அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.

அம்மானை விளையாட்டு

ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப்பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. இணைப்பு ஓவியமும் அவர்கள் விளையாடிய பாங்கைப் காட்டுவதேயாகும்.

மேலும் பெண்பற் பிள்ளைத்தமிழில் கடை மூன்று பிரிவுகளில் முதலானதாகும். சான்றாக - அம்மானை, நீராடல், ஊசல் என்பதாகும்.

மூன்று பேர் விளையாடுவதாலும், அம்மானைப் பாடல் மூன்று பேர் பாடுவதாக அமைந்துள்ளமையாலும் இதனை மூவர் அம்மானை என்றும் குறிப்பிடுகின்றனர். [1] [2]

அமைப்பு தொகு

மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, அரசன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டே “ அம்மானை “ விளையாட்டாக அமைந்தது. இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி 'அம்மானை' என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இதுவே 'அம்மானை' விளையாடும் முறையாகும். சான்றாகத் திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,

முதற்பெண் (பொதுச்செய்தி)

வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.

இரண்டாவது பெண் (வினா)

அவ்வாறான திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரேயானால் சீதையை மணந்தது ஏன்.?

மூன்றாவது பெண் (விடை)

சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் என்னும் இருபொருள் பட விடை கூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.

சிலப்பதிகாரத்தில் அம்மானை தொகு

கி.பி.2 ஆம் நூற்றாண்டில் அம்மானை முதன் முதலாக இலக்கிய வடிவம் பெற்றது. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தை முதன்முதலில் இலக்கியத்தில் பதிவு செய்த இளங்கோவடிகளே அம்மானையையும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் 'அம்மானை வரி' என்ற பகுதியில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளது. இப்பாடல்களில் சோழ மன்னர்கள், மனுநீதிச் சோழன், கரிகால் சோழன், சிபி மன்னன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோரின் அருஞ் செயல்களைப் பாடி அவர்களை அடைய வேண்டும் என்று மூவர், சோழர்களின் தலைநகரான பூம்புகார் நகரைப் பாடுவதாக அமைந்துள்ளது.

மாணிக்கவாசகரின் திருவம்மானை தொகு

மாணிக்கவாசகர் அருளிச் செய்த அம்மானைப் பாட்டு திருவாசகத்தின் ஒரு பகுதியாக 'திருவம்மானை' என்று விளங்குகிறது. இது இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடி, ஆடிய அம்மானையாதலால் 'திரு' என்று அடைமொழி கூட்டி திருவம்மானை எனப்பட்டது. இப்பாட்டு பலர் நின்று தத்தம் முறை வரும்போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருக்கின்றது. எனவே இவ்விளையாட்டில் மூவர் என்ற வரையறையின்றி சூழ்நிலைக்கேற்ப எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாமெனக் கொள்ளலாம். மாணிக்கவாசகர், அரசன், வள்ளல்களன்றி இறைவன் அருளை வேண்டி அம்மானையாகப் பாடியுள்ள முறை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களாகப் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

குமரகுருபரர் இவ்வம்மானைப் பாடல்களைத் தாம் பாடிய மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம் ஆகிய நூல்களில் ஒரு கலம்பக உறுப்பாக வைத்துப் பாடியுள்ளனர். குமரகுருபரர் தாம் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மையின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பத்து அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் தொகு

கி.பி.1640 ஆம் ஆண்டைச் சேர்ந்த இராமப்பய்யன் அம்மானை மூலம் நாயக்கர் வரலாற்றை அறிய முடிகிறது.[3] கிறித்துவத் தமிழ்த் தொண்டரான வீரமாமுனிவர் 'கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை' என்ற நூலையும், இசுலாமியத் தமிழ்த் தொண்டரான உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர் 'அம்மானை' என்ற நூலையும், சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக் கொண்டு 'பரத்தியர் அம்மானை' என்ற நூலையும் பாடியிருக்கின்றனர்.

புகழேந்தி [4] பாடிய அம்மானைப் பாடல் தொகு

  • செப்பலோசை என்னும் வெண்பா ஓசை குன்றாமலும், குன்றிய கலிநடையிலும் நாற்சீர் அடிகளால் எளிய தமிழில் எழுதப்பட்ட பாடல்கள்.

எடுத்துக்காட்டு

செப்பலோசை நடை
வெந்தசோ றுண்டு விதமறியாப் பஞ்சவர்கள்
பச்சிலையும் காய்கனியும் பாத்துண்ணும் பஞ்சவர்கள் [5]
சித்திரைக்குச் சித்திரையில் சீரார் பவுரணையில்
விரதமது தானிருந்து வெண்பட்டுத் தானுடுத்தி [6]
கலி என்னும் துள்ளலோசை நடை
அழகில் மதனரடி அரிவையர்க்கு மணவாளர்
அருச்சுனரைப் பார்த்தாலே அருங்களைகள் தீர்ந்துவிடும் [7]

மேற்கோள் தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 32. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 303. 
  3. தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி
  4. 15ஆம் நூற்றாண்டு
  5. பஞ்சபாண்டவர் வனவாசம்
  6. சித்திரபுத்திர நாயனார் கதை
  7. அல்லியரசாணி மாலை

இதனையும் பார்க்க தொகு

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மானை&oldid=3064116" இலிருந்து மீள்விக்கப்பட்டது