பித்தளை
பித்தளை (ஆங்கில மொழி: Brass) என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.

வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.
பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.
தீப்பொறிகள் ஏற்படக்கூடாத சூழ்நிலைகளில், குறிப்பாக எரியக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருட்களுக்கு அருகில் பயன்படுத்தப்படும் கருவிகளில் பித்தளை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.[1]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hand Tools – Non-sparking tools". Canadian Center for Occupational Health and Safety. 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.