படிக்காசுப்புலவர்
படிக்காசுப்புலவர் என்பவர் தண்டலையார் சதகம் என்னும் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர். இந்தத் தண்டலையார் சதகத்தைப் 'பழமொழி விளக்கம்' என்றும் சுட்டுவர். நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள் பல; அவற்றுள் நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இந்நூல் 'பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்' என்று பெயர்பெற்றது. அந்நூலின் முதல் பழமொழியாகத் திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும் என்ற பழமொழியும் இறுதிப் பழமொழியாகத் பித்தளைக்கும் நாற்றம் இயற்கை என்ற பழமொழியும் அமைந்துள்ளது. தொண்டைமண்டலச் சதகம், உமைபாகர் பதிகம் ஆகிய நூல்களும் இவருடையதே.[1]
சதகம்:
'சதம்' என்றால் நூறு ஆகும்; 'சதகம்' என்றால் நூறுபாடல்களால் ஆன இலக்கியம் என்றுபொருள். சதம்> சதகம்.
வரலாறு
தொகுபடிக்காசுப்புலவர் தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். இவர் தொண்டைமண்டலத்தில் உள்ள 'பொற்களத்தூர்' என்னும் ஊரில் பிறந்தவர்; இது 'தென்களத்தூர்' என்றும் வழங்கப்பெறும். இவர் செங்குந்தர் மரபிலே தோன்றியவர். இளமையிலேயே நன்முறையில் கல்விகற்றுப் பல தமிழ்நூல்களில் புலமை பெற்று விளங்கினார். இவர் அருட்கவி ஆதலால் இவரின் வாக்குத் தெய்வ வாக்காக மதிக்கப்பெற்றது.
அக்காலத்தில் தொண்டைமண்டல வல்ல நகரத்தில் சீரும் சிறப்புமுடைய செல்வராய் விளங்கியவர் 'காளத்தி' வள்ளல் ஆவார்; அவரைப்பாடி அவரிடமிருந்து ஏராளமான பரிசுகள் பெற்றுச் சிறப்புற்று இருந்தார்.
பின்னர் 'மாவண்டூர்' எனும் ஊரில் சிறப்பாய் வாழ்ந்திருந்த செல்வர் 'கறுப்ப முதலியார்' என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கித் 'தொண்டை மண்டல சதகம்'[2] [3]என்னும் நூலைப் படைத்துக் கற்றுவல்லோர் நிறைந்த அவையினில் அரங்கேற்றினார். அதன் சிறப்பில் மனம் பறிகொடுத்த முதலியார் அவருக்குப் பொன்னும் பொருளும் வழங்கிச் சிறப்பித்தார்.
பெயர்க் காரணம்
தொகுஅதன் பின்னர்ப் பல தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத் தில்லை என்னும் பெயர்பெற்ற சிதம்பரத்திற்கு வந்தார். அங்குப் பொற்சபையில் நடமாடும் நடராசப் பெருமானாகிய கூத்தப்பிரானை மனமுருகித் துதிக்கும்போது சபாநாயகர், பஞ்சாட்சரப்படி என வழங்கப்பெறும் ஐந்தெழுத்துப்படியில் பொற்காசுவைத்து அருளினார். இறைவன் அளித்த பொற்காசுகளை, (ஐந்தெழுத்துப்) படியினில் வைத்துப் பெற்றதனால், அன்றுமுதல் அவர் 'படிக்காசுப்புலவர்' என் உலகோரால் அழைக்கப்பெற்றார்.
சேதுபதிமன்னர்
தொகுஅதன்பின் இராமநாதபுரம் சென்று, இரகுநாதசேதுபதி மன்னர் அவர்களைக்கண்டு, அவரைப்பாடிப் பரிசில்பெற்றுச் சிறிது காலம் அங்கிருந்தார்.
