பண்பாடு என்றால் என்ன? ஒரு நோக்கு

பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம்,தடித்த எழுத்துக்கள் தேசியம், நாகரிகம் போன்ற சொற்கள் பட்டிதொட்டு பட்டிமன்றம் போட்டு எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வரும் சொற்களாக காணப்படுகின்றன. இருப்பினும் இச்சொற்கள் பற்றி பேசுவோரும், வியாக்கியானம் செய்வோரும் சரியான புரிதலுடனோ, அல்லது பார்வையுடனோ பேசுவதாகவோ தெரியவில்லை. எனவே இவைபற்றிய சரியான புரிதலும், தெளிவும் யாவருக்கும் தேவையாகவே உள்ளது. எனவேதான்; பண்பாடு பற்றி ஒரு சிறிய பார்வை இங்கே நோக்கப்படுகிறது. 
    பண்பாடு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் முதலில் எமக்கு அவசியமாகிறது. பண்பாடு என்றால் என்ன? என்பதற்கு மானிடவியல் சமூகவியல், வரலாற்றியல், உளவியல் மொழியியல் போன்ற பல்துறைசார்ந்த அறிஞர்கள் தம்துறை சார் நிலையிலிருந்து பல்வேறுபட்ட விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள். 
    இவ்வகையான விளக்கங்களை 1952 இல் குரோபர், மற்றும் குலுக்கான் ஆகிய இருவர் பலதுறை அறிஞர்களால் குறிப்பிடப்பட்ட 160 இற்கும் மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார்கள். இதிலிருந்து பண்பாடு பற்றிய விளக்கம் எத்துணை கடினமானது என்பது புரியும் இருப்பினும் இவ்வறிஞர்கள் யாவருடைய கருத்துக்களிலும் ஈ.பி.ரெயிலர் என்பவரின் கருத்தே முக்கிமானதும், தற்காலத்தில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகவும் கொள்ளப்படுகிறது. அது யாதெனில் “பண்பாடு என்பது ஓர் இன மக்களின் அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுகலாறு, சட்டம், மரபு முதலானவையும், மனித சமூகத்தின் ஓர் உறுப்பினராக இருந்து  கற்கின்ற பிற திறமைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கிய முழுத்தொகுதியே’’ என்கிறார் 
1842ல் வெளிவந்த யாழ்ப்பாண அகராதியில் கலாசாரம் பண்பாடு ஆகிய இரண்டு சொற்களும் இடம்பெறவில்லை. 1930ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் பேரகராதியிலும் பண்பாடு,கலாசாரம் என்ற சொற்கள் இடம்பெறவில்லை.   கல்ச்சர்  ( culture) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு 1930க்கு பின்னர்  தமிழிலே கலாசாரம் அல்லது கலாச்சாரம் என்ற வடமொழிச் சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பண்பாடு என்ற சொல் முதன்முதலில் டி.கே.சிதம்பர முதலியாரால் 1937ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.  கலாசாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கான மாற்றீட்டுச் சொல்லாகவே இச்சொல் அறிமுகமாகிறது. ஆனால் தமிழிலே பண்பாட்டைக் குறிப்பதற்கு பண்பு, பண்புடமை, சால்பு, சான்றாண்மை. முதலிய சொற்கள் தமிழ்மொழி இலக்கியங்களில் வழக்கிலிருந்திருக்கிறது. இவை சிலசமயங்களில் பண்பாட்டுடன் தொடர்புடைய சில பொருட்களைக் குறித்துவந்தாலும் பெதுமைப்பாட்டில் பண்பாட்டையே சுட்டி நிற்பதைக் காணலாம். 

