பனி

(பனிக்கட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் திண்மப் பொருளே பனி (Ice) ஆகும். இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.

பனிக்கட்டி
நீர்த்தாரை உள்ள இடத்தில் குளிர் அதிகமாகி உறைநிலைக்குப் போகும்போது, நீரானது மேல்நோக்கி தெறிக்கும் நிலையிலேயே உறைந்திருக்கின்றது

பனியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து வளிமண்டலத்தினூடாக விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் பனித்தூவி (Snow or Snowflakes) எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை (Hail) எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் கூரான ஈட்டி போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை பனிக்கூரி (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனி சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை பனியாறு (Glacier) என்பர். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனியாக (Sea ice) மாறும். நீராவியானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனித்தூளாக உறைந்த நிலையில் காணப்படும்போது அதனை பனிப்பூச்சு (Frost) எனலாம். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் பனிவிரிப்பு (Ice sheet) எனவும் அழைக்கப்படும் [1][2][3].

பனியானது புவியின் காலநிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர குளிர்கால விளையாட்டுக்கள், குளிர்பானங்கள் தயாரிப்பு, பனிச் சிற்பம் செய்யும் கலை போன்ற பல பண்பாட்டுசார் பயன்களைத் தருகின்றது. பனியிலிருந்து பெறப்படும் பனி உள்ளகங்கள், நீண்டகால அடிப்படையில் புவியில் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றங்களை அறியவும், அதன்மூலம் காலநிலையின் காலவரிசையை அல்லது வரலாற்றை அறியவும், அதனை ஆய்வு செய்வதனால், தற்கால அல்லது எதிர்கால காலநிலையை விளைவு கூறவும் உதவுகின்றது.

படத்தொகுப்பு

தொகு

பனித்தூவி

தொகு

பனிக்கூரி

தொகு

பனிப்பூச்சு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Benn, Douglk (1998). Glaciers and Glaciation. London: Arnold. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-58431-9. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help); Unknown parameter |unused_data= ignored (help)
  2. Bennett, Matthew (1996). Glacial Geology: Ice Sheets and Landforms. Chichester, England: John Wiley and Sons Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-96345-3. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help); Unknown parameter |unused_data= ignored (help)
  3. Greve, R.; Blatter, H. (2009). Dynamics of Ice Sheets and Glaciers. Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-03415-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-03414-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி&oldid=3651080" இலிருந்து மீள்விக்கப்பட்டது