துரை.தனபாலன்
வணக்கம். என் பெயர் துரை.தனபாலன். எனது சொந்த ஊர் மதுரை. தற்சமயம் நான் சென்னையில் கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன். அறிவியல் பட்டதாரியான நான், பணியாற்றியது ஸ்போகன் இங்க்லீஷ் ஆசிரியராக, பாசம் கொண்டது தமிழ் இலக்கியத்திடம்! நான் ஒரு எழுத்தாளன். இதுவரை ஐந்து நூல்கள் எழுதியுள்ளேன். அவை : தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம் கற்போம், Spoken English - simplified, ஆங்கிலம் ஓர் அறிமுகம், அதிசய உலகம் (பொது அறிவு நூல்), திருக்குறள் - காமத்துப்பாலில் இலக்கிய நயம் ஆகியன. (இன்னும் பல நூல்கள் அச்சேறத் தயாரான நிலையில் உள்ளன) இதில் திருக்குறள் நூல் அண்மையில், சென்னையில், அமரர் தவத்திரு. பொன்னம்பலம் அடிகளால் துவங்கப்பட்ட 'உலகத் திருக்குறள் பேரவை'யின் சிறந்த நூலுக்கான விருது பெற்றது. மற்றும் கவிஞரும், முதுபெரும் எழுத்தாளருமான திரு.இறைமறைதாசன் அவர்களது இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்படும் 'தமிழ் இலக்கிய மாமணி' விருதுக்கு எனது பெயர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டு, பல மாதங்கட்கு முன் முயன்று, செய்முறை தெரியாமல் பின்வாங்கி விட்டேன். தற்போது மீண்டும் முயற்சி செய்யப் போகிறேன். இதில் முன்னோடிகளாக உள்ள நண்பர்கள் எனக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.