இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்

இளைய அப்துல்லாஹ்

1985ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ். இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார். 1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதை, சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். 1996, 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார். 2000ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பிய, பிரித்தானிய, மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார். சளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை. அவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர். பாடசாலைக் காலங்களில் இருந்தே அறிவிப்புத் துறையில் ஆர்வங்கொண்ட இளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும், விவரணத் தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார். இளைய அப்துல்லாஹ்வின் இரண்டு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஒன்று சிறுகதைத் தொகுப்பு ‘துப்பாக்கிகளின் காலம்’ இரண்டாவது கவிதை நூல் ‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது. இரண்டு நூல்களின் தலைப்புகளும் வித்தியாசமானவை. தலைப்புக்களே சர்ச்சைக்குரியாக இருந்தன. தேசத்தின் வடுக்கள், வடபுலத்து முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பான அக்கறை அவரின் கவிதைகளில் பிரிதிபலித்து நிற்கின்றன.

பேராசிரியர்- மு -நித்தியானந்தன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இளைய_அப்துல்லாஹ்&oldid=473519" இலிருந்து மீள்விக்கப்பட்டது