார் செய்தது.[3]

1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து ஆராய சைமன் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது. இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரமுள்ள இக்குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்ட இந்திய அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. சைமன் குழுவைப் புறக்கணித்து விட்டு அனைத்துக் கட்சி குழு ஒன்றை உருவாக்கி ஒரு போட்டி அறிக்கையைத் தயார் செய்தன. இக்குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். மோதிலால் நேரு தலைவராகவும் ஜவகர்லால் நேரு செயலாளராகவும் இருந்த இக்குழுவில் இரு முசுலிம்கள் உட்பட ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் (dominion status) வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்தியர்களுக்கு உரிமைப் பட்டியல் (bill of rights), அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாண்மை (supremacy of the constitution), மதசார்பற்ற கூட்டாட்சி அமைப்பு முறை, மொழிவாரியாக மாநிலங்கள் போன்ற பரிந்துரைகள் அவ்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

சைமன் குழு வெளியிட்ட அறிக்கையில் மேலாட்சி அங்கீகாரம் பரிந்துரை செய்யப்படவில்லை. நேரு அறிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான அதிகார மாற்றங்களையே அது பரிந்துரைத்தது. இவ்விரு அறிக்கைகளும் வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரு_அறிக்கை&oldid=3101680" இருந்து மீள்விக்கப்பட்டது