அய்யா போராடி வென்ற உரிமையை இழக்காதே!!

காணிக்கையிடாதீங்கோ

காவடிதூக்காதீங்கோ மாணிக்கவைகுண்டம் வல்லாத்தான் கண்டிடுங்கோ வீணுக்குத்தேடுமுதல் விறுதாவில்போடாதீங்கோ நாணியிருக்காதீங்கோ நன்னறிவுள்ள சான்றோரே..

அய்யா வைகுண்டர் என்று அழைக்கப்படும் முத்துக்குட்டி நாடார் மீது பற்று கொண்டோருக்கு மேற்கூறிய நான்கு வரிகளின் அர்த்தத்தை நான் சொல்ல தேவையில்லை. இதில் இறுதி வார்த்தை சான்றோர் என்னும் சொல், சாணான் எனப்படும் சான்றோரை குறிக்கும். அதாவது சான்றோர் எனப்படும் நாடாரை குறிக்கும்.


அய்யா வைகுண்டரின் வழிபாட்டு இடங்களுக்கு என்ன பெயர் வைப்பது சரி?” இதுவே கேள்வி. பதில் தேடும் பயணமாக இந்த கட்டுரை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1800 களில்) நமது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் மன்னரின் அரசாட்சியின் ஒரு அங்கமாக இருந்தது என்பது நாம் அறிந்ததே. அன்றைய காலகட்டத்தில் திருவிதாங்கூரில் சாதி வேறுபாடுகள் இந்து மனு தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அதன்படி சாணார்(சான்றோர்) அல்லது நாடார், பறையர், சாம்பவர், புலையர், ஈழவர், முக்குவர் போன்ற சாதியினர் திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்கள் அமைந்துள்ள தெருக்களில் கூட நுழைய அனுமதிக்கப்படாத தீண்டத்தகாத மக்களாக நடத்தப்பட்டார்கள். மேற்கூறிய சாதியை சேர்ந்த பெண்களுக்கு மார்பை சேலை அணிந்து மறைத்தல், இடுப்பில் குடம் தூக்குதல், பொன் நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டிருந்தன.

தங்களை மேல் ஜாதியினர் என்று கருதிக்கொண்டவர்களால், கீழ்ஜாதிகளாக வரையறுத்து வைக்கப்பட்டிருந்த ஜாதிகளான, நாடார், ஈழவர், பறையர், புலையர், குழுவர், சாம்பவர், வள்ளுவர் போன்ற ஜாதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பை மறைக்க வரி செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண்கள் தங்கள் மார்பை மறைத்து கொள்ளலாம் என்று கர்னல் மன்றோ 1812 ஆம் ஆண்டு அனுமதி வழங்கினார். அந்த அனுமதியின் அடிப்படையில் தங்கள் மானம் காக்க கீழ் ஜாதியாக ஒதுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள். அவ்வாறு மாறிய பெண்கள் தங்கள் மார்பை(மானத்தை) மறைத்து கொள்வதால் கூட, தங்கள் சமூக அந்தஸ்து பாழ்பட்டு விடும் என்று நினைத்த உயர் ஜாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். பள்ளிகளும் கிறிஸ்தவ ஆலயங்களும் தீக்கிரையாயின. பல வன்முறை சம்பவங்கள் வெடித்தன. ஆடைக்கட்டுப்பாடுகள் மேற்கூறிய ஜாதிகளை சேர்ந்த ஆண்களுக்கும் இருந்தது. அவர்கள் இடுப்புக்கு கீழும் முழங்காலுக்கு மேலும் மட்டுமே பருமனான இழைகள் கொண்ட துண்டால் மறைத்து கொள்ளலாம். ஆண்கள் தலைப்பாகை அணியவும், மீசை வைக்கவும், வளைந்த பிடி வைத்த குடைகள் பயன்படுத்தவும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இவ்வளவு ஏன்?. உயர் சாதியினராக தங்களை கருதி கொண்டவர்களின் மொழியை பேச கூட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது ( உதாரணமாக சாப்பிட போகிறேன்” என்று சொல்ல கூடாது. கஞ்சி குடிக்க போகிறேன் அல்லது வெள்ளம் குடிக்க போகிறேன்” என்றுதான் சொல்ல முடியும்). ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கோவில் கட்டுதல் போன்ற நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட ஜாதியினரின் குழந்தைகள் பலியிடப்பட்டார்கள். தங்கள் குழந்தைகளுக்கு இந்து கடவுள்களின் பெயரை சூட்டுவதற்கு கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. பேச்சி, சுடலை, பிச்சாண்டி போன்ற பெயர்களை மட்டுமே சூட்டிக் கொள்ள இயலும். அந்த கால கட்டத்தில்தான் 02.03.1809 அன்று அன்றைய தென் திருவிதாங்கூரின் கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்றைய அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சாஸ்தாங்கோயில் விளை என்னும் கிராமத்தில், பொன்னு நாடார், வெயிலாள் அம்மையார் தம்பதியருக்கு மகனாக அய்யா வைகுண்டர் பிறந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சாஸ்தாங்கோயில் விளை என்னும் கிராமமே இப்போது சுவாமி தோப்பு என்று அழைக்கப்படுகிறது. அய்யா வைகுண்டருக்கு பெற்றோர் சூட்ட ஆசை கொண்ட பெயர் முடி சூடும் பெருமாள் என்பதாகும். திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டுக்கு பயந்த வைகுண்டரின் பெற்றோரால் அவருக்கு முத்துக்குட்டி என்ற பெயரைத்தான் சூட்ட முடிந்தது. இப்படிப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகளும் அநியாயமான கட்டுப்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் 1833 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர், தன் தோல் வியாதியை நீக்க திருச்செந்தூர் சென்று அங்கு இறையறிவு பெற்று தன் பொது வாழ்க்கையை தொடங்கினார். அய்யா நாடார், பறையர், கம்மாளர், வாணியர், தோல் வணிகர், மறவர், பரதவர், சக்கிலியர், துலுக்கர், பட்டர் உள்ளிட்ட பதினெட்டு ஜாதியினருக்கு கடவுளாக வந்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது. உழைக்கும் மக்கள் மீது நியாயமற்ற வரிகளை சுமத்தி கருவூலங்களை நிரப்பிய திருவிதாங்கூர் மன்னரின் அரசாட்சியை எதிர்த்தார் முத்துக்குட்டி நாடார். மக்களுக்கு நல் போதனைகளை வழங்கினார்.

