அழ.பகீரதன்
அழ. பகீரதன் இலங்கையில் பண்டத்தரிப்பு பிரதேசத்திலுள்ள காலையடி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலை உயர்நிலைக் கல்வியை பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியிலும் பெற்று பின் சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வி கற்று சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை இளையர் பட்டத்தினை தமிழியல் துறையில் பெற்றார். படிக்கும் போதே எழுத்துத்துறையில் ஆர்வம் காட்டிய இவர் தனது பதின்மூன்றாவது வயதில் கலைமுத்துக்கள் என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டார். தொடர்ந்து தனது தனிமுயற்சியாக பதினேழாவது வயதில் ரதன் முத்து எனும் கையெழுத்து சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தார்.தொடர்ந்து தனது நண்பர்களுடன் இணைந்து சிறுசுகள் எனும் கையெழுத்து சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தார். கொழும்பில் இருந்து வெளிவந்த புதிய அறிவொளி என்ற சஞ்சிகையிலும் ஆசிரியராக இருந்தார். தொடர்ந்து வெளிவரும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கின்றார். இலங்கை வங்கியில் கடமையாற்றும் இவர் எட்டு இதழ்கள் வெளிவந்த ஊக்கி எனும் இதழின் இணையாசிரியராகவும் இருந்துள்ளார். கவிதையாக்கத்தில் ஈடுபடும் இவரது அப்படியே இரு எனும் கவிதைத்தொகுப்பு 1997 இலும் இப்படியும் கவிதைத் தொகுப்பு 2012 இலும் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடுகளாக வந்துள்ளன. தேசிய கலைஇலக்கியப் பேரவை, காலையடி மறுமலர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளின் நீண்ட கால உறுப்பிராகவும் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.