பதவியா குளம்

இலங்கையில் உள்ள குளம்

பதவியா குளம், பதிவில் குளம்[1], அல்லது பதவிக் குளம்[2]:28 இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் பதவியா என்னும் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற பழைய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றாகும். இது தனவாபி[2]:28 எனவும் பதிவாபி[3] எனவும் முன்னர் அழைக்கப்பட்டது. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் இது பன்டொன்னாறு குளம்[4] எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருக்கோணமலைக்கு வடமேற்கில் ஏறத்தாழ 70 மைல் தூரத்திலுள்ள உலர் வலய வன்னிப் பிரதேசத்தில்[5] இக்குளம் அமைந்துள்ளது.

பதவியா குளம்

குள அமைப்பு

தொகு

இலங்கையின் பண்டைய நீர்ப்பாசனத் தொழினுட்பம், அமைப்புப் பொறியியலுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக பதவியா குளம் விளங்குகிறது. இது இலங்கையின் மிகப் பெரிய பண்டைய குளங்களுள் ஒன்றாகும். நீரைத் தேக்கி வைப்பதை முக்கிய நோக்காகக் கொண்டு அதற்கேயுரித்தான தனித்தன்மையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.[6]

இக்குளத்தின் கரையானது இரண்டு பகுதிகளாக பிரித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அப்பிரிப்பினால் உருவான மேட்டு நிலக் குன்று கடல் மட்டத்திலிருந்து 340 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[7] இக்குன்று தெய்யன்னே கந்த[6] என அழைக்கப்படுகிறது. பதவியா குளத்தின் கிழக்கு கரைப் பகுதி ஏறத்தாழ ஒரு மைல் நீளமுடையது. மேற்கு கரைப் பகுதி ஏறத்தாழ ஒன்றேகால் மைல் நீளமுடையது. ஏறத்தாழ 592,000 கியூபிக் யார்ட்ஸ் அளவான களி மண் தூர இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு[8] இக்குளத்தின் கரை கட்டப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கானோரின் 10-15 வருடகால தொடர்ச்சியான உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கலாம். பெரிய ஆற்றின் (மகா ஓயா) கிளை ஆறுகளான மகுனு, மோற ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலிருந்து வடிந்த நீரை இக்குளத்தின் இரு கரைப்பகுதிகளும், நடுவிலிருக்கும் மேட்டு நிலப்பகுதியும் தேக்கி வைத்திருக்க உதவின.[9]

6,480 ஏக்கர் மேற்பரப்பையுடைய இக்குளம் 24 அடிகள் ஆழமானது. இது ஏறத்தாழ 85,000 ஏக்கர் அளவுடைய நீர் கொள்ளளவைக் கொண்டது. இக்குளத்தின் நீர்ப்பாசனப் பரப்பு 12,500 ஆகும்.[10]

வரலாறு

தொகு

பதவியாவின் முதன்மை மண்வகையாக சிவந்த மண்ணிற நிறமுடைய வண்டல் மண்[11] காணப்படுகிறது. இது நெற்பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்ணாகையால் இப்பிரதேசத்தின் தொடக்க கால ஆற்றோர விவசாயக் குடியிருப்பு உருவாக்கங்களுக்கு இவ்வண்டல் மண் பரம்பல் காரணமாக இருந்திருக்கலாம்.

இவ்வாறான விவசாயக் குடியிருப்புகள் பெருகத் தொடங்க பரந்த அளவிலான நீர்ப்பாசனத்திற்கான தேவையும் அதிகரித்திருக்கலாம். வண்ணாத்திப் பாலம் அவ்வாறு கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம்.

வண்ணாத்திப் பாலமே முதலில் கட்டப்பட்டதாகவும், அதன் பின்னரே பதவியா குளம் கட்டப்பட்டிருக்கலாம்[9] எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வண்ணாத்திப் பாலம்

தொகு

இப்பண்டைய குள நீர்ப்பாசனத் திட்டத்தின் சிறப்பியல்பாக விளங்குவது கல்லால் அமைக்கப்பட்ட ஒரு நீர் திருப்புக் கட்டமைப்பு.[9] வண்ணாத்திப் பாலம் என உள்ளூர் மக்களால் முன்னர் அழைக்கப்பட்ட இக்கட்டமைப்பு, அணைக்கட்டாகவும் அதேசமயம் பாலமாகவும் தொழிற்பட்டது. கியுல் ஆறும், பெரிய (மகா) ஓயாவும் (ஆறும்) சங்கமிக்கும் இடத்திலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் கீழே இப்பாலம் அமைந்துள்ளது. இவ்விடம் தற்போது வட மாகாணத்தையும் வடமத்திய மாகாணத்தையும் பிரிக்கும் எல்லையாக விளங்குகிறது.[9]

