மெய்யறிவு

தொகு

தான் தன்னை உணர்தல்

மெய்யான உடலில், மனம் பெற்ற இருளை, அறிவான சுடரால், மருள் புகுந்த சிந்தனைகளை மாற்றி, அருளான ஒளியின் உண்மையை வையகத்தோருக்கு உணர்விப்பதும், மேலும் ஆன்மீகத்திலும், பகுத்தறிவு வாதத்திலும், நாத்திகத்திலும், வின்ஞானத்திலும் சொல்லப்படும் கருத்துக்களும் செய்யப்படும் செயல்களும் நடைமுறை வாழ்க்கையில் அனைவரும் ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கும், சமூகமக்களுக்கும் எந்த பாதிப்புமில்லாமல் பயன்படும் நீதியின் உண்மையை தெளிவாக கூறும் அறிவுரைகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், அறிவுபூர்வமான ஆக்கங்கள் இவை அனைத்திலும், அனைத்து உயிர்களுக்கும் பலனாய் அமைகின்ற யாவும் மெய்யறிவே.


மெய்ப்பொருள்

அறிவுக்கு பொருள் கூறுவதென்றால்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு - : குறள்-423 (அறிவுடமை)

எனப்படுவது, யார் சொல்லக் கேட்பினும் அப்பொருளில் உண்மை தன்மை காண்பதுவே அறிவு என்று நீதியில் உரைத்த பொருளாகும்.

இறை பொருள்

தொகு

இறைவனை அடையும் பொருளை கூறவேண்டுமென்றால், மெய் என்ற சொல்லிற்கு உடல் என்ற பொருளும் உண்டு. நாம் தன்னிச்சையாக செயல்படும் ஆற்றல் உடலின் உணர்வுத் தன்மை, உள்வுணர்வுகள் மூலம் மூளையின் புத்தியில் உணர்த்தப்பட்டு விழிப்புணர்வு மூலம் சிந்தித்து செய்யும் செயல்களின் மூலதாரமாக செயல்படும் அறிவை தெளிவாக்குதல் அல்லது செம்மை அடைதல்.

இந்த அறிவின் உணர்வுகளை உண்டக்கும் தலைவனாகிய இறைவன், நீர், நெருப்பு, காற்று, வான், மண் ஆகிய ஐம்பொறிகளின் மூலம் இயற்கையோடு இணைந்து அனைத்து உயிரினங்களுக்கும் உயிராக இருக்கும் பிரானாக நாம் சுவாசிக்கும் பிராணவாயுவாக இருக்கிறான். இந்த பிராணவாயுவை இயங்கவைக்கும் ஆற்றலான சக்தி நாதனே உயிர். இந்த உயிரே, அணுவில் முதலாய், அணுக்களின் சேர்க்கையில் வித்துமாய், வித்திலே கருவாய், உருவாய் இந்த பூவுலகில் நான்கு வகை யோனியாய், பிறப்பில் உயிரினம் ஏழுமாய் படைத்து உடலின் உணர்வாய், உணர்ச்சியாய், ஆற்றலின் சக்தியாய் உடலினை இயக்கச்செய்வதும் உயிரே. இதை உணர்வுகளால் மட்டுமே உணர முடியும்.

விழிப்புணர்வு இன்றி தன்னிச்சையாக இயங்கும் பதினோறு வகை இந்திரியங்களின் இயல்பான செயல்களை செய்யும் வகையிலும் நமது உடலமைப்பு பெற்றுள்ளது. இந்த உணர்வுகளை உணர்வதின் மூலமே நாம், நம்மை அறிய முடியும்.

விழிப்புணர்வு இன்றி தன்னிச்சையான செயல்கள்

பதினோறு வகை இந்திரியங்கள்

தொகு
  1. நாகன் (இதயத் துடிப்பு - இதயம் சுருங்கி விரிதல், உடல் உறுப்புகள் சுருங்கி விரிதல்)
  2. பிராணன் (மூச்சு விடுதல்)
  3. சமானன் (உணவு செரிமானம்)
  4. குருதிபாகன் (இரத்தவோட்டம்)
  5. அபானன் (அசுத்த வாயுக்கள் வெளியற்றல், பெண்களுக்கு மாதவிடாய்)
  6. கூர்மன் (பார்த்தல்)
  7. உதானன் (கேட்டல்)
  8. தனஞ்செயன் (தானாகவே பேசுதல் அல்லது பாடுதல், உடலில் அடிபடுவதால் ஏற்படும் வீக்கம்)
  9. கிருகரன் (விக்கல், தும்மல், இருமல், உணர்வின் தடுமாற்றத்தால் இசைக்கு மயங்கி ஆடுதல் மற்றும் சாமி ஆட்டம் அல்லது பேயாட்டம்)
  10. வியானன் (ஓடும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் வளைவுகள் திரும்பும் திசைக்கு தகுந்தாற்போல் உடலையும் சாய்த்துக் கொள்ளுதல்)
  11. தேவதத்தன் (கொட்டாவி, சலிப்பு)

