பந்தாட்டத் திறன்
பந்தாடியபோது மகளிர் அவரவர் திறமையை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தினர் என்பது பெருங்கதை என்னும் ஆறாம் நூற்றாண்டு தமிழ்நூலில் உள்ளபடி இங்குக் காட்டப்படுகிறது.
பந்தாட்டம் பண்டைத் தமிழகத்தில் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. பல பந்துகளை மேலே தூக்கிப் போட்டுக் கீழே விழாமல் தட்டி விளையாடுவது இந்தப் பந்தாட்டம். இதனை ஆங்கிலத்தில் சக்குலரி (ஆங்கிலம்:Jugglery) என்பர். சங்ககாலத்தில் பந்தாட்டம் எங்கெங்கே, எவ்வாறு நடைபெற்றது என்பதனைச் சங்கப்பாடல்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. பாட்டுப் பாடிக்கொண்டு மகளிர் பந்தாடியதைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. பந்தாட்டம் ஒரு தனித்திறன் விளையாட்டு. இந்தப் பந்தாட்டத்தை மூவர், ஐவர் என கூட்டுச் சேர்ந்து தட்டி விளையாடுவது அம்மானை விளையாட்டு.
பெருங்கதை என்னும் தமிழ்நூல் கொங்குவேளிர் என்பவரால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பிருகத் கதா என்னும் வடமொழி நூலைத் தழுவி இது எழுதப்பட்டது என்பர். இதில் பந்தாட்டப் போட்டி நிகழ்ந்த செய்தி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆறு பெண்கள் ஒவ்வொருவராக அரங்கில் அடுத்தடுத்துத் தோன்றி விளையாடுகிறார்கள்.
பெருங்கதை நான்காவது வத்தவகாண்டம் 12-வது காதையான ‘பந்தடி கண்டது’-இல் இச்செய்தி சொல்லப்பட்டுள்ளது. ஆடவர் இல்லாத மகளிர் அரங்கில் பந்தடி நிகழ்கிறது.
பந்தும் பந்தடி பாங்கும்
தொகு7 பந்துகளைத் தட்டியும், 21 பந்துகளைத் தட்டியும் அவர்கள் விளையாடுகிறார்கள்.
பந்து செய்தல்
தொகுகிடை எனப்படும் வெண்டு, பூலாப்பூ ஆகியவற்றை நடுவில் வைத்து பஞ்சு-நூலால் சுற்றினர். அதன்மேல் மயில்பீலி, மென்மையான மயிர் ஆகியவற்றை வைத்து மேலும் வரிந்தனர். இது பாம்பு உரித்த சட்டைத்தோல் போலவும், மயில்பீலியின் கண் போலவும் கண்ணுக்கு அழகாகவும், கைக்கு மிருதுவாகவும், இலேசாகவும் இருந்ததாம். இத்தகைய பந்துகளைச் செய்தோர் அறிவர் எனப்பட்டனர்.
பந்து ஒரு கைக்குள் அடங்கும் அளவு இருந்தது. மானனீகை என்பவள் ஓரிடத்தில் நின்றுகொண்டு தன் கைக்கு எட்டிய தூர்ரத்தில் விரலால் வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுழன்று பந்தாடினாளாம்.
ஆடுவோர் அற்றம் மறைக்கும் ஆடை மட்டும் அணிந்திருந்தனர். சிறு மாராப்புத்-துணி, பாடகம் என்னும் கால்பரடு, சூடகம் என்னும் புறங்கைத் தொங்கல், மேகலை என்னும் இடையணி, முன்கை-வளையல், தோள்-வளையல், தலையில் கன்னி, மார்பில் கோதை ஆகிய அணிகலன்களையும் அவர்கள் அணிந்திருந்தனர். தலையைக் குழல்-சடையாகவும், கொண்டைக்கூந்தலாகவும் ஒப்பனை செய்துகொண்டிருந்தனர்.
நிகழ்வுகள்
தொகுஅடத் தொடங்கும்போது இவ்வாறு ஆடப்போகிறேன் என்று பாயிரம் கூறல், கண்ணிமைக்காமல் எண்ணுங்கள் என வேண்டல், தாளம் தவறாமல் ஆடல், கம்பிதம் என்னும் கந்துக-வரி பாடிக்கொண்டே ஆடல், தோழிமார் வினாக்களுக்கு விடையளித்துக்கொண்டே ஆடல், முதலான திறப்பாடுகள் சிலரிடம் வெளிப்பட்டன.
