பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்

மெய்கண்டான் மகா வித்தியாலயம் இலங்கையில் யாழ் மாவட்டத்தில் பண்ணாகம் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை.

அமைவும் தோற்றமும் தொகு

ஈழத்தின் வடகிழக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வலயத்தினுள் வலி மேற்கு பிரதேச சபையின் பிரிவுக்குட்பட்ட பண்ணாகம் என்னும் அழகிய கிராமத்தில் இப் பாடசாலை அமைந்துள்ளது. முருகேசு கந்தையா என்பவரால் 1925 ஆம் ஆண்டு புரட்டாதி 4 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பாடசாலையின் முன்னே வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

”கற்றுணர்ந்தொழுகு” என்னும் மகுட வாக்கியத்தினை தன்னகத்தே உடையதாக இப் பாடசாலை விளங்குகின்றது.

பாடசாலையினை நிர்வகித்த நிரந்தர அதிபர்கள் தொகு

  1. வே. முருகேசு [கரணவாய்] 1925-1933
  2. க. சிற்றம்பலம் [கரவெட்டி] 1933-1941
  3. வீ. கணபதிப்பிள்ளை [வளலாய்] 1941-1943
  4. பொ. பொன்னம்பலம் [புன்னாலைக்கட்டுவன்] 1943-1944
  5. செ. ஸ்ரீநிவாசன் [பண்ணாகம்] 1945-1970
  6. (திருமதி) பரிமளம் சிவானந்தராசன் [காரைநகர்] 1970-1971[4 மாதங்கள்]
  7. வை. இராஜசுந்தரம் [தொல்புரம்] 1971-1974
  8. வ. ஆறுமுகராசா [சுதுமலை] 1974-1976
  9. மூ. நவரத்தினம் [சுழிபுரம்] 1977-1978
  10. ஆ. செல்லத்துரை [சித்தன்கேணி] 1979-1981
  11. வே. கனகநாயகம் [அளவெட்டி] 1981[7 மாதங்கள்]
  12. ப. சிவஞானசுப்பிரமணியம் [யாழ்ப்பாணம்] 1982-1983
  13. 1983-1985 காலப்பபகுதிகளில் சிரேஷ்ட ஆசிரியராக இருந்த திரு. விசுவலிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றினார்.
  14. க. முத்துக்கமாரசாமிசர்மா [பருத்தித்துறை] 1985 [சில வாரங்கள்]
  15. மு. அருளானந்தம் [தெல்லிப்பழை] 1985-1986
  16. ஆ. இராசநாயகம் [காரைநகர்] 1986-1989
  17. கா. நடராசா [சுழிபுரம்] 1990-2003
  18. வி. நடராசா [மாதகல்] 2004-2006
  19. க. சந்திரசேகரன் [அராலி] 2006 -2011
  20. சு. கணேசதாசன் (கொல்லங்கலட்டி) 2012 - 2014
  21. திருமதி .கணேசமூர்த்தி சுலபாமதி ( மூளாய் ) 2014 - இன்று வரை

பாடசாலையின் வளர்ச்சி தொகு

அமரர் முருகேசு கந்தையா என்பவரால் அவரது சொந்த நிலத்தில் கிடுகினால் வேயப்பட்ட மண் கட்டிடம் ஒன்றில் மெய்கண்டான் பாடசாலை என்ற பெயருடன் 04.09.1925 அன்று, அதிபர், 3ஆசிரியர்கள், 65 மாணவர்களை உள்ளடக்கி மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் 4ம்,5ம்,6ம் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. மு.கந்தையா அவர்கள் மெய்கண்டான் நிர்வாகத்தை இ.மாதவரிடம் ஒப்படைத்துவிட்டு மலேசியா சென்று அங்கு வாழும் ஊர்மக்களின் உதவியுடன் மலாயா சங்கம் அமைத்து முதல் 8 மாதங்களிற்குரிய ஆசிரியர் சம்பளத்தை வழங்கினார்.

1926 இல் அரச உதவியை பெறுவற்காக சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் இப்பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. 1930 இல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதே காலத்தில் 8ஆம் வகுப்பு வரை (J.S.C) வகுப்புக்கள் நடாத்த அரசு அனுமதியளித்தது. அடுத்த ஆண்டுகளில் க.பொ.த.சா வகுப்பிற்கான (ஆண்டு 10) அனுமதி கிடைக்கப்பெற்று 1937இல் பலர் சித்தி அடைந்தனர்.

1945ஆம் ஆண்டு தொடக்கம் 25 ஆண்டுகளாக அதிபராக சேவையாற்றிய செ.ஸ்ரீநிவாசன் அவர்களின் காலத்தில் பாடசாலை பல புதிய கட்டிடங்களின் வளர்ச்சி, பரீட்சைப் பெறுபேறுகளில் வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது.

1950ஆம் ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1957 இல் 680 மாணவர்கள், 23 ஆசிரியர்களை கொண்டதாக இப் பாடசாலை வளர்ச்சி பெற்றது.

1962 இல் மெய்கண்டான் மகா வித்தியாலயம் என்ற பெயருடன் புதிய அந்தஸ்தினைப் பெற்றது. அதிபர் ஆ.இராசநாயகம் காலத்தில் பாடசாலையின் மணிவிழா கொண்டாடப்பட்டது.

2001இல் அதிபராக கடமையாற்றிய கா.நடராசா அவர்களின் பெருமுயற்சியால் க.பொ.த உயர்தர (ஆண்டு 12) வகுப்புக்களில் கலை, வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் இப் பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்ந்தது.பாடசாலைகளிடையே நடாத்தப்படும் போட்டிகளில் பல வெற்றிகளை தனக்கே உரியதாக்கிக் கொண்டது.

அரச உதவிகள், பழைய மாணவர் உதவிகள் என்பவற்றால் பாடசாலையின் வளங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. தற்போது மாடிக்கட்டிடங்கள், நூலகம், நீர்த்தாங்கி, விளையாட்டு மைதானம் என்பவற்றுடன் சிறப்புடன் இயங்குகின்றது.

சிறப்புகள் தொகு

  • முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா. குகதாஸ் தமது ஆரம்பக் கல்வியைக் கற்ற பாடசாலை

ஆதாரங்கள் தொகு