பண்ணத்தி
பண்ணத்தி என்பது தொல்காப்பியம் பகுத்துக் காட்டும் ஏழு வகையான செய்யுள் பாங்குகளில் ஒன்று. [1][2] இது செய்யுளுக்குள் இருக்கும் விடுகதை போன்ற பொருள் குறிப்பு என விளக்கப்பட்டுள்ளது. இது பொருளை உய்த்துணர வைக்கும் பாட்டாக வரும்.
கொன்றை வேய்ந்த செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே [3]
என்னும் பாடலைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் பண்ணத்தி வகைக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார். இதில் ‘கொன்றை வேய்ந்த செல்வன்’ என்னும் தொடர் பாட்டிடை வைத்த குறிப்பு. இந்தத் தொடர் கொன்றைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானைக் குறிக்கும். [4] இது பிசி என்னும் விடுகதை போல இருக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது. [5]
பிசி, பண்ணத்தி ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு
பிசி (விடுகதை) | பண்ணத்தி |
---|---|
வினாப்பாடலுக்கு விடை என்னும் பாங்கில் இருக்கும் | பாட்டில் குறிப்பால் உணர்த்தும் ஒரு தொடராக இருக்கும் |
பேச்சு வழக்கில் வரும். (செய்தி இதழ்களில் புதிர் போட்டு விடுவிக்கும் உரைநடைத் தொடர்களாக இக்காலத்தில் பதிவேறியுள்ளன) | செய்யுள் வழக்கில் வரும் |
இந்தப் பண்ணத்திப் பொருட்குறிப்பபு பன்னிரண்டு அடிக்கு மிகாத அடிகள் கொண்ட பாட்டில் வரும். அதற்கு மேற்பட்ட அடிகள் கொண்ட பாட்டில் வரினும் கடிந்து நீக்கப்படாது என்கிறது தொல்காப்பியம். [6]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑
'எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்,
அடி வரை இல்லன ஆறு' என மொழிப 3-466 தொல்காப்பியம், செய்யுளியல் - ↑
அவைதாம்,
நூலினான, உரையினான,
நொடியொடு புணர்ந்த பிசியினான,
ஏது நுதலிய முதுமொழியான,
மறை மொழி கிளந்த மந்திரத்தான,
கூற்று இடை வைத்த குறிப்பினான 3-467 தொல்காப்பியம், செய்யுளியல் - ↑ கொன்றைவேந்தன்
- ↑
பாட்டிடைக் கலந்த பொருள ஆகி,
பாட்டின் இயல-பண்ணத்திய்யே 3-482 தொல்காப்பியம், செய்யுளியல் - ↑
அதுவேதானும் பிசியொடு மானும் 3-483 தொல்காப்பியம், செய்யுளியல்
- ↑
அடி நிமிர் கிளவி ஈர்-ஆறு ஆகும்;
அடி இகந்து வரினும் கடி வரை இன்றே 3-484 தொல்காப்பியம், செய்யுளியல்