பெரும்போகக் காலங்களில் கியுல் ஆற்று (ஓயா) நீரானது வண்ணாத்திப் பாலக் கட்டமைப்பினூடாக திருப்பப்பட்டு பெரிய ஆற்றின் (மகா ஓயா) இடது, வலது கரைகளில் அமைந்திருக்கும் இரண்டு பாசன வாய்க்கால்களினூடாக கொக்கிளாய் களப்பு வரையான விவசாய விளை நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டது.[9]

குளத்தின் தோற்றம்

தொகு

குளக்கட்டுமான தொழிநுட்ப அறிவு வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பிற்பட்ட காலங்களில் ஒரு பெரும் குளத்தின் தேவை உணரப்பட்டு பதவியா குளம் கட்டப்பட்டிருக்கலாம்.

இப்பிரதேசத்தின் வருடாந்த சராசரி மழைவீச்சி 75 அங்குலத்துக்கும் குறைவானதாகும்.[11] ஆனி தொடக்கம் ஐப்பசி வரையான சிறுபோகக் காலங்களில் கியுல் ஆறு நீரின்றி முற்றாக வரண்டு போய்விடும்.[12] ஆகவே, மார்கழி தொடக்கம் சித்திரை வரையான மாதங்களில் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் மிகையான மழை நீரை தேக்கி, சேமித்து வைப்பதை பிரதான நோக்காகக் கொண்டே பதவியா குளம் அமைக்கப்பட்டிருக்கிறது.[13] இது வரண்ட சிறுபோகக் காலங்களிலும் வருடம் முழுதும் தொடர்ச்சியான பயிர்ச்செய்கையை[9] மேற்கொள்வதற்கான நீரை பதவியாவைச் சூழவிருந்த விவசாய விளை நிலங்களுக்கு வழங்கியது.

பதவியா குளத்தின் உருவாக்கம் அப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியில் நேரடியாக தாக்கம் செலுத்தியது. வருடம் முழுதுமான, தொடர்ச்சியான விவசாய நடவடிக்கைகளும் மிகை உற்பத்தியும் உள்ளூர் மற்றும் பிராந்திய வணிக முயற்சிகளுக்கு வழிகோலின. இப்பொருளாதார வளர்ச்சியும் பதவியாவின் அமைவிடமும் (இலங்கையின் வடபகுதியின் கிழக்கு-மேற்கு வணிகப் பாதையின் நடுவிலே இருந்தமை; கோகர்ணம்/ திருக்கோணமலைத் துறைமுகத்தின் அருகாமை) பதவியா நகரம் ஒரு முக்கிய வணிக மையமாக உருவாகுவதற்குக் காரணமானது.

குளத்தைக் கட்டியவர்/கள்

தொகு

பதவியா குளத்தைக் கட்டியவர்/கள் தொடர்பான எதுவித அறுதியான வரலாற்று சான்றுகளும் இல்லை. பிரித்தானிய காலனித்துவ அரசின் பொறியியலாளராக இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 1873 - 1904 காலப்பகுதியில் பணியாற்றிய ஹென்றி பார்க்கர் பதவியா குளம் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டில்[6] கட்டப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுர ஆட்சியாளர்கள் இதனைக் கட்டியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லாததால், இக்குளம் தென்னிந்திய, தமிழ் வணிகக் கணங்களின் உதவியுடன் உள்ளூர்த் தலைவர்களால் அமைக்கப்பட்டிருக்கலாமென[14] சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இக்குளக்கரையில் காணப்பட்ட 12ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த கல்வெட்டு முதலாம் பராக்கிரமபாகு மன்னன் இக்குளத்தை பெருப்பித்து புதுப்பித்தாக[15] அறிவிக்கிறது. ஏறத்தாழ 11ஆம் நூற்றாண்டு வரை இக்குளம் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் ஏற்பட்ட பாரிய உடைப்புகளை முதலாம் பராக்கிரமபாகு திருத்திக் கட்டியிருக்கலாம். அதன் பின்னர் 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை[7] இக்குளம் பயனளிக்கக்கூடிய வகையில் தொழிற்பட்டிருக்கலாம். 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த தெற்கை நோக்கிய ஆட்சி, தலைநகர மாற்றங்கள் காரணமாக இக்குளம் கைவிடப்பட்டிருக்கலாம். இக்காலப்பகுதியில் ஏற்பட்ட குளத்தின் உடைப்புகள் திருத்தப்படாமல், உடைப்பினூடே நீர் வெளியேறி குளத்தின் அருகிருந்த நகரமும் கைவிடப்பட்டிருக்கலாம்.[8]

