குத்துவிளக்கு

(குத்து விளக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும் இந்த வகை விளக்கு, சமய சார்பான சடங்குகளிலும், மற்றும் பொது விழாக்களிலும் இடம் பெறுகின்றன.

குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது

குத்து விளக்கின் அமைப்பு தொகு

 
மயில் முகங்கொண்ட குத்துவிளக்கு
 
அன்னப்பட்சி முகங்கொண்ட குத்துவிளக்கு

வட்ட வடிவமான அடியில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரங்களைக் கொண்ட தண்டு குத்து விளக்கின் தலைப்பகுதியைத் தாங்கியுள்ளவாறு அமைந்ததே குத்து விளக்கின் அமைப்பாகும். தலைப் பகுதியும் வட்ட வடிவமானதே. இவ் வட்ட வடிவத்தின் மையப் பகுதியில் கலசம் போன்ற உச்சிப் பகுதி பொருத்தப்பட்டிருக்கும். இக் கலச வடிவம் வட்டத் தலைப் பகுதியுடன் பொருந்தும் இடத்தைச் சுற்றிய பகுதி குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவே இவ்விளக்கின் எண்ணெய் தாங்கியாகும். இதன் வட்ட வட்ட வடிவான விளிம்பிலிருந்து சமமான இடை வெளிகளில் அமைக்கப்பட்ட ஐந்து நீட்சியான அமைப்புக்கள் இருக்கும். இவையே விளக்கின் சுவாலையை ஏற்றுவதற்கான திரிகளைக் கொண்டிருக்கும் இடமாகும். முன்னர் குறிப்பிடப் பட்ட கலசம் போன்ற உச்சியமைப்பில் சில சமயங்களில் பலவகையான அலங்கார வடிவங்களும், உருவங்களும் பொருத்தப்படுவதுண்டு. பொதுவாகப் பெரிய அளவிலான விளக்குகள், அன்னப் பட்சி, மயில் போன்ற உருவங்களையும், சில விளக்குகளில், தெய்வ உருவங்களையும் இவ்விடத்தில் கொண்டிருப்பதைக் காணலாம்.

குத்துவிளக்கின் தத்துவம் தொகு

குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.

தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் தொகு

பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். இவ்வுலோகம் வேண்டிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் உருக்கி வார்க்கப்பட்டுப் பின்னர் அதனை வெளியில் எடுத்துக் கண்ணுக்குத் தெரியக் கூடிய பகுதிகள் மினுக்கம் செய்யப் படுகின்றன. சுலபமாக உருக்கி வார்க்கக் கூடிய தன்மையும், தங்கத்தை ஒத்த அதன் நிறமும் இவ்வுலோகம் விரும்பப் படுவதற்கான காரணங்களாகும். இக் காலத்தில் துருவேறா உருக்கையும் குத்து விளக்குகள் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சிறிய விளக்குகளே இவ்வாறு செய்யப்படுகின்றன. இவ்வுலோகத்தைப் பயன்படுத்தும் போது, உருக்குத் தகடுகளையே பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய விளக்குகள் விலை குறைவானவையாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகா.

எரி பொருள் தொகு

குத்து விளக்கில் தாவர நெய்களே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில்களில் முற்காலத்தில் பசு நெய்யையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்துவிளக்கு&oldid=3396607" இலிருந்து மீள்விக்கப்பட்டது