பத்மனாபபுரம் சரஸ்வதியம்மன் கோயில்

பத்மனாபபுரம் சரஸ்வதியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் உப்பரிகை மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.

அருள்மிகு சரஸ்வதியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:பத்மனாபபுரம்
சட்டமன்றத் தொகுதி:பத்மனாபபுரம்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
தாயார்:சரஸ்வதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி

வரலாறு

தொகு

இக்கோயில் உள்ள சரஸ்வதியம்மனின் சிலையானது, கம்பரால் சேர மன்னனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்கால திருவிதாங்கூர் அரசால், பத்மநாபபுரம் அரண்மனை தேவராக்கெட்டில் ஒரு சிறுகோயில் எழுப்பப்பட்டு சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது. இந்தக் கோயிலின் சிறப்பு இங்குள்ள மூலவரே உற்சவராகவும் சகட விக்கிரகமாகவே திகழ்வதுவே. இந்த அம்மன் விக்கிரகம் நவராத்திரிக்கு திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படும்போது. கோயிலில் சாளக்கிராமம் வைத்து பூஜை நடத்தப்படும். இவ்வாறு அம்மன் நிலையாக பிரதிஷ்டை செய்யப்படாமல் இருப்பதால் சகட விக்கிரகம் எனப்படுகிறது.

அமைப்பு

தொகு

கோயில் கருவறையில் அம்மன் வீற்றிருக்கும் பீடத்தின் இருபுறமும் நரசிம்மமூர்த்தி, வேதவியாசர் சிலைகள் உள்ளன. கருவறையின் வெளியே உட்பிரகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் உபமூர்த்தியாக மூன்று சிவலிங்கங்கள் முறையே கேரளாவிலுள்ள வைக்கம், ஏற்றுமானுர், கடுதுருத்தி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் விநாயகர், நாகர் போன்ற பரிவாரத் தெய்வங்கள் உள்ளனர்.

விழாக்கள்

தொகு

இக்கோயிலில் நவராத்திரி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி நாட்களில் திருவிதாங்கூர் மன்னர்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தனர். 1834ஆம் ஆண்டிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தற்கான ஆவணங்கள் உள்ளன. திருவாங்கூர் நாட்டின் தலைநகரானது சுவாதித் திருநாள் மகாராஜாவின் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு 1840ஆம் ஆண்டு முதல் நவராத்திரி விழாவுக்கு சரஸ்வதியம்மனை ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் தா.அனிதா (18 அக்டோபர் 2018). "கம்பன் வணங்கிய கலைமகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2018.