இந்த பதினோறு வகை இந்திரியங்களும், நாம் விழிப்புணர்வு இன்றி இருக்கும் பொழுது தன்னிச்சையாக அறிவின் சிந்தனை இயல்லாமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால் பிறவியிலேயே அறிவின் சிந்தனைகளை சிந்திக்க முடியாத நிலையில் உள்ளவர்களை மூளை வளர்ச்சி குன்றியவர்கள் என்றும், சிந்திக்கும் திறன் இருந்தும் அறியாமல் இருப்பவர்களை பேதையர்கள் என்றும், தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களை பித்தர்கள் என்றும், சமுதாயத்திற்கு பயன்படும் அறிவு பூர்வமான செயல்களை செய்பவர்கள் அறிஞர் (ஞானி) என்றும், இயற்கைக்கு மாறாக செயற்கையாகவும், செயற்கையின் மூலம் இயற்கையை பாதுகாக்கும் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை ஆய்ந்து கண்டுபிடிப்பவர்களை வின்ஞானிகள் எனவும், அறியாமல் செய்கின்ற மூடபழக்கத்தின் தவறை உணர்த்தி அறிவுப் பாதையை அறியச்செய்வோரை பகுத்தறிவுவாதி என்றும், உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு உடல் உறுப்புகளுக்கு வலிமை சேர்க்கும் யோகத்தை கற்றுக்கொடுப்போரை யோகி என்றும், உடலின் பிணியை நீக்குவோரை மருத்துவர் என்றும், மனதிற்கு வலிமை கொடுக்கும் பிரணவமந்திரங்கள் மற்றும் நோயுற்ற உடலின் பிணியை நீக்கி, உடலின் உயிரை பிணியிலிருந்து காத்து மருந்தில்லா மாத்திரைகள் மூலம் ஆயுளை வளர்க்கும் சித்துவை கற்றுக்கொடுப்போரை சித்தர்கள் என வகைப்படுத்தி உணர்வுப்பூர்வமாக உணர்த்தும் ஆற்றல் அறிவுக்கு மட்டுமே உண்டு. உயிரான உடலின் மூலாதாரத்திற்கு மூலகாரணமே அறிவு. இந்த அறிவை தெளிவாக்கி செம்மையான மனதினைப் பெற உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அறிந்து, நல்லவை, தீயவைகளை பிரித்து தேர்ந்தெடுக்கும் நல்மார்க்கமே சிவமார்க்கம்.

மார்க்கம் என்பது நல்வழி பாதையில் சென்று அன்பென்ற மனதை அடையும் இடம். சிவம் என்ற சொல்லிற்கு அறிவினை சிந்தித்து மனதினை அறிந்து அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி அன்பை பெருவதே சிவம்.

எம்பெருமான் திருமூலரின் - சுந்தர ஆகமம் சான்றாக,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே... திருமந்திரம்

இதை அறிவின் விழிப்புணர்வு செயல்கள் மூலம் அறியலாம்.

விழிப்புணர்வு செயல்கள்

தொகு

விழிப்புணர்வு செயல்கள் மூன்றுவகை உண்டு. அவை,

  • சிந்தனை
  • தருக்கம்
  • புரிதல்

சிந்தனை

சிந்தனை என்பது தவம் என்றே பொருள்படும். நாம் எதை அடையவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதை அடைந்தே தீரவேண்டும் என்ற உணர்வு நம் ஆழ்மனதை தூண்டிக்கொண்டே இருக்கும். இந்த தூண்டுதலினாள் ஏற்படும் மனதின் எண்ணங்கள் புத்திக்கு உணர்த்தப்பட்டு சிந்தித்து செயல்படும் அறிவாக வெளிப்படுகிறது. அறிவின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு சிந்தனையே தூண்டுகோளக அமைகிறது.

தருக்கம்

தருக்கம் என்ற சொல்லிற்கு உண்மையை ஏற்று முடிவெடுத்தல், அதாவது நன்மை, தீமைகளைப் பிரித்து எதை தேர்வு செய்வது என்று உணர்ந்து அதன் தேவைக்கு ஏற்ப முடிவெடுப்பது. இதை சுருங்கக்கூறின் ஏரணம் என்றும் பொருள்படும். இந்த தருக்கம் என்ற உணர்வுதான் அளவீடுகளை கணிப்பதற்கும் ஆக்கபூர்வ செயல்கள், கட்டுமானப் பணிகள், ஆய்வு முறைகள் மேற்கொள்ளவும், கல்வி, கலைகள், பண்ணிசை பாடல்களுக்கும் ஆற்றலை உணரும் காரணியாக உள்ளது.

புரிதல்

இனங்களைக் கண்டு அறிதல் என்று பொருள்படும். சொல்லக் கேட்பதுவும் அதற்கு தகுந்த பதில் உரைப்பதுவும், உறவு முறை, துணையை தேர்ந்தெடுத்தல், வாழும் முறை, நட்பின் வகை, எண்ணும் எழுத்தும், சொல்லின் பொருளும், கருத்தின் நயமும் தெளிவுற புரிந்து நடந்துகொள்ளும் உணர்வு.

உணர்வுகள்

தொகு

இடம் பெயரும் உயிரினங்களின் அனைத்து உடலமைப்புகளுக்கும் உணர்வுகள் பொதுவானவை. இதில் உள் உணர்வுகளை ஆழமான உணர்வுகள் என்றும் வெளி உணர்வுகளை பொதுவான உணர்வுகள் என்றும் வகைப்படுத்தலாம். ஓர் அறிவு சீவராசி முதல் ஆறு அறிவு மனிதர் வரை இனத்தின் குணத்திற்கேற்ப உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும். ஆழமான உணர்வானது பறவைகள், விலங்குகளை விட மனிதரிடத்தில் ஆனந்தம், இன்பம், ஆச்சரியம், மகிழ்ச்சி, கவலை இவைகளை வெளிப்படுத்தும் தன்மை மிகுதியாக காணப்படுவது இயற்கையே.