பண்பாடு, கலாசாரம் என்ற சொற்களை இங்கே பிரித்தும், பகுத்தும் வியாக்கியானங்கள் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை. அது தேவையற்றதும் கூடவே. ஏனெனில் தமிழில் உள்ள சொற்களுக்கு பலவாறு பொருள் கொள்ளக்கூடிய நிலை இருப்பதனால் இதனை இப்படியே விட்டுவிடுவதே சாலப் பொருத்தமானது. கிரியாவின் தமிழகராதி “மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகள், வாழ்க்கையுடன் தொடர்புடைய பொருட்கள் என்பவற்றின் தொகுப்பே பண்பாடு’’ என விளக்கம் கொடுக்கிறது. ஆகவே இன்றைய காலத்தில் பண்பாடு என்பதனை எளிமையாக வரைவிலக்கணப் படுத்துவோமானால் ‘’கடந்த கால சமூகப் பாரம்பரியம் மரபு என்பன ஆத்மாத்ம ரீதியாக எதனால் எவ்வாறு எதிர்கால சந்ததிக்கு கையளிக்கப்படுகின்றதுவோ அதுவே பண்பாடு’’ எனக்கொள்ளலாம். பண்பாடும், நாகரிகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், பிரித்தறிய முடியாததாகவும் இரண்டறக் கலந்திருக்கிறது. நாகரிகம் விரிந்த பொருளுடையது. புற வளர்ச்சியைக் காட்டுவது. ஆனால் பண்பாடு நாகரிகத்தின் உட்கூறாகவும், மனிதஉள்ளத்தோடு தொடர்புடையதும் அகவளர்ச்சியைக் குறிப்பதாகவும் இருக்கிறது. நாகரிகத்தை யாவராலும் இலகுவாகப் பின்பற்ற முடியும் ஆனால் பண்பாட்டை ஒத்த மன இயல்புடையவர்களால் மாத்திரமே பின்பற்ற முடியும். சுருங்கக் கூறின் சமூகத்தை இயக்கும் சக்தி நாகரிகம் அதன் திசையை மாற்றும் சக்தி பண்பாடாகும். நாகரிகம் இன்றிப் பண்பாடு வளரும் ஆனால் பண்பாடு இல்லாவிடத்து நாகரிகம் நிலைக்க முடியாது. எனவே செயற்கையாகச் சேர்வதும், காலவெள்ளத்தில் அடைவதும் நாகரிகம் எனலாம். இத்தகைய பின்னணியில் ஈழத்தின் பண்பாடு பற்றி நோக்குகின்ற போது ஈழத்தின் தொன்மையான வரலாற்று வழித்தடத்தை ஒற்றியதான அதன் பண்பாட்டு பாரம்பரிய மரபுக்கூறுகளை அவதானிப்பது முக்கியமானது. இதனை ஈழத்தின் மானிடவியல் ஆராய்வின் மூலம் விளக்குவது பொருத்தமாயினும் இன்றுவரை ஈழத்தின் மானிடவியல் பற்றி யாரும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்டவில்லை. இருந்த போதிலும் சமூகவியலாளர்களான திரு தம்பையா மற்றும் திரு பேரின்பநாயகம் போன்றவர்கள் மானிடவியலின் சிலகூறுகளை மாத்திரமே ஆராய்ந்திருக்கிறார்கள். எனவே ஈழத்தினதோ அல்லது இலங்கையினதோ மானிடவியல் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனூடாக பண்பாட்டியல் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் கருத்துரை செய்வதற்கும் தகுதியானவர்கள் முன்வரவேண்டும்;. அது எமக்குரிய அவசிய தேவையும்கூட.

