செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருது

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று நடுவண் அரசு அறிவித்தது. இவ்விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்ற நவம்பர் 2009-இல் முதன் முதலாக செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் தமிழ் அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக அறிவிக்கப்பட்டதில் மூதறிஞருக்கான விருதுகளில், தொல்காப்பியர் விருது 100 வயதான பேராசிரியர் அடிகலாசிரியர் அவர்களுக்கும், குறள்பீடம் விருது அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞரான முனைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டன. இவ்விருதுகள் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் பணம் என்பவற்றை உள்ளடக்கியன. இவற்றோடு 2005-2006ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதுகள் முனைவர் இரா. அறவேந்தன், முனைவர் ய. மணிகண்டன், முனைவர் சி. கலைமகள், முனைவர் வா.மு.செ. முத்துராமலிங்க ஆண்டவர், முனைவர் கே. பழனிவேலு ஆகியோருக்கும், 2006-2007 ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதுகள் முனைவர் சு. சந்திரா, முனைவர் அரங்க பாரி, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் மா. பவானி, முனைவர் இரா. கலைவாணி ஆகியோருக்கும், 2007-2008ஆம் ஆண்டிற்கான இளம் தமிழறிஞர் விருதுகள் முனைவர் அ. செல்வராசு, முனைவர் ப. வேல்முருகன், முனைவர் ஆ. மணவழகன், முனைவர் ச. சந்திரசேகரன், முனைவர் சா. சைமன் ஜான் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டன. இளம் அறிஞர் விருத்தானது சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அறிவிக்கப்பட்ட இவ்விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கும் விழா சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் 28.03.2010 அன்று நடைபெற்றது. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை என்ற தலைப்பிலான கருத்தரங்க தொடக்க விழாவின் ஒரு பகுதியாக தமிழறிஞர்களுக்குப் பொற்கிழிகளையும் வழங்கி சிறப்பித்தார் முதல்வர். இளம் அறிஞர் விருதாளர்களுள் ஒருவரான முனைவர் ஆ. மணவழகன் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர், பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, சங்க இலக்கியத்தில் மேலாண்மை, தொலைநோக்கு, பழந்தமிழர் தொழில்நுட்பம் என்ற நான்கு நூல்களை எழுதியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகளில் வழங்கியுள்ளார். உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்), காந்தள் (தமிழ் மொழிக் கையேடு), சொல்லோவியம் (படவிளக்க அகராதி) போன்ற கணினி-தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்ற இவர் பிறந்த ஊர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஆ._மணவழகன்&oldid=501132" இலிருந்து மீள்விக்கப்பட்டது