புதுமை புத்தாண்டு 2015:

      தினமும்உதிக்கும்அதே சூரியன், எங்கும்பரவிஇருக்கும்அதேகாற்று, பார்த்து, பழகிய அதே மக்கள். இதில் எதுவும் மாற்றமில்லை. பின்னெப்படிபுத்தாண்டை புதிதாய் பூக்கச்செய்வது?
     ஒவ்வோர் ஆண்டையும் எதிர்பார்ப்புகளோடுதான் எதிர்கொள்கிறோம். ஆனால் ஏமாற்றத்துடன்தான் கடந்துசெல்கிறோம். பாதைபுரியாமல் பயணம் செய்த கடந்த ஆண்டுகளைப் போல் 2015- இருந்துவிடகூடாது. பல யுகங்களாகப் பயிரிட்டு வந்த கனவுகளை நனவாக்கி அறுவடை செய்யும் காலமிது. புதிய உலகத்திற்கு விதைகள் பதிக்கும் களமுமிது. 2020-இல் வல்லரசாக மாறும் இந்தியாவிற்க்கு இப்போதே முன்னுரை தொடங்குவோம்.
     இந்த இயந்திரவாழ்க்கைக்கு, சமத்துவத்தை சாகடித்த சலிப்பான வாழ்க்கைக்கு நாம் தான் காரணம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நாம் அனுசரித்த மதக்கோட்பாடும், அரசியல் அமைப்பும், அதன் உத்திகளும்தான் காரணம். இன்றைய உலகமயமாதலும், தாரளமயமாதலும் பலரது மூன்று வேளை உணவைக்கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. எனவே 2015-இல் சட்டத்தைத்திருத்துவதை நிறுத்திவிட்டு வறுமையைத்திருத்துவோம்.
     உழைப்பாளனுக்கும், உழைப்புக்கும் அங்கீகாரம் தேடித்தந்த மார்க்சீயதின் வீச்சுக்கூட இந்தியாவில் இல்லை.... உழுபவன் பட்டினியோடுதான் உழுகிறான். செருப்புதைப்பவன் முட்களோடுதான் வாழ்கிறான். உழைப்பவன் உழைப்பதும். உயர்பவன் உயர்வதும் மாறாதிருக்கிறது. 2015-லாவது உழைப்பவனுக்கு உரிமை வேண்டும் .உழைப்புக்கு மதிப்புவேண்டும்.


    தொழிலாகிப்போன சேவைகளில் முதலிடம் கல்விக்குத்தான். இங்கே திறமை மதிப்பெண்களால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. அதுவும் மனப்பாடத்தால்தான் கிடைக்கிறது. இன்றைய கல்விமுறை,வாழ்க்கை பயணத்தையோ, பாதையையோ, நிர்ணயிக்க உதவிட முடியா நிலையில் இருக்கிறது. 2015-இல் புதிய கல்வி முறை வேண்டும். அது கருணை, நீதி, அன்பு, வீரம், சகிப்புத்தன்மை, விவேகம், முன்யோசனை, சுயநலமின்மை, தியாகம், எதார்த்தம் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.
    நாம் பெரியாரை கடவுளாய் பார்கிறோம். விவேகானந்தரைப் பேச்சாளனாய் புரிந்து கொண்டோம். பாரதியை வெறும் கவிஞனாய் மட்டும்தான் காண்கிறோம். அப்துல்கலாமின் பெருமித மயக்கததில் அவரை பின்பற்ற மறந்துவிட்டோம். அனைத்தையும் எற்றோம்.! ஆனால் தவறாக புரிந்துகொண்டோம். தவறுகளைத் திருத்துவோம். 2015-இல் உண்மையைப் பார்ப்போம்.


   இரண்டாயிரத்து பதினைந்தே! சீற்றமில்லா இயற்கை, போரில்லாத நாடு, பொதுவுடைமை தழுவிய அரசியல், அன்பியல் கலந்த வாழ்க்கை, நல்ல தோர்கடவுள். சாதியற்ற சமுதாயம், சகோதரத்துவம், மனிதம்தொலைக்காத விஞ்ஞானம், மாறாத கலாச்சாரம், மரணிக்காத தமிழ், ஏழ்மையற்ற இந்தியா என எதிர்பார்ப்பு ஏராளமாய் இருப்பினும் எல்லாவற்றையும் ஏமாற்றாமல் கொடு.
   கடந்த காலம் கொஞ்சமாய் கொடுத்து, ஏராளமாய் பறித்துக்கொண்டது. மனித இயந்திரமும், இயந்திர மனிதமும் ஓடிக்கொண்டிருக்கும் காலவெள்ளத்தில் மனிதநேயம் எங்கோ கரை ஒதுங்கிவிட்டது. மனிதனுக்கு மனிதனே எதிரியாகிப்போனான். உறவுகள் உடைபட்டு, ஒவ்வொரு வீடும் தனி நாடாகிக் கொண்டிருக்கிறது. 2015-லும் விஞ்ஞானம் வளரட்டும். அதேசமயம் மனிதம் செத்துவிடக்கூடாது.  உறவுகள் பலப்படட்டும், நாடுகள் இணைந்து வீடாகட்டும்.
   சிந்திப்பவன் மட்டுமே தெளிவடைகிறான். தெளிவானவன் மட்டுமே தைரியமடைகிறான். தைரியமுள்ளவன் நிகழ்காலத்தை வாழ்ந்து வெல்கிறான். தைரியமில்லாதவன் எதிர்காலத்தை நோக்கி ஏங்கிநிற்கிறான். இப்போதிருந்து சிந்திக்கத் தொடங்குவோம். செயல்படத் துணிவோம் .இந்தப்புத்தாண்டைப் புதுமையாய் பூக்கச்செய்வோம்.........
                                                                                                                                    -நவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உண்மைதமிழன்&oldid=1804808" இலிருந்து மீள்விக்கப்பட்டது