  இத்துறையில் ஈழத்தமிழர்கள் ஈடுபடாததற்கு கடந்த நான்கு நூற்றாண்டுகள் அரசற்ற சமூகமாகவும், அல்லது அண்டிவாழ்கின்ற சமூகமாக இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் பிழைப்புவாதச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதனால் இச்சமூகத்திற்கு மானிடவியல் பற்றியதான நோக்கு தேவையற்றதாகப் போய்விட்டதோ தெரியவில்லை. இருப்பினும் ஈழத்தில் கடந்த கால் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தேசிய எழுச்சி விடுதலைப்போராட்டங்கள் என்பன பண்பாட்டை மீட்பதும், பண்பாட்டைப் புதுப்பிப்பதும், ஜனநாயகத்தை விரிவாக்குவதும், மானிடவியலை விரிந்த கோணத்தில் ஆராய்வதற்குமான புதிய களமொன்றை திறந்துவிட்டிருக்கிறது.  
  இவ்வகையில் பண்பாட்டுயல் கூறுகளான

1,உணவு வகையும் உணவுப்பழக்கவழக்கமும்; (விருந்தோம்பல் உற்பத்திமுறை) 2, கிராமிய உறவு நிலை (பகிர்ந்துண்ணல்) 4, கிராமியதெய்வவழிபாடும் தெய்வ வழிபாட்டுமுறைகளும் (காவடி, பறையடித்தல் கண்ணகி வழிபாடு, ஐயனார், வைரவர், ராக்கையன்) 5,மருத்துவம் உளவளப்படுத்தல் (சீராண்மை) நேத்திக்கடன், தண்ணி ஓதுதல், வீபூதி போடுதல், நாவூறு கழித்தல், நூல்கட்டுதல், கழிப்புக்கழித்தல், பேய்விரட்டுதல் புத்திமதி கூறுதல்) 6 உற்பத்திமுறையும் பாவனைப் பொருட்களும் (துலா, விவசாய உபகரணங்கள், சேமிப்பு வீடுகளின் அமைப்பு, கொம்பறை) 7, செல்வம், (நிலம் மந்தைகள்) 8 பெண்ணியம், பெண்ணியம் பாதுகாப்பு, 9, கல்விமுறைமையும், போக்குவரத்தும். 10 சடங்குகள் 11 கலைகள் இன்னபிறவுமாக மேற்குறிப்பிட்ட பண்பாட்டுக்கூறுகளை நுணுக்கமாக விரிந்த தளத்தில் ஆய்வுக்குற்படுத்த வேண்டும் ’’பழையன கழிதலும், பதியன புகுதலும் வழுவல.’’ என்கிறது தொல்காப்பியச் சூத்திரம் ஆம். காலத்திற்கும், தேவைக்கும், சூழலுக்கும் பொருந்தாதவற்றை தவிர்த்துவிடுவதும், உகந்தவற்றை புதிதாக உள்வாங்கிக் கொள்வதும் தவறல்ல. ஆக இது பண்பாட்டிற்கும் பொருந்தும். இன்னுமொருபடி சொல்வோமானால் மாற்றம் என்ற சொல் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். என்றார் கால்மாக்ஸ். இதைத்தான் மானிட இயங்கியல் என்கிறார்கள். பண்பாடும் இவ் மனிதஇயங்கியல் வயப்பட்டதுவே. இன்றைய காலத்தின் தொழில் நுட்பவளர்ச்சி, உலகமயமாக்கம், மனிதத் தேவைகள், அரசியல், பொருளாதார சமூகவியல் நிலைகள். பண்பாட்டில்கூறுகளில் மாற்றங்களையும், மருவல்களையும் ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாதது. இருப்பினும் இந்த மாற்றங்கள் பண்பாட்டில் கலந்து ஒரு சீரான போக்கில் தொடர்சியான வாழ்வியலை நிர்வகித்துச் செல்லும். ஆகவே தொல்காப்பியச் சூத்திரத்தின் உட்பொருளுக்கமைய காலத்தினதும், சூழலினதும் தேவை எதுவோ அதனடிப்படையில் பண்பாடு தன்னைப் புதுப்பித்து, மறுசீரமைத்து ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வியலையும், நெறிப்படுத்திச் செல்லவல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தி.திபாகரன்&oldid=3109707" இலிருந்து மீள்விக்கப்பட்டது