பனிவீழ்ச்சி

பனிவீழ்ச்சி (Icefall) என்பது ஒப்பீட்டளவில் கூடிய வேகத்துடன் செல்வதும், வெடிப்புகளுடன் கூடிய ஒழுங்கற்ற முறையிலான மேற்பரப்புடன் கூடியதுமான பனியாற்றின் பகுதியாகும். பனியாற்றுப் படுகையின் சரிவு கூடும்போது அல்லது ஒடுங்கும்போது பனிவீழ்ச்சி ஏற்படுகின்றது. பெரும்பாலான பனியாறுகள் ஒரு ஆண்டுக்குச் சில நூறு மீட்டர்கள் என்னும் வேகத்திலேயே நகர்கின்றன. ஆனால் பனியருவிகள் ஆண்டுக்கு கிலோமீட்டர்களில் அளக்கக்கூடிய வேகத்துடன் செல்கின்றன. இவ்வாறான வேகத்தில் செல்லும்போது ஏற்படும் நகர்வுகள் பனிக்கட்டிகளின் நெகிழ்வுத்தன்மை மூலம் அடக்கப்பட்டு விடுவதில்லை. பனிக்கட்டிகள் வெடித்துப் பிளவுகள் ஏற்படுகின்றன. ஒன்றையொன்று வெட்டும் பிளவுகள் பனிக்கட்டி உடைதூண்களையும் (serac) உருவாக்குகின்றன. இந்த நடப்புகள் பலகாலம் வெளியில் தெரியாமலேயே நடைபெறலாம். ஒரு நாள் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலேயே தகர்ந்து விழவும் கூடும். இந் நிகழ்வுகள் மலையேறுபவர்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பனவாக இருக்கின்றன.

ஐக்கிய அமெரிக்காவின், வாசிங்டன் மாநிலத்தின் மவுண்ட் பேக்கரில் உள்ள ரூசுவெல்ட் பனியாற்றில் உள்ள 730 மீட்டர் (2,400 அடி) பனியருவி (நடு)

பனியருவிகளுக்கு அடியில் படுகைகள் சரிவு குறைந்து மட்டமாகலாம், அல்லது ஒடுக்கம் குறைந்து அகலமாகலாம். அப்போது பனிவீழ்ச்சிகளின் வேகம் குறைந்து, மேற்பரப்பின் வெடிப்புகள் மூடப்பட்டு, மேற்பரப்புகள் நடப்பதற்கு ஏற்றவகையில் மாறவும் கூடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிவீழ்ச்சி&oldid=3084201" இலிருந்து மீள்விக்கப்பட்டது