பத்துப்பாட்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு, 1946)

பத்துப்பாட்டு - ஆங்கில மொழிபெயர்ப்பு (Pattupattu; ten Tamil idylls) என்பது பேராசிரியர் ஜே. வி. செல்லையாவினால் ஆங்கிலத்தில் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட மொழிபெயர்ப்பு நூலாகும். சங்கத் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு இலங்கையில் 1946-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

பேராசிரியர் செல்லையா வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் முதலாவது தலைவராகவும் இருந்து சேவையாற்றியவர். அவருடைய இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்குப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் முன்னுரை எழுதியுள்ளார்.

இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட எடுக்கப்பட்ட முயற்சி அன்று தோல்வியடைந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாராதோரின் நூல்களை வெளியிடப் பல்கலைக்கழகம் நிதியை ஒதுக்கமுடியாது எனக் கூறிவிட்டனர்[சான்று தேவை]. கரந்தைத் தமிழ்ச் சங்கம் இதனை அச்சிட முன்வந்திருந்தபோதும், பிற நாட்டவர்களுக்குத் தமிழகத்தில் நூல் அச்சிடக் கடுதாசிகள் கொடுக்கப்பட முடியாது எனத் தமிழக அரசு கூறிவிட்டது[சான்று தேவை].

அமைப்பு

தொகு

பத்துப்பாட்டு மூலமும் உரையும் முதன்முதலாக 1889-ஆம் ஆண்டில் உ. வே. சாமிநாதையரால் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், அது பல தடவைகள் மறு பதிப்புகள் செய்யப்பட்டுள்ளது. சாமிநாத ஐயரது வெளியீட்டில் பத்துப்பாட்டின் இலக்கியங்களினது ஒழுங்கு அமைப்பானது

  • திருமுருகாற்றுப்படை,
  • பொருநராற்றுப்படை,
  • சிறுபாணாற்றுப்படை,
  • பெரும்பாணாற்றுப்படை,
  • முல்லைப்பாட்டு,.
  • மதுரைக்காஞ்சி,
  • நெடுநல்வாடை,
  • குறிஞ்சிப்பாட்டு,
  • பட்டினப்பாலை,
  • மலைபடுகடாம்

என்றவாறு அமைந்திருக்கும் வேளையில், செல்லையாவினது ஆங்கில மொழிபெயர்ப்பில் இலக்கியங்களின் ஒழுங்கானது.

  • பட்டினப்பாலை,
  • பொருநராற்றுப்படை,
  • முல்லைப்பாட்டு,
  • பெரும்பாணாற்றுப்படை,
  • சிறுபாணாற்றுப்படை,
  • நெடுநல்வாடை,
  • குறிஞ்சிப்பாட்டு,
  • மதுரைக்காஞ்சி,
  • மலைபடுகடாம்,
  • திருமுருகாற்றுப்படை

என்ற ஒழுங்கில் தரப்பட்டுள்ளது.

நூலின் ஆரம்பத்தில் "General Introduction" என்பதன்கீழ் பல்வேறு விடயங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலக்கியத்தினது ஆரம்பத்திலும் இதைப்போலவே, "Introduction" என்பதன்கீழ் அந்த இலக்கியம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. முடிவுகளில் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.