ஆழமான உணர்வுகள்

மனதை கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படும் செயல்கள் ஆழமானதின் உணர்வுகளால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை ஏழுவகையாக பிரிக்கலாம். அவை,

  1. சினம்
  2. வெறுப்பு
  3. ஆனந்தம்
  4. இன்பம்
  5. மகிழ்ச்சி
  6. கவலை
  7. ஆச்சரியம்

சினம்

கோபத்தின் உச்சி எல்லை சினம். மனம் எந்த அளவிற்கு வெறுப்பு அடைகிறதோ, அந்த அளவிற்கு கோபத்தின் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத வேகம் சினமாக மாறுகிறது. மனதிற்கு பிடிக்காத செயலை யாரேனும் செய்தாலோ அல்லது பேசுவதைக் கேட்பதாலோ ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு சினம் எனப்படும். இந்த சினத்தை உடனடியாக தீர்க்கவில்லையெனில் அது பெரிதாகி கடுஞ்சினமாக வளர்ந்து எதிரிகளை அழிக்கும் அல்லது சினம் கொண்டவரையும் அழிக்கும்.

வெறுப்பு

ஒருவருக்கு வேண்டிய செயலை மற்றொருவரிடம் செய்யச் சொல்லி அதை அவர் செய்து முடிக்காதபோது முதலாமவருக்கு ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு வெறுப்பு. இதுவும் மனம் ஏற்காத்தினால் ஏற்படும் உணர்வு. அந்த செயலை செய்து முடிக்கும் வரை அவர்மீதுள்ள வெறுப்பு தீராது. இது ஆழமானதில் பதிந்தே இருக்கும். ஒருவர் மற்றொருவர்மீது வைத்த நம்பிக்கை இழப்பிற்கு இதுவே காரணகாக அமைகிறது.

ஆனந்தம்

இது உறவுகளினாலும், நல்ல நண்பர்களின் நேசம், பாசம் இவைகளினாலும், தவறு செய்தவறுக்கு மன்னிப்பு அளிப்பதாலும் அவரின் மனது பூரிப்படைந்து ஏற்படும் உணர்வின் வெளிப்பாடு.

இன்பம்

மனதின் பாரம் குறைந்து கவலைகள் மறந்து சந்தோசத்தால் ஏற்படும் உணர்வு. மனதிற்கு பிடித்தமான செயலை செய்யும் போதும், பார்க்கும் போதும், கேட்கும் போதும் ஏற்படும் இனம் புரியாத உணர்வு.

மகிழ்ச்சி

உள்ளத்தின் குதுகலம் மகிழ்ச்சியின் காரணம். துன்பத்தை மறந்து உல்லாசத்தில் பயணிக்கும்போது ஏற்படும் உணர்வு. கற்பனை திறன், சுய இன்பம் மற்றும் மனதிற்கு நிரைவான காரியங்கள் செய்யும் போதும், நடக்கும்போதும் ஏற்படும் உணர்வின் வெளிப்பாடின் உவகை.

பொதுவான உணர்வுகள்

  1. அன்பு
  2. பாசம்
  3. கோபம்
  4. துக்கம்
  5. ஆசை
  6. பொறாமை
  7. விரக்தி
  8. அமைதி
  9. பயம்
  10. எதிர்பார்ப்பு
  11. ஏமாற்றம்
  12. இரக்கம்
  13. வெட்கம்
  14. பரிவு
  15. காதல்
  16. காமம்
  17. எரிச்சல்
  18. சலிப்பு
  19. குற்றவுணர்வு
  20. மனவுளைச்சல்
  21. ஈர்ப்பு
  22. பெருமை
  23. உணர்வின்மை
  24. நம்பிக்கை
  25. மனக்கலக்கம்
  26. தவிப்பு
  27. பற்று
  28. நம்பிக்கையின்மை
  29. சோம்பல்
  30. அதிர்ச்சி
  31. மன நிறைவு
  32. திருப்தி
  33. தனிமை
  34. ஆவல்
  35. வலி
  36. அலட்சியம்
  37. திகில்
  38. பீதி


சிவம்

தொகு

சிகாரம் + வகாரம் + ம்காரம் = சிவம்

சிகாரம் - அறிவு, வகாரம் - மனது, மகாரம் - மாயை (ஆற்றல்)

அன்பின் பொருளை தன்மனம் அறிந்து, பிறர் மனதிலும் அவரின் அன்பை நாம் பெற்று, இருவரின் மனதும் ஒன்றினைந்து இணைபிறியாத அன்பு காதலாக தோன்றி, அன்பு மாறாத காதலை, வெல்ல முடியாத பேரின்ப உண்மையை அடையும் பொருளே சிவமாகும். இந்த இன்பத்தை உணர முடியுமே அன்றி, பிறர் சொல்லக்கேட்டு அனுபவிக்க முடியாது. இந்த உணர்வு பெரும் தன்மையாலே தான் தன்னை அறிய முடியும்.

மூன்று குணத்தில் பிறந்த மனிதன், எட்டு குணத்திலும் நிறைந்துள்ள சிவத்தை, அன்பென்ற ஓர் உலகமகா சக்தியை, உயிரினங்கள் மீது செலுத்தினாள் எண்குணமும் ஓர் குணமாய், தசைபிண்டமான உடலே ஆலயமாகி, வாரி வழங்கும் வள்ளள் தலைவனுக்கு தன் வாய்மையே புரவாசலாகி, செம்மையான அறிவை தெளிவாக்கினால், சீவரான உடலில் மறைந்திருக்கும் இந்திரியங்களான ஐந்து புலனும் மாணிக்கத்தின் சுடர் விளக்காய் மனமென்ற கோயிலில் இறைவன் குடியிருப்பான்.

