ந. சி. கந்தையா பிள்ளை
ந. சி. கந்தையா பிள்ளை (Na. Ci.Kantaiyappillai, 1893 - 1967) தமிழிலக்கியத் துறையில் சிறப்பாக செயலாற்றியவர். எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் தமிழ் இலக்கியங்களை வழங்கினார்.
ந. சி. கந்தையா பிள்ளை | |
---|---|
பிறப்பு | 1893 கந்தரோடை |
இறப்பு | 1967 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஆசிரியர்,ஈழத்து எழுத்தாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுந. சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.
சில காலம் மலேயாவில், பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
தமிழ் ஆராய்ச்சி
தொகுதமிழ் ஆர்வம் பெற்ற இவர், தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆகியவற்றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை ஆராயும் முயற்சியிலும் ஈடுபட்டார். தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தறிந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:
- அகத்தியர்
- அகநானூறு
- அறிவு மாலை
- அறிவுக் கட்டுரைகள்
- அறிவுரைக் கோவை
- ஆதி உயிர்கள்
- ஆதி மனிதன்
- ஆரியத்தால் விளைந்த கேடு
- ஆரியர் தமிழர் கலப்பு
- ஆரியர் வேதங்கள்
- இந்து சமய வரலாறு
- இராபின்சன் குரூசோ
- இராமாயணம் நடந்த கதையா?
- உங்களுக்குத் தெரியுமா
- உலக அறிவியல் நூல்
- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
- கலிங்கத்துப் பரணி
- கலித்தொகை
- கலிவர் யாத்திரை
- காலக்குறிப்பு அகராதி
- சிந்துவெளி நாகரிகம்
- சிந்துவெளித் தமிழர்
- சிவவழிபாடு
- சிவன்
- செந்தமிழ் அகராதி
- சைவ சமய வரலாறு
- தமிழ் ஆராய்ச்சி
- தமிழ் இந்தியா
- தமிழ் இந்தியா
- தமிழ் இலக்கிய அகராதி
- தமிழ் பழமையும் புதுமையும்
- தமிழ் விளக்கம்
- தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
- தமிழ்ப் புலவர் அகராதி
- தமிழ்மொழி
- தமிழகம்
- தமிழகம்
- தமிழர் சமயம் எது?
- தமிழர் சரித்திரம்
- தமிழர் நாகரிகம்
- தமிழர் பண்பாடு
- தமிழர் யார்?
- தமிழர் வரலாறு
- திராவிட இந்தியா
- திராவிட நாகரிகம்
- திராவிட மொழிகளும் இந்தியும்
- திராவிடம் என்றால் என்ன?
- திருக்குறள் அகராதி
- திருக்குறள்
- திருவள்ளுவர்
- தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
- நமது தாய்மொழி
- நமது நாடு
- நமது மொழி
- நீதிநெறி விளக்கம்
- நூலகங்கள்
- பத்துப்பாட்டு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- பாம்பு வணக்கம்
- புரோகிதர் ஆட்சி
- புறப்பொருள் விளக்கம்
- பெண்கள் உலகம்
- பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
- பெண்கள் புரட்சி
- பொது அறிவு வினா விடை
- பொது அறிவு
- மரணத்தின் பின்
- மறைந்த நாகரிகம்
- மனிதன் எப்படித் தோன்றினான்?
- முச்சங்கங்கள்
- முச்சங்கம்
- வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
- விறலிவிடுதூது
ஆகியன.
தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காகத் தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன.
தமிழ் அகராதிகள்
தொகுதமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
மறைவு
தொகுஇவர் தனது 74 வது வயதில் 1967 இல் இலங்கையில் காலமானார்.