பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில்

விசவத்தனை முருகன் கோயில் இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

தோற்றமும் வளர்ச்சியும்

தொகு

200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.

கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.

1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.

1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.

1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து அதன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

2016 இல் இருந்து ஆலய முழுவதும் புணரமைப்பு வேலைகள் நடைபெற்று 2019 இல் மகா கும்பாவிஷேகம் நடைபெற்றது.

விழாக்கள்

தொகு

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும். சித்திரை மாத பூரணை,வைகாசி மாத வைரவ பொங்கல், வைகாசி விசாகம்,ஆடிச் செவ்வாய்,புரட்டாதிச் சனி,ஐப்பசி கந்தசஷ்டி,கார்த்திகை விளக்கீடு, மாதாந்த கார்த்திகை, மார்கழி திருவெம்பாவை,தைப் பூசம்,மாசி சிவராத்திரி போன்ற விசேட தினங்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இவ் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது.

உசாத்துணை

தொகு

பண்ணாக மான்மியம் - பண்டிதர் அ. ஆறுமுகம்.

https://goo.gl/maps/qqj1WkTNYwqFjPdz8