இதற்கு சான்றாக, எம்பெருமான் திருமூலரின் - சுந்தர ஆகமம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே... திருமந்திரம்

இவ்வுலகில் பிறந்துள்ள ஆன்மாக்கள் ஒவ்வொன்றின் ஆற்றலும், அறிவும் உயிரினங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபாடு இருப்பினும், அந்த உயிர்கள் தங்கள் இனத்தின் மீது கொண்டுள்ள அன்பு அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு வாழ்க்கை அமைத்துக்கொள்வது, அந்த உயிரினத்தின் மனதில் தோன்றும் எண்ணங்களின் மாற்றங்களின் அடிப்படைதான் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அனைத்து உயிரினங்களின் மாற்றமுடியாத இயல்பும் இதுவே. ஒரு உயிரினம் எப்போது தன்னுடைய எண்ணங்களை மாற்ற முயற்சி செய்து அதன் எண்ணங்களின் நன்மை, தீமைகளை பிரித்து அதனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டு பலன் அடைந்து அதன் இலக்கை தொடுகிறதோ அந்த உயிரினமே உலகின் உயர்வு பெற்ற உயிரினமாகும். அப்படி உயர்வு பெற்ற உயிரினத்தின் முதன்மையான இனம், நம் மனித இனம். மனித இனம் சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, இன்று வரை படிப்படியக முன்னேறி ஒவ்வொறு துறையிலும் வெற்றியடைந்து நவீன நாகரீகத்தை நாடி இன்ப வாழ்க்கை வாழவேண்டும் என்ற மனதில் தோன்றிய எண்ணத்தின் பிரதிபலிப்பே இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாய வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் அடுத்த வெற்றி எப்படியிருக்கும் என்பதுதான் அனைவரின் ஆவல்.

இந்த வளர்ச்சி எந்திரமயத்தை நோக்கியா? அல்லது இந்திர வாழ்வை அடைவதிலா? என்ற சந்தேகம் அனைவருடைய மனதில் தோன்றக்கூடிய எண்ணங்கள் அவர்களின் விருப்பத்தை பொறுத்து அமைந்திருந்தாலும், அதை தேர்ந்தெடுத்து செய்வதில்தான் அந்த ஆக்கத்தின் பிரதிபலன்கள் தெரியவரும். ஆனால் அந்த ஆக்கத்தினை செய்யத் துவங்கும் முன்னர் எவைக்கும் பாதிப்பில்லாமல் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிந்து அனைவருக்கும் பயன் தரக்கூடிய ஒரு ஆக்கம் மனிதரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டால் உங்களால் எதை கூற முடியும்.

ஒன்றை அழித்து, அதன் மூலம் இன்னொன்றை உருவக்குவது என்ற அடிப்படையில்தான் மனிதரால் இன்று வரை அனைத்து ஆக்கங்களும் செயல்படுத்தியுள்ளனர் என்பதை யாரேனும் மறுக்கமுடியுமா? இந்த ஆக்கங்களின் துவக்கம் என்பது மனிதரின் தேவைகளை இயற்கையான குணம், தன்னிச்சையான இயல்பு இவைகளுக்கு தூண்டுகோளாக அமைவது உணர்வுகளின் தூண்டுதளினால் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற ஆற்றலாக செயல்படுத்துவது எது? அந்த ஆற்றலால் தான் நினைத்த ஆக்கத்தினை உருவாக்க முயற்சியும் அதற்கான செயலும் செய்ய உறுதுணையாக இருப்பது எது? நினைத்த ஆக்கத்தை வெற்றியுடன் செய்து முடித்தவுடன் உண்டாகும் உணர்வு என்ன? அந்த உணர்வு எப்படி ஏற்படுகிறது?

இவை அனைத்துமே ஒரு மனிதன் தன்னிச்சையாக தேடும் தேடலில்தான் அதன் உண்மைத் தன்மையை உணரமுடியும். அந்த உணர்வினை அடைய, இதை படிக்கும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோளாக அமையவே இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். ஒளிரும் சுடர் விளக்காயினும், தூண்டுகோள் இல்லா சுடரும் ஒளிரா ஆகவே, ஒளி விளக்கின் சுடர் அனையாமல் இருக்கவே இந்த கருத்துருக்கள் பயன்படுமேயன்றி, விளக்காவதும் அதற்கு திரியாகவும், எணணெயாகவும் உள்ளதற்கு நெருப்பை மூட்டி ஒளியேற்றிவைப்பது தங்களிடம்தான் உள்ளது. அதுதான் உங்களின் இருளை நீக்கும் வழி. இந்த இருளை நீக்க தேவையான ஆகமங்களைத் தேடித்தான் இந்த பயணமும் தொடர்கிறது.

சிவம் என்ற ஒரு சொல் உலகின் மிகப்பெரும் தத்துவத்தை உள்ளடக்கியுள்ளதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது உலகத்தின் இயக்கம். உயிர் உடல்களின் இயக்கமும் இதுவே. தத்துவம் என்ற சொல்லிற்கு விளக்கம் தெரிந்தால்தான் சிவம் என்ற தத்துவத்தின் உண்மையை உணர முடியும்.

தத்துவம்

தத் + துவ + அம் = தத்துவம்

தத் - ஒன்று, துவ - மற்றொன்று, அம் - இயக்கம்

ஒன்று மற்றொன்றோடு இணைந்து இரண்டும் ஒன்றாக கலந்து இயக்கத்தின் ஆற்றலாக செயல்பட்டு பயன்தரும் ஆக்கம் என்பதன் சுருக்கம்தான் தத்துவம். இந்த விதிப்படிதான் உலகம் இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ளும் முறையும், இந்த இயக்கத்தின் மூலம் உயிர் உடல்களும் தத்துவமசி என்ற மற்றொறு பரிமானமாக இயங்குவதையும் மனதில் பதியும்படி உணர்வினை அறிவுப்பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி உணர்வுபூர்வமான விளக்கமும், கருத்துருக்களும் அமையும் சொற்களே தத்துவமாக அமையும்.

