பன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் நடுவம்
பன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் நடுவம் (International Information Centre for Terminology) 1971 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவினால் நிறுவப்பட்டது. கலைச்சொல்லியலில் பன்னாட்டு ஒத்துழைப்பை ஆதரிப்பதும், அதை ஒருங்கிணைப்பதுமே இந்த நடுவத்தின் நோக்கம்."[2] இந்த நடுவத்தைச் சுருக்கமாக "இன்ஃபாடேர்ம்" (Infoterm) என்று அழைப்பது வழக்கம். தேசிய, பன்னாட்டு, பிரதேச அமைப்புக்களும், கலைச்சொல் தொடர்பான அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் அரசாங்க மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்த நடுவத்தில் உறுப்பினராக உள்ளன.[2] ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் இருந்து இதற்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
உருவாக்கம் | 1971 |
---|---|
வகை | அரச நிறுவனம், அரசு சார்பற்ற நிறுவனம் |
தலைமையகம் | வியன்னா (ஆசுத்திரியா) |
ஆட்சி மொழி | ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன் |
தலைவர் | Albina Auksoriūtė[1] |
வலைத்தளம் | www.infoterm.info |
வரலாறு
தொகு1930களின் தொடக்கத்தில், ஆசுத்திரியாவின் வீசல்பர்க்கில், தொழிலதிபரான யூஜீன் வூசுட்டர், தனது பொறியியல் தொழிலகத்தின் ஒரு பகுதியாக கலைச்சொல்லியல் ஆய்வுகளுக்காக ஒரு தனிப்பட்ட நடுவம் ஒன்றை நடத்தி வந்தார். பன்னாட்டுத் தொழில்நுட்பத் தொடர்பாடல் குறித்த இவரது ஆய்வுகள், 1936ல் பன்னாட்டுத் தர நிறுவனத்தின் கீழ் கலைச்சொல் தரப்படுத்தலுக்கான தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைப்பதற்கு வித்திட்டன. 1950களிலும், 1960களிலும் வூசுட்டர், பொதுக் கலைச்சொல்லியற் கோட்பாடு என இன்று அழைக்கப்படும் கோட்பாடு ஒன்றை உருவாக்கினார். 1951 ஆம் ஆண்டில், ஆசுத்திரியத் தர நிறுவனம், தனது கலைச்சொல்லியல் கொள்கைக்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குமான பொதுச் செயலராக வூசுட்டரை நியமித்தது. இவரது முன்னோடி நடவடிக்கைகளின் பெறுபேறாக, 1971ல் யுனெசுக்கோவும், ஆசுத்திரியத் தர நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு "பன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் நடுவத்தை" நிறுவின. இந்த மையம், வூசுட்டர் வழி நடத்திவந்த செயலகத்திடம் இருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றுவந்தது. 1977ல் வூசுட்டர் இறந்தார். 1982ல் அவர் விருப்புறுதிக் கொடைகளாக விட்டுச் சென்றவற்றை "நடுவம்" பொறுப்பேற்றுக்கொண்டது. 1996 ஆம் ஆண்டில், பன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் நடுவம், தனியான, இலாப நோக்கற்ற பன்னாட்டு அறிவியல் அமைப்பாக ஆனதுடன், வியன்னாப் பல்கலைக் கழகத்தில், யூஜீன் வூசுட்டர் ஆவணக் காப்பகத்தையும் நிறுவியது.
செயற்பாடுகள்
தொகுகலைச்சொல்லியல் தொடர்பான தொடர்பாடலுக்கும், அறிவுப் பரிமாற்றத்துக்குமான உதவிகளை வழங்குவதற்காகப் பன்னாட்டளவில் கலைச்சொல்லியல் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதே பன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் நடுவத்தின் முக்கிய நோக்கம். கலைச்சொல்லியலில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு, கலைச்சொல்லியல் கொள்கை, கலைச்சொல்லியல் தரவுகள் தொடர்பிலான சட்ட அம்சங்கள், கலைச்சொல் தரவுத்தள மேலாண்மை, கலைச்சொல் தரப்படுத்தல் என்பன மையத்தின் முக்கிய நடவடிக்கைகள்.
பன்னாட்டுத் தர நிறுவனம்
தொகுபன்னாட்டுக் கலைச்சொல்லியல் தகவல் நடுவம், பன்னாட்டுத் தர நிறுவனத்தின் 10 குழுக்கள் அல்லது துணைக் குழுக்களில் பங்குபற்றுகிறது. அவை,
- ISO/IEC JTC1, அதன் துணைக்குழுக்கள் JTC 1/SC 32, JTC 1/SC 36 என்பன.
- TC 12, TC 46/SC 4 என்பன.
- ISO/TC 37, அதன் துணைக்குழுக்கள் TC 37/SC 1, TC 37/SC 2, TC 37/SC 3 and TC 37/SC 4.
வெளியிணைப்புக்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Infoterm Executive Board, 28 November 2011. Accessed 2012-06-15.
- ↑ 2.0 2.1 Infoterm website, Vienna, 2011. Accessed 2012-06-14.