தமிழ்/ தென்னிந்திய வணிகக் கணங்கள்

தொகு

பதவியா குளத்தின் அருகில் ஒரு வணிக நகரத்தை தமிழ் வணிகக் கணங்கள் அமைத்து செயற்பட்டதற்கான பல தொல்லியல் சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இங்கு அகழாய்வு செய்யப்பட்ட தமிழ், சமஸ்கிருத, கிராந்த கல்வெட்டுக்களும் தொல்லியல் சான்றுகளும் இந்நகரம் தமிழ்/தென்னிந்திய வணிகர்களான நானாதேசியர், அஞ்ஞூற்றுவர், நகரத்தார், வீரக்கொடியர் தொடர்பான குறிப்புகளையும் தமிழ் வேளைக்காரப் படையினரினது இராணுவத் தளமாக இருந்ததற்கான குறிப்புகளையும் கொண்டிருக்கின்றன.[15] இவ்வணிகக் கணங்கள் இப்பிரதேசத்திலிருந்த கோவில்களுக்கு ஆதரவு வளங்கியதையும், அக்கோவில்கள் சிறப்புடன் விளங்கியமையையும் கட்டிட அழிபாடுகள், தொல்லியல் சான்றுகளைக் கொண்டு அறிய முடிகிறது.

பதவியா நகரம்

தொகு

இக்குளத்தருகில் அமைந்திருந்த நகரம் பதொன்னரு நகரம்[2]:28 என அழைக்கப்பட்டது. அஞ்ஞூற்றுவர் இதனை அய்யம்பொழில் பட்டினம்[16] என அழைத்தனர். 12ஆம் அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு சாசனத்தில் இது சிறீபதி கிராமம் என்ற இந்துப் பெயர்[15] கொண்டும் அழைக்கப்பட்டிருக்கிறது.

கட்டிட அழிபாடுகள்

தொகு

பதவியா குளத்தருகேயுள்ள மொரகொட என்னும் இடத்தில் சிவதேவாலயங்களினதும், வேறும் பல கட்டடங்களினதும் அழிபாடுகளும், தமிழ்க் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மோற ஓயாவுக்கும் பதவியா குளத்துக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் ஒரு மடாலயத்தின்[4] கட்டட அழிபாடுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அருகே 30 அடி ஆழமான, 4,5 அடி விட்டமுடைய 10 கிணறுகள் காணப்படுகின்றன. இம்மடாலயத் தொகுதியைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் பதவியா குள மதகின் கற்களை விடப் பழமையானதாகத் தெரிவதால் இம்மடாலயம் பதவியா குளம் அமைக்கப்பட்டதற்கு முன்னரே உருவாகிய ஒரு குடியிருப்பாக இருக்கலாம்[17] எனக் கருதப்படுகிறது.

பதவியா குளத்தருகே அமைந்திருந்த இக்குடியிருப்பு பிரமதேயம் எனப்படும் பிராமண குடியிருப்பு எனவும், இது சோழர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் 6ஆம் நூற்றாண்டுக்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியிருக்கக்கூடும்[18] எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரவிகுலமாணிக்க ஈஸ்வரமுடையார் கோவில்

தொகு

பதவியா குளத்துக்கு அண்மையில் பொலன்னறுவை சிவதேவலாயங்களை விடவும் மிகப் பழமையானது எனக் கருதப்படும் இரவிகுலமாணிக்க ஈஸ்வரமுடையார் என்னும் சிவதேவாலயம்[2]:29 அமைந்திருந்தது. இரவிகுலமாணிக்கம் என்பது முதலாம் இராஜராஜ சோழனின் விருதுகளுள் ஒன்று. ஆகவே, இது சோழராட்சிக் காலத்தின் ஆரம்பங்களில் கட்டப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இது சோழ, திராவிடக் கட்டிடப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.[2]:29

காலனித்துவ காலம்

தொகு

பிரித்தானிய காலனித்துவ அரசின் ஆரம்பகால நிர்வாக அதிகாரிகள் பதவியா குளம், நீர்ப்பாசனத் தொழினுட்பம், அதன் அருகிருந்த பண்டைய நகர அழிபாடுகள் தொடர்பான அகழாய்வுகளை மேற்கொண்டு பல்வேறு அறிக்கைகளையும் நூல்களையும் எழுதியுள்ளனர்.