தத்துவமசி

தத் + துவம் + அசி = தத்துவமசி

தத் - ஒன்று, துவம் - மற்றொன்று, அசி - ஆகின்றது

அவன் என்ற ஒருவரும், இவன் என்ற மற்றொறுவரும் இரண்டும் இணைந்து ஒன்றாக கலந்து அவன் இவனே என்று உள்ளத்தில் உணர்வுபூர்வமாக அறியப்படும் உணர்ச்சியின் ஆற்றல் அறிவோடு கலந்து சிந்தனைகளை விரித்து சித்தம் என்ற பேரருளை அடைந்து, எல்லாம் அவன் செயல் என்ற உண்மையை உணர்ந்து, என்னுடையது என்று சொல்ல இந்த உலகில் ஒன்றும் இல்லை என்ற மர்க்கத்தின் உண்மையைச் சொல்வதே இத்த தத்துவமசியின் கருத்தாகும்.

இந்த பேரருளை அடையச் செல்லும் பாதையை தேர்ந்தேடுக்க பல வழிமுறைகள், ஒவ்வொருவரின் மனதின் விருப்பததிற்கு ஏற்ப தேர்ந்தெடுத்தாலும் கொண்டுபோய் சேர்க்கும் இடம் ஒன்றுதான். அந்த இடத்தை எவராலும் அடையமுடியாது என்ற மனப்பான்மை உடையவர்களுக்கு சிவத்தை அடையும் பாதையின் மாயத்திரை விலகுவதில்லை. முடியும் என்ற நம்பிக்கையுடன் துன்பத்தின் பாதையிலும் நன்மைகளை விதைத்து பயனை எதிர்பார்க்காமல் யார் கடந்து வருகிறார்களோ அவரே அந்த பேரருளை அடையும் உயர்வினை பெறுகிறார்கள். இதற்கு ஆகமங்களை அறிந்திருக்க வேண்டியதில்லை, பூதங்களை அடக்கியாள வேண்டியதில்லை, காடு மலைகளுக்குச் சென்று கடுந்தவம் செய்ய வேண்டியதில்லை.

உன்னிடம் உள்ள அனைத்தையும் துறந்து, எல்லாம் இறைவனுக்கே என்று தூய உள்ளத்தோடு இறைவனை நாடும் பக்தனுக்கு அவர் தன்னையே தருவார் என்ற உண்மையை, மெய்யறிவை உணர்ந்தவர்களால் மட்டுமே இதன் தத்துவத்தை அறியமுடியும். இந்த தத்துவந்தான் சைவ சித்தாந்தத்தின் முதன்மை கோட்பாடுகளான தற்பதம், தொம்பதம், அசிபதம் ஆகிய மூன்றின் கூட்டு சேர்க்கையின் உணர்வை ஒவ்வொறுவருக்கும் தெளியவைக்கும் உபதேசமே நான்மறைகளில் வீடு என்ற பெரும் தத்துவதை உணர்த்தும் 'கருபொருளாக' அமைகிறது.

தற்பதம்

தன் + பதம் = தற்பதம்

தன் - தன்னுடைய, பதம் - திறன் (நிலை)

தன்னுடைய திறமைகளை ஒருவர் அறிந்து, அதன் மூலம், தானும், தன்னைச் சார்ந்தோருக்கும் பயன் அளிக்கக்கூடிய செயல்களைச் செய்வது, தன் திறமைகளை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, கற்றுக்கொள்பவரும் அவரின் திறன்களின் மூலம் தானும், தன்னைச் சார்ந்தோருக்கும் பயன் அடையும் செயல் தர்மம் என்ற உயர்ந்த அறத்தில் அடங்கும் என்பதை தெரிந்து தன் திறமைகளை பெற்றிருப்பதே தற்பதத்தின் தத்துவம். இன்னும் எளிமையக கூறவேண்டுமென்றால் பசித்தவருக்கு உணவு அளித்து ஒரு வேளை பசியை நீக்குவதை விட, உழைத்துப் பிழைக்க தொழிலையும், அறிவை வளர்க்கும் கல்வியையும் கற்றுக்கொடுப்பதே மனுட தர்மத்தின் சிறந்த அறம் என்பதை உணர்வுபூர்வமாக அறிந்து வாழ்விப்பதே தற்பதத்தின் தத்துவம்.

தொம்பதம்

துவம் + பதம் = தொம்பதம்

துவம் - அசையாத, (தொம்) - தான் (நீ); பதம் - திறன் (நிலை)

அகப்பொருளில் எதர்க்கும் அசையாத நிலை பொருளை அறிந்து, அதை தம் திறனால் அடக்கும் வல்லமை பெறுவது. அகப்பொருளில் அசையாத நிலையாக இருப்பது ஆணவம், கன்மம் (காமம்), மாயை (ஆசை) இந்த மூன்றும் ஒவ்வொறு மனிதருக்குள்ளும் நிலையாக தங்கியிருக்கும் மும்மலங்களை (திரிமலம்) அன்பு, கருணை, தியாகம் என்ற பண்பினால் அடக்கி ஒழுக்கமாகிய நேர்மையின் அறநெறியினை வழிநடத்திச் செல்லும் தத்துவதை உணர்ந்து அதை பிறருக்கும் உணர்விப்பதே தொம்பதமாகும்.

ஆணவம்

  • நான்
  • எனது
  • என்னுடைய
  • என்னால்

என்ற எண்ணம் கொண்டிருத்தல்.

கன்மம் (காமம்)

  • சபலப்பட்டு விரும்பத்தகாத செயலைச் செய்வது.
  • கள்ளத்தனமாக காதல் இச்சைக்கு வசப்படுவது.
  • மோகம் கொள்வது.

