"முகநூலும் நண்பர்களும்" 

இரத்த சொந்தங்களை விட வலிமையானது நட்பு. நட்பிற்குள் சாதி மத இன பாகுபாடுகளோ எவ்விதமான ஏற்றத்தாழ்வுகளோ இன்றி" நண்பர்கள்" என்ற ஒரே வட்டத்திற்குள் ஒற்றுமையடைகின்றோம். "உடுக்கையிழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கன்களைவது நட்பு" என்று நட்பின் பெருமையை எடுத்தியம்புகிறார் வள்ளுவர். பண்டைய தமிழ் இலக்கியஙகளிலும் "அதியமான் ஔவையார்" "கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்" போன்ற பல நட்புறவுகளையும் அவர்களின் நட்பின் தியாக உள்ளத்தையும் காணமுடிகிறது. இன்றைய நட்பு எப்படியுள்ளது.குறிப்பாக முகநூல் நட்பு என்பது எப்படிபட்டதாய் உள்ளது?. எனக்கு ஆயிரம் நண்பர்கள் உள்ளனர் என்பது பெருமையல்ல அவர்கள் எத்தகையவர்களாய் உள்ளனர்?. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. உங்கள் அகமாகிய உள்ளத்தின் எண்ணங்களை பிரதிபலிப்பதுதான் உங்கள் முகநூல் பக்கமும். முக நூலில் நாம் பதிவிடும் கருத்துக்கள் மற்றவர்களுக்கு பயன் அளிப்பதாய் இருக்கவேண்டுமே தவிர யார் மனதையும் குறிப்பாக நண்பர்களின் மனம் புண்படும்படியானதாய் ஒருபோதும் இருக்ககூடாது. தவறு செய்த ஒருவரைப்பற்றி கருத்துபதிவிட்டால் இந்த ஜாதியை சேர்ந்தவர் என்றும் இந்த மதத்தை சேர்ந்தவர் என்றும் இந்த கட்சியை சார்ந்தவர் என்றும் மேற்கோள் காட்டி பதிவிடுவதை தவிர்கவும். அப்படி பதிவிடும் போது அதனதன் எதிர் கட்சியையோ மாற்று ஜாதியையோ பிறமத சகோதர்கள் அந்த நண்பர்கள் வரிசையில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனம் புண்படுவதோடு அவர்களில் சிலர் பதிவிட்டவருக்கு பதிலடி கொடுப்பதாய் நினைத்து அவர் சார்ந்துள்ள மதத்திலோ ஜாதியிலோ கட்சியிலோ இதேபோன்ற தவறுசெய்த ஒருவரை குறித்து புகைபடத்தோடு வெளியிடுகின்றனர். இதனால் நண்பர்களுக்கிடையே பிளவு ஏற்படவும் இவன் ஜாதி வெறியன் மதவாதக்காரன் என்ற இழிநிலையை சந்திக்க வேண்டியதுள்ளது. ஆகவே இத்தகைய பதிவுகளை வெளியிடும் போது மனித மிருகமென்றே குறிப்பிடலாம். அனைவருக்கும் மத சுதந்திரம் உண்டு. உங்கள் மதம் குறித்த பதிவுகளை தாராளமாக வெளியிட்டு மகிழ்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.பிறமத நண்பர்களும் விருப்பம் தெரிவிப்பார்கள்.ஆனால் மற்ற மதத்தை விட எங்கள் மதமே உயர்ந்தது என்றும் பிறமத கோட்பாடுகள் தவறு என்றும் கூறும்படியான வாசகங்கள் உங்களுக்கு வாட்ச்அப்பில் வந்து மதப்பற்றுள்ளவனாக இருந்தால் இதை பகிர் என்று கூறப்பட்டிருந்தாலும் தயவு செய்து இத்தகைய வாசகங்களை முகநூலில் பதிவேற்றவேண்டாம்.இத்தகைய செயல்முறைகள் தொடர்ந்தால் நல்ல நண்பர்களின் வட்டத்திலிருந்து நாம் நீக்கப்படுவோம் என்பது கசப்பான உண்மை.

ஜெகநாதன்

சமூக ஆர்வலர்