பனை கேட்டடிப்பான் பதனீர் கேட்டடிப்பான் கனத்த கற்கண்டு கருப்பட்டி கேட்டடிப்பான் நாருவட்டி யோலை நாள்தோறுங்கேட்டடிப்பான் வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான் கொடு வாவெனவே கூழ் பதனீர் கேட்டடிப்பான்

சாணான் கள்ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம் வீணாக சான்றோரை விரட்டியடிப்பான் காண் சாணுடம்பு கொண்டுதரணிமிக ஆண்டாலும் வீணுடம்பு கொண்டு விரித்துரைத்தே பாராமல் சாணான் சாணானெனவே சண்டாள நீசனெல்லாம் கோணா துளத்தோரை கோட்டி செய்தேயடித்தான்

என்ற அகிலத்திரட்டு அம்மானையில் உள்ள வரிகள் அன்றைய காலகட்டத்தின் சாதிய அடக்குமுறை அவலங்களை படம் பிடித்து காட்டுகின்றது. மன்னனுக்கு எதிராக பேசுவது தெய்வ நிந்தனை என்று கூறி 1838 ஆம் ஆண்டு 110 நாட்கள் திருவனந்தபுரத்தில் அய்யா சிறை வைக்கப்பட்டார். 1839 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளிவந்த அய்யா வைகுண்டர் “அவன் பட்டம் பறித்திடுவேன், கொட்டி கலைத்திடுவேன்” என்று வீர முழக்கம் இட்டார். திருவிதாங்கூர் மன்னரின் ஆளுமைக்குட்பட்ட இந்து திருக்கோவில்களில் பொது மக்களிடம் (எல்லா சாதியினரிடமும்) வசூல் செய்த வரிப்பணத்தில், ஊட்டுப்புரைகள் என்ற உணவு சாலைகள் நிறுவி, அதில் உயர் ஜாதியினருக்கு மட்டுமே இருவேளை இலவசமாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரையறுக்கப்பட்ட நாடார் முதலான ஜாதியினர் திருக்கோவில்கள் இருக்கும் தெருக்களில் கூட அனுமதிக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூர வேண்டியது அவசியமாகிறது. இந்த கொடுமைகளை எல்லாம் கண்டு வெகுண்டெழுந்தார் அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி நாடார். உழைக்கும் மக்களை சாதி மத பேதமின்றி ஒன்றுபடுத்தி அவர்களை சமபந்தி உணவு உண்ணவும், தனது நற்சிந்தனை கொள்கைகளை பரப்பவும் பல இடங்களில் சிறிய வழிபாட்டு இடங்களான நிழற்தாங்கல்களையும், பெரிய வழிபாட்டு இடங்களான பதிகளையும் அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி நாடார் நிறுவினார். இதுவே அய்யா வைகுண்டர் என்று அழைக்கப்படும் போராளி முத்துக்குட்டி நாடார் அவர்கள் நிறுவிய நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகளின் வரலாறு.

அரும்பாடு பட்டு அய்யா வைகுண்டர் என்னும் சமுதாய போராளி முத்துக்குட்டி நாடார் வென்ற உரிமைதான் நிழற்தாங்கல்களும், பதிகளும்”.


வரலாற்றை என் சகோதர சகோதரிகளுக்கு நினைவு படுத்துவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். வரலாற்றில் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நடக்காதிருக்க நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம். ஏனென்றால், வரலாறு ஒருமுறை நடந்தால் அது சோகம், மீண்டும் நடந்தால் கேலிக்கூத்து.


அய்யா வைகுண்டரின் சீடர் “அரிகோபால சீடர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை, லஜபதி ராய் அவர்கள் எழுதிய “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?, “கன்னியாகுமரி மாவட்ட வரலாறு” ஆகிய புத்தகங்களின் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இந்த கட்டுரையை வரைந்துள்ளேன்.

சக்தி மீனா....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சக்தி_மீனா&oldid=3455218" இலிருந்து மீள்விக்கப்பட்டது