செந்தூரம் ஜெகதீஷ்
என்னைப் பற்றி நானே எழுதியுள்ள விக்கிபீடியாவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் வழக்கமான பயோடாட்டா சமாச்சாரங்கள். அதைத் தவிர்த்து சொல்ல எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
நான் தெளிவான குழப்பவாதி. சோ கூட தோற்றுவிடுவார். சரி என நினைப்பது தவறாகவும் தவறு என நினைப்பது சரியாகவும் இருக்கும். மாத்தி யோசிப்போம் என்று நினைத்தால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும்.
விதிமீது நம்பிக்கை வலுப்பெற்றுவிட்டது. நான் வாழும் வாழ்க்கைக்கும் அதன் அத்தனை துயரங்களுக்கும் விதியைத் தவிர வேறு யாரையும் நான் குறை கூற மாட்டேன்.
சிறுவயது முதல் படிப்புதான். படிப்பு என்றால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் வெளியேதான். கன்னிமரா , அமெரிக்க, பிரிட்டிஷ் நூலகங்கள், மாவட்ட நூலகங்கள், பழைய புத்தகக் கடைகள். புதிய புத்தகக் கடைகள். புத்தகக் கண்காட்சிகள். பேருந்து நிலைய பத்திரிகைக் கடைகள் என எதையும் விடவில்லை.
ஜவுளிக் கடைகள் முதல் டிவி செய்தி சேனல்கள் வரை பல இடங்களில் பணியாற்றி விட்டேன். அங்காடித் தெரு வாழ்க்கையை கிடங்குத் தெரு
நாவலாக எழுதத் தெரிந்தாலும் சினிமாவாக்க தெரியவில்லை. சம்பாதிக்கவும் தெரியவில்லை,என்னுடன் பழகிய ஜெயமோகன்தான் அதை காசாக்கிக் கொண்டார். திருடினார் என நான் சொல்லமாட்டேன்.
காதல் ,நட்பு என எப்போது நான் முகம் மலர்ந்தாலும் அடுத்து அதற்கான விலையையோ வலியையோ நான் சுமக்க நேரிட்டு இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை சினிமாவும் இலக்கியமும் இருகண்கள் போன்றவை எனக்கு. இவை இல்லாமல் வாழ முடியாது. இதே போல எனது குடும்பமும் உறவுகளும் எனக்கு எத்தனை கசப்பை தந்திருந்தாலும் மனதுக்கு அவை தேவைதான். இவையின்றி நான் வாழத் தெரியாதவன்.
ஓஷோவும் சாப்ளினும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் எனது ஆதர்ச குருமார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் முகமது ரபியும் டிஎம்.எஸ்சும் இவர்களும் இவர்களைப் போல பலர் உருவாக்கிய இசை உலகமும் எனக்கு சுவாசக்காற்று.
ஹென்றி மில்லரும் காப்காவும், இந்திப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோஜ்குமாரும் எனது உணர்வுகளுக்கு நெருக்கமானவர்கள். காரல் மார்க்சுக்கும் எனது லால் சலாம்.
ஏசு. புத்தர், ராமர், முகமது நபிகள் என எல்லாப் பெயர்களும் என்னைப் பொருத்தவரை ஒரு தோட்டத்தின் பலவகை நறுமண மலர்கள்தான்.தாமரைக்கும் ரோஜாவுக்கும் லில்லிக்கும் பகையிருப்பதாக நான் நினைக்கவில்லை, பகையைத் தூண்டுவது அரசியல், மத அரசியல். நான் இறைவனின் அழகான இத்தோட்டத்தில் பாடித்திரியும் பறவைதான்.
என் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் இப்போது அர்த்தம் புரிந்து விட்டது. நான் அதில் மகிழ்ந்து நடமாடிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எனது அடுத்த நாவலில் படிக்கலாம்.சினிமா இயக்குனர்கள் என்னிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்துக் கொள்ளலாம்,.
எனது இணைய தளம் ( பிளாக் ) senthooramjag.blogspot.in
எனது இமெயில் முகவரி- jagdishshahri@gmail.com