திருக்குமரன் கணேசன் (பி)1984

கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், திரைப்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள திருலோக்கி என்னும் சிற்றூரில் கணேசன்-தனக்கொடி என்ற இணையருக்கு 1984-ஆம் ஆண்டு,பிப்ரவரி திங்கள் 25-ஆம் நாள் பிறந்தார்.

திருலோக்கியில் உள்ள ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்றுள்ளார். மேல்நிலைக் கல்வியை திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை தேசிக சுப்பிரமணிய சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியிலும்,மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்துள்ளார்.

சென்னை தரமணியில் உள் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரியில் திரைப்பட இயக்கம் (D.F.Tech., Direction) பயின்றுள்ளார். யதார்த்த திரைப்படைப்பாக்க முயற்சியில் ஆர்வமுடையவர். அடிப்படையில் தமிழ் இலக்கிய மாணவர். தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டத்துடன் சமூகவியலிலும் முதுகலை பட்டம் பெற்றவர்!

இளநிலை தமிழிலக்கியம்- சாமி அருள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர்.

முதுகலை தமிழ்- திரு.வி.க அரசு கலைக் கல்லூரி,திருவாரூர்.

முதுகலை சமூகவியல்- அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு (தமிழ்)- தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்.

2003-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம், இளையபாரதம் என்ற நிகழ்ச்சியில் "சிந்தனைப் பூக்கள்" என்ற தலைப்பில் இவரது கவிதைகளை ஒலிபரப்பியது.

கவிதை தொகுப்பு: நிலவெறிக்கும் இரவுகளில்(2007) அனன்யா பதிப்பகம்.

ஆவணப்படம்- தமிழ்க்குடிதாங்கி (அடையாள அரசியலும் அழித்தொழிக்கப்பட்ட வரலாறும்)-2019 தீக்சா படைப்பகம்.

2021-ஆம் ஆண்டு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் வழங்கிய "நிதிநல்கை" பெற்ற ஆய்வாளர்கள் ஐவரில் ஒருவர். "தஞ்சை நிலவுடைமை ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் தலித்துகளின் பங்கு" என்ற இவரது ஆய்வுத் தலைப்பு கவனம் ஈர்க்ககூடியதாக அமைந்தது.

2022 மே, நோஷன்_பிரஸ்_தமிழ் Notion press tamizh நடத்திய தேசிய அளவிலான சிறுகதை போட்டியில், "இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளர்" என்ற டைட்டில் வின்னர். நம்பிக்கைதரும் 25 புதிய தலைமுறை எழுத்தாளர்களின் கதைகளால் செழித்தோடும் ‘கதாநதி’எனும் சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக "காதல் என்றால் காத்தல் என்று பொருள்" என்ற இவரது சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.

தன்வரலாறு- கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் சாதியினாற் சுட்ட வடு - 2022 காலச்சுவடு பதிப்பகம். இந்நூல் ஆனந்த விகடனில் ஆளுமைகள் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள் வரிசையில் 2023 சென்னை புத்தகத் திருவிழாவையொட்டி எழுத்தாளர் பாவண்ணன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூலாகும். கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் நூலை முனவைத்து 2023 -ஆம் ஆண்டிற்கான "ஸ்பாரோ" இலக்கிய விருதினை பெற்றிருக்கிறார்.