ஏறத்தாழ 600 வருடங்களாக கவனிப்பாரற்றுக் காடுமண்டிக் கிடந்த[1] பதவியா குளத்திற்குச் சென்று, அக்குளம் தொடர்பான தகவல்களை முதன் முதலில் எழுத்து மூலம் பதிவு செய்தவராக ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் விளங்குகிறார்.

ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற்

தொகு

ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் பிரித்தானிய காலனித்துவ அரசின் 5 ஆவது காலனித்துவ செயலாளராக 1846 இலிருந்து 1850 வரை பதவி வகித்தார். இலங்கையின் பண்டைய நீர்ப்பாசன முறைமைகள் தொடர்பாய் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ரெனென்ற் பதவியாவுக்கு 1848ஆம்[13] ஆண்டு சென்றார்.

பதவியா குளத்தை பதிவில் குளம் எனவே தனது நூல்களிலும் அறிக்கைகளிலும் ரெனென்ற் குறிப்பிட்டுள்ளார். பதவியா குளம் இருக்கும் இடம் தொன்மையாக வன்னி என்னும் பிரதேசத்தைச் சேர்ந்தது எனவும் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் இதன் தெற்கு எல்லைகளாக அரிப்போ ஆறும் களு ஆறும் இருந்தன[19] எனவும் ரெனென்ற் விபரித்துள்ளார். இலங்கையின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்த தமிழ்க் கிராமமான கொக்கிளாயிலிருந்து[20] பதவியா நோக்கிய பயணத்தை ரெனென்ற் ஆரம்பித்ததாகவும் அப்போதைய பதவியா குளம் காடுமண்டி, மலேரியா நுளம்புகள் நிறைந்து காணப்பட்டமையால் குளத்திற்கு தென்மேற்கே ஏறத்தாழ 10 மைல் தொலைவில் இருந்த லிண்டே ஹிட்டே ஹமெலாவ என்னும் தமிழ் கிராமத்தில்[21] இரவு தங்கியதாயும் ரெனென்ற் குறிப்பிட்டுள்ளார். 1848ல் பதவியா குளத்துக்கு அண்மையிலிருந்த ஒரே மக்கள் வாழ்விடமாக அத்தமிழ்க் கிராமம் இருந்திருக்கிறது. பதவியா குளத்தைச் சூழ காட்டு மிருகங்களும் பறவைகளுமே வாழ்ந்து வந்தன எனவும் சில வேடர்கள் அண்மையில் குளத்தருகே நெல் விதைத்து, அறுவடை செய்துகொண்டு போய் விட்டனர் என்று கிராம மக்கள் கூறியதாகவும் ரெனென்ற் பதிவு செய்துள்ளார்.[22]

