பப்பரர்

பண்டைய இனக்குழுவினர்

பப்பரர் (Barbara) பாரம் சுமந்து செல்பவர்கள். அவர்கள் “அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர், பரிந்த காவினர், பப்பரர் ஏகினார்- திருந்து கூடத்தைத் திண் கணையத்தொடும், எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே - 37 ” என்று பப்பரர்கள் பற்றிய குறிப்பு ஒன்று கம்பராமாயணம் பால காண்டம் எழுச்சிப்படலத்தில் உள்ளது.[1] மேலும், “பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர், கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து, வேந்தன், துப்புடைச் சேனை யாவும் தொலைவுறத் துணித்தலோடும், வெப்புடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார் - 17” என பப்பரர் முதலான பல கூலிப்படைகளைக் கம்பராமாயணம் பாலகாண்டம் கைக்கிளைப்படலம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது[2].

பப்பரர் என்ற அண்டை நாட்டினர் காஞ்சிநகர நாகரிகத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்களது படையும் மதுரையை குலபூண பாண்டியனது படையில் கூலிப்படையாகச் சேர்ந்து இருந்தனர் என்ற குறிப்பு திருவிளையாடல் புராணத்தில் காணப்படுகிறது. அணிதிரண்டு நின்ற படைகளை(1) அண்டைநாட்டுப் படைகள் என்றும்(2) காஞ்சி நாகரிகத்தை உடைய “நம்முடைய நாட்டோர்” எனவும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து சேனாதிபதி சாமந்தன் குலபூடணபாண்டிய மன்னனுக்கு இவர்கள் என்னென்ன தேசத்தவர்கள் என மெய்காட்டி அறிவிக்கிறான்.

“கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர் அணிவகுந்து நின்றனர்.  இவர்கள் தமிழரல்லாத அண்டை நாட்டினர் என மெய்காட்டிச் சாமந்தன் பாண்டியனுக்கு அறிவித்தான்.

மேலும், காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர்.  இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் நம்முடைய (தமிழ்) நாட்டோர் ஆவர் எனவும் மெய்க் காட்டிச்  சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு அறிவித்தான்.[3] இதனால் அனந்தகுண பாண்டியனின் மகனாகிய குலபூடணபாண்டியன் காலத்திலேயே பப்பரர்கள் தமிழ்நாட்டில் கூலிப்படையாகப் போர் செய்துள்ளனர் என அறிய முடிகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. "கம்பராமாயணம்/பால காண்டம்/எழுச்சிப் படலம் - விக்கிமூலம்". ta.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.
  2. "கம்பராமாயணம்/பால காண்டம்/எழுச்சிப் படலம் - விக்கிமூலம்". ta.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.
  3. "திருவிளையாடற் புராணம் - மாயப் பசுவை வதைத்த படலம் முதல் உலவாக்கோட்டை அருளிய படலம் வரை". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பரர்&oldid=2781727" இலிருந்து மீள்விக்கப்பட்டது