மாயை (ஆசை)

  • மனதில் தோன்றும் அளவற்ற விருப்பங்களை அடைவதற்காக எதையும் செய்யத்தூண்டும் செயலைச் செய்வது.
  • பிறரைப் பார்த்து ஏங்குவது.
  • அடம் பிடித்து அடையத் துடிப்பது.

இந்த மூன்று நிலைகளும் ஒரு மனிதனை

  1. பொய்
  2. களவு (திருட்டு)
  3. சினம் (கோபம்)
  4. வஞ்சம் (பகை வளர்த்தல்)
  5. பொறாமை

என்ற பாதகச் செயல்களுக்கு துணைபோகும் என்பதனை அறிந்து, இவைகளிலிருந்து விடுபட வாக்கும் மனதும் ஒருநிலைப்படுத்தி தவம் என்ற வேள்வியை சிந்தனைகளின் மூலம் வார்க்கும் பொழுது புதைந்துள்ள மனகுகையிலிருக்கும் மாயத்திரை விலகி அன்பென்ற சிவம் தோன்றும் தத்துவத்தை உணர்ந்து அறிவதே தொம்பதமாகும்.

அசிபதம்

அசி + பதம் = அசிபதம்

அசி - ஆவது (ஆகின்றாய்); பதம் - திறன் (நிலை)

பரம்பொருள் அனைத்துமாகி, அனைத்திலுமாகி, உருவமில்லா உயிருமாகி, அறிவான அருட்பெரும் சோதியாகி உணர்வாய் உணரும் உருவமுமாகி, ஆதி அந்தம் நடுவுமாகி மனதில் ஒன்றி நிற்கும் ஒருவனே இறைவன் என்று ஒருவரின் மனது எப்போது பக்குவப்படுகிறதோ, அவ்வாறு பக்குவப்பட்ட மனதில் தெளிவாகும் எண்ணத்தில் தற்பதம், தொம்பதம் ஆகிய இரண்டின் தத்துவதின் நற்பண்புகளை கடைபிடித்து வாழ்பவருக்கு ஏற்படும் உணர்வானது... "எதுவும் நிலையில்லை, எதுவும் நிலைப்பதில்லை அனைத்தும் ஓர்நாள் கடந்துபோகும், இங்கு யாவும் அனாதியே" என்ற உணர்வினை அடைபவரே... அது நீ ஆகிறாய் எனும் மெய்யுணர்வின் புனித ஆத்ம நிலையின் உத்தமன் ஆகிறார். இந்த நிலையை அடைந்தவரே இப்பூவுலகில் புண்ணியராக அவதரிக்கிறார். நீயே இறைவன் என்ற தத்துவத்தை தெளியவைப்பதே அசிபதம்.

இந்த முப்பதங்களின் தத்துவத்தை உணர்ந்து, இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இறைவனே... அவர்களுக்கு தொண்டு செய்வதே இப்பிறப்பின் பயனாகும் என்று எந்த பலனையும் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்தவரை அறநெறியின் அறிவுப் பாதையில் அன்புள்ளத்தோடு அழைத்துச் சென்று தீய உள்ளங்களையும் நல் உள்ளங்கலாக மாற்றி, பேதையர்களின் அறியாத் தன்மைகளை நீக்கி அறிவுடையோர்களாக ஆக்கி, உயர்வு தாழ்வு என்ற பேதமை அழித்து சமத்துவத்தை போதித்து, உழைப்பே உயர்வு தரும் எனற தத்துவத்தின் மகத்தான சக்தியை உலகுக்கு எடுத்துரைக்கும் சீவனே பரனாகும் சிவனே.

சிவன்

பூதங்கள் ஐந்தையும் அடக்கியாள்பவன் ஆகவே பஞ்ச ரட்சகன் (பஞ்சாட்சரன்). அழிவில்லாதவன். காணவல்ல ஆதி நாயகன் முதலான கருப்பொருளாய் உருவாகி, நடுவான வாழ்க்கையுமாகி அந்தமான பிறப்பின் அழிவில் முடிவுமானவன். தில்லையான சிரசின்மேல் வலக்கண் சூரியனாகவும், இடக்கண் பூரண சந்திரனாகவும், இவைக்கும் நடுவான புருவமத்தியில் ஆதியும் அந்தமும் இல்லாத மறைபொருளாக, ஞானத்தின் செம்மை பெற்ற பேரறிவை மூன்றாவது கண்ணாகவும் பெற்றவன். மூவருக்கும் முதல்வன், மாயையின் தலைவன். சரி நிகர் சமமானவன். பிரம்மத்தின் ஆன்மாவையும், திருமேனித் திருமாலின் உடலை சக்தியாகவும் இருந்து உயிரை இயக்கும் நாதமே சிவமாக இருந்து முக்காலமும் கடந்து எக்காலமும்...

உலக உயிர்களில் ஒன்றாகி

இனத்தில் இரண்டாகி

மூன்றான உலகில்

திசை நான்கையும் கொண்டு

ஐந்தான பூதத்தை

ஆறாய் விரித்து

லோகம் ஏழிலும்

எட்டு திக்கை அடக்கி

ஒன்பது கோள்களையும் இயக்கி

கீழும் மேலும் இரு திக்கை மறக்காமல்

பற்றான மனித பிறப்பில் பத்தாகி

இந்திரியங்கள் பதினொன்றில்

புவனத்தின் பன்னிரு காலங்களிலும்

மகேந்திரனாய் புறத்தோடு வாழும் புண்ணியன்

அகத்தோடும் வந்து அருள் புரிகிறான்...