பதவியா குளப் பயணக் குறிப்புகள்

தொகு

பதவியா குளத்தை நோக்கிய பயணம் பற்றி  ரெனென்ற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“சூரிய உதயத்திற்கு சில மணித்தியாலங்கள் முன்னரே கைவிளக்குகளின் உதவியுடன் நாங்கள் குளத்தை நோக்கிப் புறப்பட்டோம். அப்பயணம் மிகவும் உளச்சோர்வூட்டுவதாய் இருந்தது. அடர்ந்த மரங்களுக்குக் கீழேயிருந்த பாதையை உள்ளூர் மக்கள் ஒரு நடைபாதையாகவே பயன்படுத்தி வந்தனர். மரக்கிளைகளும் கொடிகளும் முட்களும் தலைக்கு மேல் தாழ்வாய் சூழ்ந்திருந்தன. அப்பாதை குதிரைகள் செல்வதற்கு உகந்த பாதையாக இருக்கவில்லை. நாங்கள் குதிரைகளின் மேலிருந்து இறங்கி நடந்தே போகவேண்டி இருந்தது. இவ் ஒற்றையடிப் பாதை குளக்கரையோரமாகவும் பாறைகள், மேட்டு நிலங்களின் மேலாகவும் சென்றது. இப்பாறைச் சரிவுகள் குதிரைகள் பாதுகாப்பாக நடப்பதற்கு கடினமாக இருந்தன. எங்களுடன் வழிகாட்டியாக வந்த ஓதியார் எனப்பட்ட உள்ளூர் கிராமத் தலைவர் கடந்த 30 ஆண்டுகளுள் பதவியா குளத்தை பார்க்க வந்த மூன்றாவது வெள்ளையர் நான் என்று கூறினார். ஒருவாறு சூரிய உதயத்திற்கு சற்று முன்னராக நாங்கள் குளத்தின் தென்கிழக்குக் கரையை அடைந்தோம். அங்கிருந்து குளத்தின் பிரதான கரையை நோக்கிச் சென்றோம். குளப்படுகை புதை சேறாகவும் பாதுகாப்பற்றும் காணப்பட்டது ஆனால் படுகை  முழுதும் உயரமான அசையும் புற்கள் வளர்ந்திருந்தன. எத்திசை நோக்கிப் பார்த்தாலும் இப்புற்கள் நசுக்கப்பட்டு ஆழமான குழிகள் உருவாக்கப்பட்டிருந்தன. மரங்களின் நிழலில் செழிப்புடன் வளர்ந்திருந்த இப்புற்கள் பெரும் யானைக் கூட்டங்களுக்கு உணவாக இருந்திருக்கலாம். மிகுந்த வெப்பமான காலங்களில் அவை குளத்தில் இறங்கிக் குளித்துவிட்டு சேற்றில் உருண்டு புரண்டிருக்கலாம். குளத்தைச் சூழவும் யானைகளும் காட்டெருமைகளும் பன்றிகளும் மான்களும் நடமாடியதற்கான அடையாளங்கள் காணக் கிடைத்தன. குளத்தின் மதகுகளுள் ஒன்று உடைந்து போய் இருந்தது. குளம் பல இடங்களில் உடைப்பெடுத்து நீர் கரைகளைத் தாண்டி பாய்ந்து கொண்டிருந்தது.”[1]

அடுத்த நாள் இரவு பதவியா குளத்திலிருந்து 18 மைல் தொலைவில் இருக்கும் கூழன் குளம் எனப்பட்ட இன்னொரு தமிழ்க் கிராமத்திற்கு[21] சென்று தங்கியதாயும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியா குள வடிவமைப்பு குறிப்புகள்

தொகு

ரெனென்ற் பதவியா குளத்தின் பிரமாண்டத்தை கருத்தில் கொண்டு இக்குளம் ஒரு ஆங்கில மாவட்டம் முழுதுக்கும் நீர் வழங்கக் கூடிய அளவு பெரியது[23] எனக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய காலனித்துவ அரச பொறியியலாளரின் கணிப்பின்படி 6 மைல் நீளமான கரையும் 60 அடி உயரமும் 200 அடி அகலமான அடித்தளமும் கொண்ட இக்குளம் 7,744,000 க்யூபிக் யார்டுகள் கொண்ட நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதால் இக்குளக்கரையை (குளத்தின் உட்பகுதியிலுள்ள கற்களாலான கட்டமைப்பைத் தவிர்த்து) மீள்புனரமைக்க ஏறத்தாழ 870,000 ஸ்டேர்லிங் பவுண் நிதி தேவைப்படும்[24] என மதிப்பிடப்பட்டது. இது ஒரு 120 மைல் நீளமான ஆங்கில தொடரூந்துப் பாதை அமைப்பதற்கான செலவுக்கு நிகராகும் எனவும் இதற்கு 10,000 பேரின் 5 வருடங்களுக்கு மேலான உழைப்பு தேவையாக இருக்கும்[19] எனவும் ரெனென்ற் கணிப்பிட்டிருந்தார். பதவியா குளத்தை மீள்புனரமைப்பதற்கே இவ்வளவு உழைப்பும் நிதியும் தேவையாக இருந்தால் இக்குளத்தை கட்டுவதற்கு எத்தனை பேர் எவ்வளவு காலம் உழைத்திருக்கக் கூடும் எனவும் எவ்வளவு நிதி செலவாகியிருக்கும், அதனை யார் கட்டுவித்தார்கள், யாருக்காக அல்லது எத்தனை பேருக்கு/ கிராமங்கள், நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக இப்பெருங்குளம் வடிவமைக்கப்பட்டது[24] என ரெனென்ற் வியந்து எழுதியுள்ளார்.

