பன்னீர்ச் செம்பு

பன்னீர் செம்பு என்பது பித்தளையில் அல்லது வெள்ளியினால் ஆக்கப்படும் தமிழ் பண்பாட்டோடு சேர்ந்த செம்பு வகையைச் சார்ந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். கிண்ணத்தைப் போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு காணப்படும்.

பயன்பாடும் பண்பாட்டு முக்கியத்துவமும் தொகு

பொதுவாகத் தமிழ் பண்பாட்டு மரபில் நிறைகுடம் வைத்தல் என்பது ஒரு சுப தின சம்பிருதாய நிகழ்வாகும். அது ஒரு சுபிட்சத்தை வரவேற்கும் மங்கல நிகழ்வைக் குறிப்பாகக் சுட்டி நிற்கின்றது. அதில் வைக்கப் படுகின்ற நிறைகுடம், குங்குமம், சந்தனம், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு, குத்துவிளக்கு, ஊதுபத்தி முதலானவற்றோடு இப் பன்னீர் செம்புக்கும் ஒரு தனி இடம் இருக்கின்றது.

இதற்குள் வாசனை கலந்த நறுமண நீர் ஊற்றி வைக்கப் படும்.அந் நறுமண நீரைப் பன்னீர் என அழைப்பர். அதனால் இப்பாத்திரத்துக்கு பன்னீர் செம்பு என்பது பெயராயிற்று. சுப தினத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம், கற்கண்டு கொடுத்து அவர்களை உபசரித்தல் மரபாகும்.

பன்னீர் தெளித்தல் என்பது மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

பருவமடைந்த பெண்ணுக்கான இந்துமதச் சடங்கின் போதும் அக் கன்னிப் பெண்ணின் கையில் நிறைகுடம் அல்லது பன்னீர் செம்பு கொடுப்பது ஈழத்துத் தமிழர் வழக்கம். அது ஒரு மங்கலத்தினதும் முழுமையினதும் நல் வரவு ஒன்றுக்கான வரவேற்பினதும் அடையாளமாகக் அக் கன்னிப் பெண்னின் கையில் அது கொடுக்கப் படுகின்றது.

இந்தியாவில் இடம்பெறும் இந்துத் திருமண நிகழ்வுகளின் போதும் குறிப்பாக நலுங்கு நிகழ்ச்சியின் போது மணமகள் மணமகனுக்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம் இடுவதும் அதுபோல மணமகள் மணமகனுக்குச் செய்வதும் சம்பிருதாய நிகழ்வாகும்.

ஈழத்தின் இந்துத் தமிழ் திருமண நிகழ்வுகளில் மணமகளைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு முன்னால் மணமகனின் பெற்றோருக்கு மணமகளின் பெற்றோர் பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம் இட்டு விடுவதும் பின்னர் மணமகனின் பெற்றோர் மணமகளின் பெற்றோருக்கு அதனைத் திருப்பிச் செய்வதும் வழக்கம்.

இன்றும் புழக்கத்தில் இருக்கின்ற செம்பு இனத்தைச் சார்ந்த இச் சாதனம் ஒருவருக்கு மரியாதை செய்வதற்காக - ஒருவரை அல்லது ஒன்றினை வரவேற்கும் ஒரு சாதனமாக - இன்றும் அது நிறைகுடக் குடும்பத்தோடும் தமிழியல் வாழ்வினோடும் சேர்ந்திருக்கின்றது.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னீர்ச்_செம்பு&oldid=2943647" இலிருந்து மீள்விக்கப்பட்டது