வள்ளல்சீதக்காதி
தொகுபின் அக்காலத்தில் வள்ளல் தன்மையில் மிகச்சிறந்து விளங்கிய வள்ளல் சீதக்காதி அவர்களைக் கீழக்கரை சென்று கண்டு அவரைப்பாடிச் சிறப்புக்கள் பல பெற்றார். வள்ளல்சீதக்காதி இசுலாம் சமயத்தவராயினும் பிறமதங்களையும் மதித்துப்போற்றிய பெருந்தகை; இன்னமதத்தைச் சார்ந்தவர் என்று பாராது, எல்லாமதத்தினரையும் மனிதர்களாக மதித்துப்பார்த்து அவர்களுக்குப் பொருள் வழங்கிஉதவிய கொடையாளர். அவரோடு பெரும் நட்புக்கொண்டு இருந்தவர் படிக்காசுப்புலவர்; சீதக்காதி இறந்தபோது அவர்மேல் இவர்பாடிய பாடல்கள் நெஞ்சை நெகிழ்விப்பனவாம்.
தண்டலை
தொகுபின்னர் அவர் திருச்செந்தூர் சென்று அங்கு முருகப்பெருமானை வணங்கிப் பின்னர் வடதிசைநோக்கித் தம் பயணத்தைத் தொடங்கித் 'தண்டலை' எனும் தலத்தினை வந்தடைந்தார். தண்டலை என்பது 'தி்ருத்தண்டலை நீணெறி' எனவும் வழங்கப்பெறும். அங்கிருந்த அன்பர்களின் வேண்டுகோளின்படி இந்தத் 'தண்டலையார் சதகம்' எனும் அற்புத இலக்கியத்தைப் படைத்தருளினார். பின்னர் இந்தநூல் அங்கிருந்த சந்நிதியில் அரங்கேற்றப் பெற்றது.
தருமபுரம்
தொகுஅங்கே சில காலம் அன்பர் ஆதரவில் இருந்த படிக்காசுப்புலவர் பின்னர்த் தருமபுரம் சென்று அங்குள்ள தருமபுர ஆதீனத்து ஞானாசிரியரால் ஆட்கொள்ளப்பெற்று ஞானதீக்கையும், சந்நியாசமும் அருளப்பெற்றார்; அன்று முதல் அவர் 'படிக்காசுத்தம்பிரான்' என அழைக்கப்பெற்றார். பின்னர்ப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர்பெற்ற வைத்தீசுவரன் கோயில் சென்று, அக்கோயிற்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழும்நாளில் அவர் 'வேளூர்க்கலம்பகம்' எனும் கலம்பகநூலைப் படைத்து, அக்கோயிலிலேயே அதனை அரங்கேற்றித் தமிழ் உலகுக்கு வளம் சேர்த்தார்.
மீண்டும் தில்லையில்
தொகுஇறுதிக்காலத்தில் தமக்கு முன்னர்ப் படிக்காசு அளித்து உதவிய தில்லைப்பெருமானின் திருவடியையே தினந்தோறும் தரிசிக்கவேண்டுமென்ற அவாவினால், அவர் மீண்டும் தில்லையை அடைந்து அங்கே ஒரு திருமடம் அமைத்துத் தினந்தோறும் நடராசப் பெருமானைத் தரிசித்து வரும்போது, அப்பெருமானும் நம் புலவருக்கு நாளும் பொற்காசு மீண்டும் படியில் வைத்து அருளி வந்தார். இவ்விதம் இறைவனிடம் 'பொருளும், அருளும்' பெற்று நல்வாழ்வு வாழ்ந்த படிக்காசுப்புலவர், மாணாக்கர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கும் நல்லாசிரியப்பணியும் செய்துவந்தார். பின்னர்க் 'கோயில்' எனும் சிறப்பினைப் பெற்ற சிதம்பரத்திலேயே இறுதிநாள் வரை வாழ்ந்திருந்து இறுதியில் கூத்தப்பெருமானின் திருவடியடைந்தார் படிக்காசுப்புலவர். இதுவே அவர்பற்றி மரபுவழியாக நமக்குக் கிடைக்கும் வரலாறாகும்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://archive.org/details/padikasupulavar-kaikolar/mode/1up
- ↑ A Primer of Tamil Literature by M. S. Purnalingam Pillai Page No. 176
- ↑ "வெற்றிகளைக் குவிக்கும் விஜயா நித்யா வழிபாடு". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.