வெங்கலராஜன் வரலாற்றுச் சுருக்கம் (குமரி மண்டல குறுநில மன்னன்)

கவிஞர் நீலம்.மதுமயன்

கன்னியாகுமரிக்கு மேற்கே இன்றைய மணக்குடிக்கும்(செண்பகராமன் புத்தன் துறை என்பதே பழைய பெயர்) கோயில்விளைக்கும் இடைப்பட்ட பகுதியில் தற்போது வெங்கலராஜபுரம் என்று அழைக்கப்படும் முறம்பில் அரண்மனை அமைத்து ஆண்ட சோழவம்சத்தைச் சேர்ந்த சான்றோர் குல குறுநில மன்னனே வெங்கலராஜன்.

இவனது மூதாதையர்கள் தமிழகத்தின் வட எல்லையான வெங்கட மலைக்கு அருகில் இருக்கும் காளத்திமலை சூழ்ந்த காளகஸ்த்தியை ஆண்டு வந்தவர்கள். இம்மலையில்தான் கண்ணப்பன் காளத்தி நாதருக்கு கண் கொடுத்தான்.

அங்கிருந்து அகன்ற வெங்கலராஜனது வம்சத்தார் திருச்சி, முசிறி, கயத்தாறு ஆகிய ஊர்களின் சிறு சிறு பகுதிகளை சிலகாலம் ஆண்டனர்.

அதன்பின் இவனது தந்தை வீரசேகரச்சோழன், விஜய நகரப்பேரரசின் வழிகாட்டுதலால் குரும்பூர் என்னும் குறு நிலப்பரப்பை ஆள்வதற்கு அனுமதி பெற்றான்.

வாலிப மிடுக்கில் வீரசேகரச்சோழன் கயத்தாறு மன்னன் மகளான தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரிதேவியைக் கவர்ந்து கொண்டு குரும்பூரை அடைந்தான்.

அதன்பின் குரும்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அப்போது நாயக்க மன்னர்களால் சான்றோர் குலத்தாருக்கு ஆட்சி செய்வதில் இடையூறு ஏற்பட்டது. மட்டுமல்லாமல் தன் மகள் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரிதேவியை கவர்ந்து சென்றதற்காக பழி தீர்க்க கிளர்ச்சி செய்தான் கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாள்.

எனவே இவனது தந்தை வீரசேகரச்சோழன் விஜய நகரப்பேரரசின் வழிகாட்டுதலால் அங்கிருந்து இலங்கையின் கண்டி மன்னனின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட புத்தளம் என்னும் குறு நிலப்பகுதியை ஆட்சி செய்ய அனுப்பப்பட்டான்.

இலங்கையின் மேற்குப் பகுதியில் உள்ள குறுங்கடல் சூழ்ந்த புத்தளம் என்னும் குறுநாட்டில் வீரசேகர சோழனுக்கும் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரிதேவிக்கும் ஆங்கில ஆண்டு 1525 - ல் தமிழ் ஆண்டு ஆவணி ஒன்றாம் தியதி பிறந்தான் வெங்கலராஜன்.

வெங்கலராஜன் கல்வியும் கலைகளும் கற்றுத் தேர்ந்தான். ரசவாதம் கற்று, இரும்பை பொன்னாக்கும் இரகசியம் தெரிந்து வைத்திருந்தான். முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்டவன் இவனே.

இலங்கை மண்ணில் மணமுடித்த வெங்கலராஜனுக்கு துறைமுகத்தழகி, சங்குமுகத்தழகி என்று இரண்டு பெண்கள் பிறந்து வளர்ந்து ஆளாயினர். இருவரும் கல்வியிலும் கலைகளிலும் தேர்ச்சியும் பெற்றனர்.

தந்தை வீரசேகரசோழன் முதுமையடைந்து காலமான பின்பு வெங்கல ராஜனுக்கு மீண்டும் பல்வேறு வழிகளில் தொல்லைகள் வந்து சேர்ந்தன.

வட இந்தியாவில் இருக்கும் இன்றைய ஒரிசாவின் (ஒடியா) கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வந்தவர்களாலும், ஆந்திர மன்னர்களாலும் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் இலங்கையை வந்தடைந்த இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த கொள்ளை கூட்டமானது வட இலங்கையின் செல்வ வளங்களை கவர்ந்து செல்ல முனைந்தது. புத்தளம் என்னும் பெரு நிலத்தை ஆண்டு வந்த வெங்கலராசனிடம் தங்கப் பாளங்களும் நகைகளும் இருப்பதை அறிந்த ஆங்கிலேயன் வெங்கல ராஜனுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினான். வெங்கல ராஜனிடம் இருந்த செல்வமே அவனுக்கு பகையாக வந்தது கண்டு மிகவும் மனம் வருந்தினான். தன் சோழ வம்சத்தை தன்னோடு அழிந்து போக விடாமல் தடுக்கவும், தலைமுறையை காத்திடவும், தன் பிள்ளைகளை பேணிடவும், தன்னை நம்பி வாழும் அனைவரையும் காத்திடவும் நினைத்து வருந்தினான்.

