பக்கிரியா பிள்ளை

பக்கிரியா பிள்ளை (1866 - 1937) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். இவர் கொன்னக்கோல் இசைக் கலையில் சிறந்து விளங்கினார். தவில், மிருதங்கம் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவர்; நட்டுவாங்கம், வாய்ப்பாட்டுக் கலைகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டியவர்.

ஆரம்ப வாழ்க்கை

தொகு

பக்கிரியா பிள்ளை 1866 ஆம் ஆண்டு, மன்னார்குடியில் பிறந்தார். பெற்றோர்: சொக்கலிங்க நட்டுவனார் - பார்வதி அம்மாள். நாகூர் ஆண்டவரின் அருளாசியால் தம் மகன் தமக்குப் பிறந்ததாக பெற்றோர் கருதியதால், இவருக்கு பக்கிரி என பெயர் வைத்தனர். பக்கிரியா பிள்ளைக்கு அவரின் தந்தை நட்டுவாங்கம் பயிற்றுவித்தார்.

இசை வாழ்க்கை

தொகு

தனது 18ஆவது வயதில் சுவர்ண தவில்காரர் என்பவரிடம் தவில் கற்கத் தொடங்கி, ஓராண்டு காலத்தில் சிறந்த வாசிப்பினை தரத் தொடங்கினார். அதன்பிறகு நாதசுரக் கலைஞர் மன்னார்குடி சின்ன பக்கிரி பிள்ளையின் குழுவில் இணைந்தார்.

சின்ன பக்கிரி பிள்ளையுடன் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக, அவரின் குழுவிலிருந்து பக்கிரியா பிள்ளை விலகினார். அதன்பிறகு வழுவூர் முத்துவீர் பிள்ளை எனும் தவில் கலைஞருடன் நிகழ்ந்த சவால் போட்டியொன்றில் தோல்வியடைந்தார். இக்காரணங்களினால், தவில் வாசிப்பினை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

அதன்பிறகு மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையின் ஆலோசனையின்படி, கடம் கலைஞர் பழனி கிருஷ்ண ஐயரிடம் மாணவராகச் சேர்ந்து மிருதங்கம் கற்கத் தொடங்கினார். ஆனால் பக்கிரியாப் பிள்ளையின் குரல்வளத்தால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ண ஐயர், அவருக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். இக்காலகட்டத்தில் மனவருத்தங்களின் காரணமாக, தற்கொலை முயற்சியினை மேற்கொண்டார் பக்கிரியாப் பிள்ளை. இந்நிலையில் கோவிந்தசாமி பிள்ளையின் தலையீட்டால் ஜலதரங்கம் ராமனையா செட்டி என்பவரின் மூலமாக காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் அறிமுகம் பக்கிரியாப் பிள்ளைக்குக் கிடைத்தது.

இருவருக்குமிடையான உறவு நன்கு வலுப்பெற்று, 1910 ஆம் ஆண்டு வாக்கில் நாயனப் பிள்ளையின் குழுவில் கொன்னக்கோல் கலைஞராக இடம்பிடித்தார் பக்கிரியா பிள்ளை. நாயனப் பிள்ளையின் மறைவுவரை அக்குழுவில் தொடர்ந்து இருந்தார்.

மன்னார்குடியில் அருணகிரிநாதருக்கென்று மடம் ஒன்றினை நிறுவி, தாமே சமயச் சடங்குகளை செய்து வந்தார்.

கிடைத்த பாராட்டுகள்

தொகு
  • இவரை லயபிரம்மம் என கோவிந்தசாமி பிள்ளை அழைத்தார்.
  • லயசுரங்கம் என பிற கலைஞர்கள் பாராட்டினர்.

மறைவு

தொகு

இவர் 1937 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மன்னார்குடியில் காலமானார்.

உசாத்துணை

தொகு

Forgotten master of a vanishing art - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கிரியா_பிள்ளை&oldid=1707129" இலிருந்து மீள்விக்கப்பட்டது