பின்காலனித்துவ காலம்

தொகு

இக்குளம் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 1950களில் புனரமைக்கப்பட்டது. அப்போதைய நில அபிவிருத்தி அமைச்சராக இருந்த டி. பி. புலன்குலம திஸ்ஸாவ அனுசரணையுடன் நீர்ப்பாசனத் திணைக்கள அதிபராக இருந்த வி. த. ஐ. அழகரத்தினம் தலைமையில் இக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Chp. V, pg. 501-508.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 இந்திரபாலா, கார்த்திகேசு (1999). இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை. சென்னை/கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
  3. Nicholas, C. W. 1963. Historical Topography of Ancient and Medieval Ceylon. In: Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society. Maharagama: Saman Publishers. Pg. 87.
  4. 4.0 4.1 Brohier, R. L. 2000. Antiquarian Notes on Padaviya, In: Seeing Ceylon. Colombo: Sooriya Publishers. Pg. 106.
  5. Tennent, J. E. 1850. Christianity in Ceylon: Its Introduction and Progress under the Portuguese, the Dutch, the British, and American Missions . London: John Murray. Pg. 337.
  6. 6.0 6.1 6.2 Adithiya, L. A. 1969. Archaeological Remains at Deiyyanne-kanda, Padaviya. In: Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Vol. XIII. Colombo: Royal Asiatic Society. Pg. 65.
  7. 7.0 7.1 Brohier, R. L. 2000. Antiquarian Notes on Padaviya, In: Seeing Ceylon. Colombo: Sooriya Publishers. Pg. 98.
  8. 8.0 8.1 Adithiya, L. A. 1969. Archaeological Remains at Deiyyanne-kanda, Padaviya. In: Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Vol. XIII. Colombo: Royal Asiatic Society. Pg. 66.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 Brohier, R. L. 2000. Antiquarian Notes on Padaviya, In: Seeing Ceylon. Colombo: Sooriya Publishers. Pg. 99.
  10. Abeysekera, W. A. T. 1986. Mobilizing Farmer Participation in Irrigation Rehabilitation and Management Programmes through Tank Committees: The Case of Tank Irrigation Modernization Projects. In: Participatory Management in Sri Lanka’s Irrigation Schemes. Digana: International Water Management Institute, pg. 114.
  11. 11.0 11.1 Handawela, J. 1992. Anuradhapura District Environmental Profile: Final Draft Report submitted to the Central Environmental Authority Colombo. Peradeniya: Land and Water Management Research Centre. Pg. 181.
  12. Adithiya, L. A. 1969. Archaeological Remains at Deiyyanne-kanda, Padaviya. In: Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Vol. XIII. Colombo: Royal Asiatic Society. Pg. 67.
  13. 13.0 13.1 Brohier, R. L. 2000. Antiquarian Notes on Padaviya, In: Seeing Ceylon. Colombo: Sooriya Publishers. Pg. 100.
  14. கார்த்திகேசு, இந்திரபாலா. 2006. இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு. சென்னை/கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக். 250.
  15. 15.0 15.1 15.2 கார்த்திகேசு, இந்திரபாலா. 2006. இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு. சென்னை/கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக். 249.
  16. Schalk, P. and Velupillai, A. (eds.). 2002. Buddhism among Tamils in Pre-Colonial Tamilakam and Ilam, Part 2: The Period of the Imperial Colar - Tamilakam and Ilam. Uppsala: Uppsala University. Pg. 706.
  17. Brohier, R. L. 2000. Antiquarian Notes on Padaviya, In: Seeing Ceylon. Colombo: Sooriya Publishers. Pg. 107.
  18. கார்த்திகேசு, இந்திரபாலா. 2006. இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு. சென்னை/கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக். 243.
  19. 19.0 19.1 Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Pg. 508.
  20. Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Pg. 500.
  21. 21.0 21.1 Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Pg. 501.  
  22. Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Pg. 506.
  23. Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Pg. 507.
  24. 24.0 24.1 Tennent, J. E. 1850. Christianity in Ceylon: Its Introduction and Progress under the Portuguese, the Dutch, the British, and American Missions . London: John Murray. Pg. 344.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதவியா_குளம்&oldid=3909219" இலிருந்து மீள்விக்கப்பட்டது