ஆலோசனையின் முடிவில் சோழ மன்னனின் வழிகாட்டலால் குமரி நாடு நோக்கிப் புறப்படத் தீர்மானித்தான்.

தனது நாவாய் ஒன்றில் பொன்னையும் பொருட்களையும் ஏற்றினான். இன்னொரு நாவாயில் வித்தகர்களையும், கலைஞர்களையும், வைத்தியர்களையும், அண்ணாவிகளையும், கொல்லர், பொற் கொல்லர்களையும், நிர்வாக அமைச்சர்களையும் ஏற்றினான். மூன்றாம் நாவாவில் குடும்பத்தார்களையும் ஆவணங்களையும் ஏற்றினான்.

நாவாய் (தோணி) இலங்கை புத்தளத்தை விட்டகன்று அழிந்துபட்ட குமரிக் கண்டத்தில் அழியாமல் இருக்கும் தென்குமரியை வந்தடைந்தான்.

அன்று இலந்தையடி விளையில் இப்போதிருக்கும் தலக்குளத்திற்குப் பெயர் வாட்டக்களி பெரியகுளம் ஆகும். இன்றும் அரசு ஆவணங்களில் இப்பெயரே உள்ளது.

இன்றைய உப்பளம் அதன் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் தெற்குப் பத்து என்னும் வயல் வெளியும், குளத்தில் இருந்து மறுக்கால் பாய்ந்து கடலோடு கலக்கும் முகத்துவாரமும் மேற்கே மணக்குடி காயலும் ஒன்றாக இருந்தது.

எனவே வெங்கலராஜனின் நாவாய்கள் கிழக்கு முகத்துவாரம் வழியாக கடலில் இருந்து உள்ளே நுழைந்தது.

அந்தப் பகுதி ஆழமற்ற பகுதியாக இருந்ததால் இன்றைய கன்னிமார் குண்டு வரை சென்று வால் குளத்தின் அத்தனை பகுதியையும் ஆராய்ந்து, இவ்விடம் நாம் நம் பாசறையையும் அரண்மனையையும் அமைப்பதற்குரிய இடம் அன்று என்று உணர்ந்து, நாவாய்களை இன்றைய தெற்குப்பத்து என்னும் காயல் வழியாக மேற்கு நோக்கி சென்று மணக்குடி பெரும் காயலில் போய் வடக்கு நோக்கி நாவாய்களை ஒட்டி இது ஆழமான பகுதியாக இருக்கிறது என்று கண்டுணர்ந்து தன்னுடைய அரண்மனையையும் பாசறையையும் அவ்விடத்தே அமைப்பதற்கு எத்தனித்தான்.

இப்போதைய புத்தளம் என்னும் மணக்குடி கயலுக்கு மேற்கு பகுதியில் பாசறையையும், காயலுக்கு கிழக்கே கன்னியாகுமரி சாலையில் உள்ள முறம்பில் அரண்மனையையும் குடியிருப்பையும் அமைத்தான். முகிலன் தலைமையில் உள்ள ஆட்சியாளர்கள் தங்குவதற்கு ஒரு குடியிருப்பை நிறுவி அவர்களை அங்கே தங்க வைத்தார் இன்றும் முகிலன் குடியிருப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

வெங்கலக் கதவுடன் அரண்மனை கட்டி ஆண்டதால் இன்றும் இந்த நிலப்பகுதி (விளை) வெங்ககலக்கதவடிவிளை என்றே அழைக்கப் படுகிறது. பத்திரப் பதிவுகளிலும் வெண்கல கதவடிவிளை என்றே குறிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வடக்கே பொற்றையடி தொடங்கி தெற்கே அரபிக் கடல் வரை மணல் கோட்டையும் அமைத்தான். கடற்கரையில் இருந்த வரலாற்றுச் சின்னமான இக் கோட்டைச் சுவர் 2004 சுனாமியில் அழிந்து போனது.

ஏற்கனவே வெங்கல ராஜன் கோட்டை கட்டத் தொடங்கிய போது ஏறத்தாழ 17 ஆம் நூற்றாண்டில் உருவான சுனாமியால் (ஆழிப்பேரலையால்) மணல் கோட்டையும் அழிந்து போனது.