என்பதை மெய்யறிவாக அனைவருக்கும் தெளிபடுத்துவது கடினமாக இருப்பினும், இதை கடமையாக கருத்தில் கொண்டு கட்டுரையாக்கப் பணிகிறேன்.

சிவத்தை அடைவதற்கு மரணத்தை தழுவவேண்டியதில்லை. நாம் வாழும் காலத்திலேயே சிவத்தை அடையலாம். இந்த இறைவனை அடைய சில வழிமுறைகளை பின்பற்றி பக்தியோடும், தூய உள்ளத்தோடும் இருந்து பிறரிடத்தில் கருணையோடும் தியாக மனப்பான்மையுடன் அனைத்து உயிர்களிடமும் அன்போடு நடந்துகொண்டால் இறைவன் நம் உள்ளத்தில் சோதியாக அவதரிப்பார். 'பக்தி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததினால், அதை அறியாதவர்கள் தவறாக புரிந்து கொண்டு மூடநம்பிக்கையில் மூழ்கி அவரவர்கள் எண்ணத்திற்கு தகுந்தவாறு பிரார்த்தனைகளும், நேர்த்திக்கடனை செலுத்துவதால் அவைகள் முழுமையாக இறைவனைச் சென்று அடைவதில்லை. அதனால் இறைவனுக்கு எந்த ஒரு பயனும், பலனும் அவருக்கு போய் சேருவதுமில்லை. ஒருவர் எப்போது தான், தன்னை உணர்ந்துகொள்கிறாரோ, அந்த உணர்வின் பயனால் அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலின் பலன்களும் இறைவனைச் சென்றடையும். அந்த பயன்கள் அனைவருக்கும் நன்மை பயக்குமாயின் அதற்கான பலன் இறைவனைச் சென்றடையும். தீமையாக இருப்பின் அதன் பலாபலன் தன்னையே அழிக்கவும் தயங்குவதில்லை. ஆகவேதான் பக்தி என்ற மார்க்கத்தில் கொள்கைகளை ஏற்படுத்தி சன்மார்க்க நெறிகளை உலகனைத்தும் கொண்டு செல்ல ஞானிகள் பலரும் அறிவின் சிந்தனைகளை ஆன்மீக சிந்தனைகளாக்கி பக்தியோடு அளித்துள்ளனர்.

சிவயநம

சிவயநம என்னும் மந்திரம் அருவத்தில் ஒன்றாகி, உருவத்தில் இரண்டாகி, அருவமும் உருவமும் இரண்டிலும் இயங்கும் அருவுருவாகி யோனியான வடிவம் நான்கிலும் பஞ்ச பூதத்தின் சேர்க்கையினால் ஆதிபாதம் முதல், உச்சி அந்தம் வரை ஆறு ஆதார நிலைகளில், ஏழுசீர் சக்கரத்தில் எட்டு குணங்களும், ஒன்பது மண்டலத்தில் வாசல் ஒன்பதும் வைத்து, மாதம் பத்தினில் பற்றாக பிறந்த மனிதன் பிரணவத்தை மறந்திருந்தாலும், ஓம் என்ற நாதத்தில் ஒன்றாகி பிரானமாக இருந்து பூவுலக ஏழு பிறப்பின் உயிரினங்களை வாழ்விக்க அவன் ஒருபோதும் மறப்பதில்லை.

பிரணவ மந்திரம்

அகாரம் - அருவம்; உகாரம் - உயிர் உருவம்; மகாரம் - அருவுருவத்தை இயங்கவைக்கும் ஆற்றல்.

உயிரில் மெய் கலப்பதுவே இயக்கம் என்ற முதல் விதிப்படி அ+உ+ம் = அஉம் எனும் ஓம் என்ற நாதமாய் உலகெங்கும் ஒலித்து, ஒலியின் ஓசை வானிடிந்து அணுதிரண்ம அண்டம் பிளந்து எச்சமாய் பிரிந்து கண்டமான இப்புவிதனில் 'ஓ'ங்கார உயிரியம் மூலம் சிங்கென்ற ஒளியில் வங்கென்ற வாயுவோடு யங்கென்ற வானின் மூலம் நங்கென்ற மண்ணிடத்தில் மங்கென்ற நீரினை காரணமாய் உயிர் அணுக்களை இப்புவிதனில் படைத்து, காரியங்களாக உயிர்ப்பித்து, உயிரினங்கள் வாழ தம்பிரானமே, பிராணமாகி உயிரினத்தில் ஒன்றாகி நின்றான். ஓம் சிவயநம என்பது அண்டத்தின் இயக்கமே பிண்டமான அணுக்களின் மூலம் உருவாகி வந்த உயிரினங்களின் இயக்கம். அவனே தானாகி, தானே அவனுமாய் அரு உருவாய் வந்தான். ஆதியே அணுக்களாய், உருவமே அந்தமாய், வாழ்க்கையே நடுவுமாய், இறப்பே பிறப்புமாய், பிறப்பே இறப்புமாய், வித்திலே லிங்கமாய், லிங்கத்தில் வித்துமாய், பால்வெளி அண்டத்தின் வட்டமாய் சுழழுகின்ற இயற்கையின் சத்தி நாதமே ஓம் நமசிவாயமே. பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஓம் என்ற நாதமே மூலவித்தாகும். இயற்கையைப் பாதுகாப்பதில்தான் உயிரினத்தின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. இயற்கை வளங்களான மரம், செடி கொடிகள், நீர் நிலைகள் பாதுகாக்கப்படும் பொழுதுதான் உயிர்காற்றின் அடர்த்தியும் அதிகரிக்கும். உயிர்காற்றின் அடர்த்தி குறையும் பொழுது கரியியத்தின் அடர்த்தி அதிகரிக்கும். கரியியத்தின் அடர்த்தி அதிகரிக்க, அதிகரிக்க கடல் பொங்கியெழுந்து சூறாவளிகள் உயிரினங்களை சூரையாடிவிடும். ஆகவே பிரணவம் என்பதே உயிர். பிரணவமான உயிரினத்தை காப்பது பிராணவாயு. பிராணவாயுவை அதிகரிக்கச் செய்வது இயற்கை வளங்களே. இதுவே உயிரினங்களைக் காக்கும் பிரணவ மந்திரம்.

