வணக்கம்... இது என்னைப் பற்றி நானே பதிவு செய்யும் சுயசரிதை. நான் 1982ஆம் ஆண்டு, ஜீலை மாதம் 14ஆம் நாள் பிறந்தேன். தாயார் பெயர் ஷோபனா. தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி. உடன்பிறந்தோர் நால்வர். மூத்த அண்ணன் பெயர் மணிகண்டன். இளைய அண்ணன் மதன்குப்புராஜ். அக்கா பெயர் தையல்நாயகி. செல்லத்தங்கை சியாமளா. நான் ஒரு சுட்டிக்குழந்தை. மணிகன்டனும் தையல்நாயகியும் பிறந்த சில நாட்களிலே இறந்துவிட்டார்கள். நான் பிறந்தது சென்னையிலுள்ள தரமணியில். சில நாட்களுக்குப் பிறகு, தந்தையின் வேலை நிமித்தமாக, திருவள்ளுருக்கு குடி புகுந்தோம். ஸ்ரீ வெங்கடேஷ்வரா மேல்நிலை பள்ளியில் பள்ளிபடிப்பை தொடங்கினேன். சிறந்த மாணவனாக திகழ முயற்சித்தேன். 1993 டிசம்பர் 10ம் தேதி, தந்தை காலமானதால், ஸ்ரீ லஷ்மி மேல்நிலை பள்ளியில் எட்டாவது வகுப்பிலிருந்து படித்தேன். உயல்கல்வி DRBCCC பள்ளியில் படித்தேன். B.Sc. சேர்ந்து படிக்கும்போதுதான், வேலுார் அடுத்த வாணியம்பாடியில், பொறியியல் இலவசமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கு தீயப்பழக்கங்களை பழகியதால், பாதை மாற நேரிட்டது. அனைவரிடமும் வெறுப்பை மட்டும் சம்பாதித்தேன். தாயை வேதனைப் படுத்தினேன். உடன் பிறந்தோரின் அன்பை இழந்தேன். ஊர் ஊராக சுற்றினேன். வாழ வழி தெரியவில்லை. பட்டினி கிடந்தேன். உடன் படித்த நண்பர்கள் அனைவரும் பெங்களுர், டில்லி, சிங்கப்புர், அமெரிக்கா என உயர்ந்த நிலைக்கு சென்று விட்டனர். அப்போதுதான் வாழ்க்கையைப் பற்றி ஒரு பயம் தோன்றியது. மறுபடியும், முன்னுக்கு வர, நிறைய உழைக்கவேண்டுமே? உதவிக்கு ஆள் இல்லை. வீட்டுக்குச் செல்லவும் பயம். அண்ணனுக்கும் திருமணமாகி விட்டது. அப்போதுதான் திருவண்ணமாலையில் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் அறிமுகம் கிடைத்தது. திருவருட்பிரகாச வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கைகளை பின்பற்றி வாழ்கின்ற அருள்திரு.பாபுசாது அவர்களும், அவருடைய சீடர்களும், என்னிடம் அன்பு காட்டி, அரவணைத்து, வாழ வழி காட்டினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக என்னை, தீய பழக்கங்களிலிருந்து விடுவித்தார்கள். மனிதனாக மாற்றினார்கள். பத்து வருடங்கள் அங்கேயே இருந்தேன். தொண்டு செய்தேன். நாட்கள் கடந்தது. 2013ஆம் ஆண்டு, என் தாயாரோடு வீடு திரும்பினேன். திருமணம் ஆகியிருந்த என் தங்கையையும் சந்தித்தேன். தற்போது நல்ல வேலையில் இருக்கின்றேன். தாயுடன் வசிக்கின்றேன், ஆனந்தமாக. இதுவரை பதிவு செய்துள்ள காலம்: 15.03.2017, 13:05:35. நாட்கள் நகரட்டும்... தொடர்கின்றேன்...