உடல் திறன்
தொகுஅங்கையால் தட்டினர், பிடித்து ஓட்டினர். புறங்கையால் அடித்தனர், புறங்கையில் நிறுத்தி ஓட்டினர் மணிக்கட்டுக்கு மேல் இருக்கும் சூடகக் கையில் உருண்டோடச் செய்தனர். தனிவிரலில் தரித்து மறித்து அடித்தனர், முடக்குவிரலில் ஏற்றனர் பரப்புவிரலில் பாய்ச்சினர் இருவிரல் விரிந்த கவற்றுவிரலில் ஏந்தி எறிந்தனர் குவிவிரல் கொண்டு கொளுத்தினர் பாடகம் அணிந்த மேல்பாதத்தால் தட்டினர் கையில் கருவிக்கோல் வைத்துக்கொண்டு தட்டினர்
பந்துகள் பட்டு உந்திய உடலுறுப்புகள்
தொகுகுழல், கண்ணி, தோள், கூன்முதுகு, நெற்றிப்பொட்டு, குயநடுவு (வயிற்றின் கீழ் உள்ள பகுதி) – முதலான பகுதிகளில் பகுதிகளில் படும் பந்தை உந்திச் செலுத்தினர்.
உறுப்பசைவு
தொகுகைவளையும் தோள்வளையும் ஒலித்தன. மேகலை அவிழ்ந்தது. ஆர்த்தது. கூந்தல் அவிழ்ந்தது. சுழன்றது. கோதை சிதறியது தாமம் சுழன்றது மார்பகம் துளும்பிற்று புருவம் வளைந்தது மேனி அழன்றது வியர்வை பொங்கிற்று சந்தனம் வழிந்தது
உடலசைவு
தொகுகுதித்து முன் புரிதல் வளைந்து புரிதல் இருகால் நெறிதர மடித்துக் காட்டல் காற்றைப்போல் நாற்புறமும் சுழல்தல் பறவை போல் இரு கைகளைப் பறக்க அடித்தல் சுழன்று விழும் பறவை போல் குனிந்து நிமிர்தல் தேர்ச்சக்கரம் போல் உருண்டு அடித்தல் நாடக மகளிர் போல் நடித்துக்கொண்டே அடித்தல்
ஒருபந்தால் மற்றொரு பந்தைத் தட்டல், இடையிடையே கைத்தட்டல், விரல் நொடித்தல், வியர்வை துடைத்தல், இடுப்பாடையைத் திருத்தல், அவிழ்ந்த கூந்தலை முடிதல், கூந்தலில் பூ முடித்தல், மலர் தொடுத்தல், மலர்க்கண்ணிகளை எண்ணல், அடிமுதல் உச்சிவரை அணிகலன் திருத்தல், தோழிமார் கிடத்திய பந்துகளை எண்ணல், - முதலான செயல்களையும் செய்து காட்டினர்.
தனித்தனியாகவும், சாரிசாரியாகவும், சூறாவளி போலவும், பாம்பு நெளிவது போலவும், குருவி பறப்பது போலவும் பந்துகள் சென்றன.