இதற்கு எடுத்துக்காட்டு, எம்பெருமான் சிவவாக்கியரின் - வேத வாக்கியமே சான்றாக,

ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமைந் தெழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே... சிவவாக்கியம்

மேலும், எம்பெருமான் அகத்தியரின் - சர சூத்திரம் சான்றாக,

இன்றுமென்றும் இரண்டாகி நின்றநாதா
எதிர்பெருகி முப்பாழில் குடியுமேறி
இன்றுமென்றும் ஒன்றாகி பதியில்வாழும்
இல்லறத்தை நல்லறமாய் சுத்திபண்ணி
குன்றுமணி போலிருந்து வாழும்நாதா
குருவான பிரணவத்தில் வாழ்ந்தமூர்த்தி
சென்று சுடர்மணிவிளக்காய் பூரணமாய்நின்ற
செஞ்சுடரோன் கமல மலர்காப்புத் தானே... சரசூத்திரம் 1200

உயிரான பிரணவத்தை அடக்கியாழும் வழிமுறையே யோகம். பிரணவயோகம் உயிர் சக்தியை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ மருந்தில்லா மாத்திரைகளினாள் நான்கு வகை பிரணாயமத்தின் மூலமும், விரல்கலை எட்டும் அறிய, பல ஆண்டுகள் ஆன்மா இளமை பெற்றுவாழ வழியும் உண்டு.

இதற்கு எடுத்துக்காட்டு, எம்பெருமான் அகத்தியரின் - வர்ம சூத்திரம் சான்றாக,

வகுப்பாக பார்க்கையிலே படுகாலத்தில்
வர்மங்கள் கொண்டுதென்றல் வழியை சொல்வேன்
தொகுப்பாக பிராணகலை நாலும் சிக்கி
தோன்றினதால் பிராணனுக்கு குற்றமாகும்
வகுப்புடனே சிக்கலது தீர்ந்த தென்றல்
வகையான வர்மங்கள் இல்லையென்பார்
நகைப்புடனே யறுத்தடைத்த வாசல்வழி
நழுவிநிற்கு மெட்டுவிரல் கலைஎட்டாகும்... ஒடிவு முறிவு சாரி-1500.

மேலும், எம்பெருமான் திருமூலரின் - சுந்தர ஆகமம் சான்றாக,

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே... திருமந்திரம்

பக்தி

தொகு

பக்தி என்ற சொல்லுக்கு பணிந்திருத்தல் அல்லது கீழ்படிதல் என்று பொருள். கீழ்படிதல் என்றலே நம்மை விட உயர்ந்தவர்கள் இந்த உலகில் உண்டு என்பதை நாம் எப்போதும் நம் நினைவிலிருந்து நீங்கக் கூடாது என்பதற்காகவும், ஒருவரிடத்தில் பணிவோடு நாம் நடந்து கொள்வதானலேயே, அதே பணிவு பிறரிடத்திலிருந்தும் வரும். இது மனித இனத்தின் தன்னிச்சையான இயல்பு. சுவற்றில் எரிந்த பந்து மீண்டும் திரும்புவதுபோல, நாம் பிறரிடத்தில் எப்படி நடந்து கொள்கின்றோமோ, அதற்கு தகுந்த நடத்தையே நமக்கும் கிடைக்கும்.

பேரறிவு

தொகு

பேரறிவு என்பது பதியான இறைவன். அனைத்தும் அறிந்த பேரறிவாளன். உலகத்தின் இயக்கம், உயிரின் இயக்கம், பூதங்களின் இயக்கம், நதி மூலம், ரிஷி மூலம், பிறப்பு இறப்பு, பிறப்பின் முறைகளும், பிறக்கும் இனத்தின் வகை அறிந்திருத்தலும், பிரணவகலையும், அட்டமா சித்துக்களும், நூற்றியெட்டு வர்ம முடிச்சுகளை அவிழ்க்கவும், மீண்டும் அதை கட்டவும், உடல் உபாதைகளின் பிணியிலிருந்து விடுவிக்கவும், உடல் உபாதைகள் வராமல் காக்கவும், எண்ணும்-எழுத்தும் அறிவுதரும் கல்வியும், அறியாமை நீக்கவும், பயன் தரும் செயலும், பலன் தரும் ஆக்கமும், ஆயக்கலையும், ஆற்றல் தரும் சக்தியும், ஆய்ந்து நோக்கும் வல்லமையும், நாளைய உலகின் நல்நவீன மாற்றங்களையும் தொலைநோக்கி சிந்தித்து படைப்பதை படைத்து, அழிப்பதை அழித்து, காப்பதை காத்து, மறைப்பதை மறைத்து, நல்லோர்க்கு அருள் புரிந்து, அதோமுகமாய் ஒருமுகத்தோடு அன்பிணைந்து அறவழிப் பாதைக்கு கொண்டு செல்லும் பண்பின் உத்தமன், நேர்மை வழுவாத புண்ணியர்கள் அனைவரும் பதியான இறையின் பேரறிவாளரே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சுபஸ்ரீ_ஸ்வாமிகள்&oldid=1830967" இலிருந்து மீள்விக்கப்பட்டது