அதிரைஅஹ்மது
இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் "சிறுவர் இலக்கியம்" - சிறு குறிப்பு. அண்மைக் காலத்தில் தமிழில் சிறுவர் இலக்கியம் பற்றிப் பல ஆய்வரங்குகளில் அய்வு வழியாகப் பல சிறந்த கட்டுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு பற்றி, இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடுகளில் சிறு அறிமுகம் மட்டுமே, அல்லது அதுவும் இல்லாமல் நடைபெறுகின்றன. எனவேதான் இச்சிறு கட்டுரை. பதினெட்டு மற்றும் பத்தொண்பதாம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்ட சிற்றிலக்கியங்களுள் பல சிறுவர் இலக்கியங்களாக இருக்கக் காண்கிறோம். அவற்றுள் பிள்ளைத்தமிழ், தாலாட்டு, சிந்து, நொண்டி நாடகம் போன்ற சிற்றிலக்கிய வடிவிலான படைப்புகள் சிறுவர் இலக்கியப் படைப்புகளாக அமையக் காண்கிறோம். இருபதாம் நூற்றாண்டிலும் இஸ்லாமியக் கவிஞர்கள் அரிய பல இலக்கியப் படையல்களை யாத்து, இவ்விலக்கியப் பிரிவுக்கு வளம் கூட்டியுள்ளனர். யாமறிந்தவரையில், இஸ்லாமியச் சிறுவர் இலக்கியச் செம்மல்களாகக் கீழ்க்காணும் புலவர் பெருமக்களையும் கவிஞர்களையும் சுட்டலாம்: ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் (கி.பி. 1635)- பெரிய ஹதீது மாணிக்க மாலை.காயல் ஷேகுனாப் புலவர் - 18 ஆம் நூற்றாண்டு - சொர்க்க நீதி. காலங்குடியிருப்பு மரைக்காயர்ப் புலவர் - எண்ணச் சிந்து. மாப்பிள்ளை லெப்பை ஆலிம் புலவர் (கி.பி. 1817) - தலை பாத்திஹா. கொழும்பு ஆலிம்சாஹிபு - 19 ஆம் நூற்றாண்டு - - ஈமான்-இஸ்லாம் விளக்கம். உவைஸ் நெய்னா லெப்பை ,, - நேர்வழிப் பிரகாசம். அப்துல் மஜீதுப் புலவர் ,, - ஆசாரக் கோவை. இருபதாம் நூற்றாண்டின் குழந்தைக் கவிஞர்கள்: ஷாயிர் அப்துர்ரஹீம் - கத்திக் கப்பல். 'இறையருட்கவிமணி' கா. அப்துல் கபூர் - 'அரும் பூ' முதலானவை. எம்.ஸி.எம். ஸுபைர் (இலங்கை) - மலரும் மனம். காரை இறையடியான் - திருவருட்பாவை. புலவர் அகமது பஷீர் - சிரித்த முல்லை. கவிஞர் அதிரை அஹ்மது - சிறுமிப் பாட்டு. இவ்வாறு இஸ்லாமியத் தமிழ்க் குழந்தை இலக்கியப் படைப்பாளிகளின் பட்டியல் நீளும்.