பந்தாடிய மகளிர்
தொகு6 பெண்கள் அடுத்தடுத்து அரங்கேறிப் பந்தடித்தனர். அவர்கள் முறையே 1. இராசனை 2. காஞ்சனமாலை 3. அயிராபதி – கூனி 4. விச்சுவலேகை – குறளி 5. ஆரியை 6. மானனீகை இவர்கள் பந்தடித்த பாங்கு
பந்தாட்டப் படவிளக்கம் – பாடல் அடி
தொகுபடம் 1
தொகு- இராசனை அங்கையில் அடக்கல் – 61
- மானனீகை அங்கையில் ஏற்றல் – 229
- அயிராபதி அங்கையில் ஓட்டல் – 83
- அயிராபதி புறங்கையில் ஓட்டர் – 83
- மானனீகை புறங்கையால் அடித்தல் – 210
- . அயிராபதி நற்றிப்பொட்டிடை எற்றுத் தட்டி ஓட்டல் – 88
- மானனீகை முன்கையில் பாய்ச்சல் – 199
- இராசனை குடக முன்கையால் சுழன்று மாறு அடித்தல் – 60
- . விச்சுவலேகை தனித்துவிரல் தரித்து மறித்துத் தட்டல் – 105
- . விச்சுவலேகை முடக்குவிரல் எற்றல் – 104
- . விச்சுவலேகை பரப்புவிரல் பாய்ச்சல் – 104
- . மானனீகை கவற்றுவிரல் ஏந்தி எறிதல் – 107
- . காஞ்சனமாலை குவிவிரல் கொளுத்தல் – 70
- . இராசனை பாடகக் கால்மிசைப் பரிந்தவை விடுத்தல் – 59
- . விச்சுவலேகை கருவிக்கோலால் தட்டல் – 97
படம் 2
தொகு- . காஞ்சனமாலை குழல்மேல் வரும் பந்தை அடித்தல் – 70
- . காஞ்சனமாலை கண்ணிமேல் வரும் பந்தை அடித்தல் – 72
- . அயிராபதி தோள்மேல் பாய்ச்சி அடித்தல் – 84
- . அயிராபதி கூன்மேல் புரட்டல் – 85
- . அயிராபதி குயம்-நடுவு ஓட்டல் – 86
- . அயிராபதி குதித்து முன்-புரிதல் – 82
- . விச்சுவலேகை பத்தியில் குதித்துப் பறத்தல் – 101
- . மானனீகை தாங்கி வளைத்துத் தான் புரிதல் – 230
- . மானனீகை இருகால் நெறிதர மடித்துநின்று காட்டல் – 231
- . அயிராபதி காற்றினும் கடிதாச் சுழன்றடித்தல் – 84
- . அயிராபதி மேன்மேல் சுழன்று அடித்தல் – 84
- . அயிராபதி விழும் பறவை போல் பறந்து அடித்தல் – 130
- . ஆரியை இருந்தனளா எழுந்தனளா எனத் தெரியாவண்ணம் ஆடல் – 128
- . மானனீகை தேர்க்கால் ஆழிபோல் சுழன்று அடித்தல் – 205
- . மானனீகை உடல் தெரியக் கை தெரியாவண்ணம் சுழன்று அடித்தல் – 211
படம் 3
தொகு- . அயிராபதி கூனி இடையிடையே கைத்தட்டல் – 82
- . மானனீகை இடையிடையை விரல் நொடித்தல் – 239
- . மானனீகை இடையிடையே நெற்றி வியர்வையைத் துடைத்தல் – 232
- . மானனீகை அல்குல் துகிலை நெறிப்படுத்திக்கொள்ளுதல் – 231
- . அயிராபதி கூனி இடையில் குழலில் பூ முடித்தல் – 87
- . மானனீகை மாலை கட்டிக்கொண்டே அடித்தல் – 235-238
- . மானனீகை அணிகலன் திருத்திக்கொண்டே அடித்தல் – 237
- . மானனீகை தரையில் கிடந்த பந்தை காலால் தட்டி எண்ணிக்கொண்டே பந்தடித்தல் – 237
- . மானனீகை அடித்த 21 பந்துகள் சாரிசாரியாகச் சென்றன – 242
- . விச்சுவலேகை குறளி காம்பிலை காற்றில் இறங்குவது போலப் பந்தை இறங்கச் செய்தல் – 111
- . மானனீகை சூறாவளி போல் பந்துகளை இறங்கச் செய்தல் – 200
- . விச்சுவலேகை குறளி பந்துகள் பக்கம்-மாறி வருமாறு அடித்தல் – 108
- . விச்சுவலேகை அருவிப் பரப்பு போல் பந்துகளைப் பரந்து இறங்குமாறு செய்து அடித்தல் – 100
- . விச்சுவலேகை பந்துகளைப் பாம்பு போல் நெளிந்திறங்கச் செய்தல் – 110
- . விச்சுவலேகை பயதுகளைக் குருவிபோல் அங்குமிங்குமாகப் பறந்து வருமாறு அடித்தல் - 100
மேற்கோள் நூல்
தொகு- பெருங்கதை, உ.வே.சாமிநாதையர் பதிப்பு, நான்காம் பதிப்பு, 1968