அறிஞர்களின் கருத்துக்கள், மற்றும் கட்டுரைகள், அது போல் ஆராய்ச்சி நூல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், ஆலயங்களில் பாடப்படும் வில்லிசை பாடல்கள், நாடகங்கள், மற்றும் மூத்தோர்களின் வாய்மொழி வழியாக வந்த செவிவழிச் செய்திகள் ஆகியவற்றின் துணையோடு வெங்கலராஜனின் வரலாறு இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதையே தனி நூலாக எழுதும் பணியையும் செய்து வருகிறேன். அப்போது, துறைமுகத்தழகி சங்கு முகத்தழகி ஆகியோர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் போர்கள் வெங்கலராஜன் தன் வாழ்நாளில் அனுபவித்த துயரங்கள் அழிந்து போன மணல் கோட்டையின் வரலாறு கடற்கரையில் எஞ்சி நின்ற வெண்கல இன்ராஜன் கோட்டை அழிந்த வரலாறு, முரம்பில் வெங்கலராஜன்கட்டி முடித்த அரண்மனை அழிந்து போனதன் வரலாறு ஆகியவற்றையும் கலந்து வரலாற்று கதை வடிவத்தில் கொடுக்க விரும்புகிறேன்.

வெங்கல ராஜன் கோட்டை மற்றும் அவனது அரண்மனை இருந்த இடம், கடற்கரையில் கோட்டை தொடங்கிய இடம், கோயில் விளையிலிருந்து பொற்றையடி வரை கட்டிய கோட்டையின் இன்றைய நிலை ஆகியவற்றை இளைய சமூகம் தெரிந்து கொள்ள வில்லை என்றால் அது அவர்களது தவறு அல்ல. அவர்களுக்கு நாம் அதுபற்றி அறிவிக்காததே தவறு என்று உணர்ந்து வெங்கலராஜன் அறக்கட்டளை என்று ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றோம்.

இந்த அமைப்பானது வெங்கலராஜன் இந்தப் பகுதியை ஆண்ட வரலாறு அவனது வாழ்க்கை வரலாறு அவனது சமூக நிலை ஆகியவற்றை இளைய சமூகம் அறிந்து கொள்வதற்கு வசதியாக முதலில் வெங்கல ராஜனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு தனி நூலாக வெளியிட வேண்டும் என்று முயற்சித்து வருகின்றோம்.

மட்டுமின்றி வெங்கலராஜன் கோட்டை, கடற்கரையில் சிதிலமடைந்து கிடக்கின்றது. அவற்றை இனியேனும் பாதுகாத்து இயற்கையின் அழிவில் இருந்து காப்பாற்றி எதிர்கால சந்ததியினருக்கு இது பற்றிய உண்மை நிலையை உணர்த்தவும் உணரவும் தன் சுய வரலாற்றை தேடவும் வழி வகை செய்ய வேண்டும்.

மட்டுமின்றி கோட்டை கட்டி முடிப்பதற்குள்ளாக அது எவ்வாறு அழிந்து போனது என்ற விபரத்தையும் வரலாற்றுப் பின்னணியையும் தெரிவிக்க வேண்டும்.

இன்று வெங்கல ராஜன் கோட்டை, பேருந்து பயணம் செய்யும் சாலையாக மாற்றப்பட்டு இருப்பதை தடை செய்யவில்லை என்றாலும் இரு பக்கமும் கோயில் விளையிலிருந்து அல்லது கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை இரு புறமும் ஒரு மாதிரி கோட்டை அமைப்பை உருவாக்கி பக்கவாட்டில் சுவர் எழுப்ப அரசினை அணுக வேண்டும்.

மட்டுமன்றி அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி ஒன்றும் நிகழ்த்த வேண்டும் ஆங்காங்கே கண்டெடுத்ததாக பேசப்படும் கற்கள் வெறும் கற்கள் அல்ல எல்லாம் எழுத்துக் கற்கள். அவை என்ன சொல்கின்றன என்பதை நாம் தேட வேண்டும்.

கடற்கரையில் 2004 சுனாமியால் அழிந்து போன வெங்கல ராஜன் கோட்டை சுவர்களை மீண்டும் கட்டுவதற்கு அரசினை வலியுறுத்தி வருகின்றோம். வெங்கல ராஜன் கோட்டையும் பதினேழாம் நூற்றாண்டில் வந்த சுனாமியால்தான் அழிந்தது என்பதை தெரிவிக்க வேண்டும் .

நாம் நமது வரலாற்றை சமூக சமுதாய பின்னணியோடு பதிவு செய்வதற்கு வசதியாக தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து அரசின் கட்டளையோடு இப்பகுதியை தத்தெடுக்கச் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்காகவே வெங்கலராஜன் அறக்கட்டளை எனும் அமைப்பினை அமைத்து இயங்கி வருகின்றோம்.

வேங்கலராஜன் வழி வழி வந்தவர்கள் என்று கருதுபவர்களாக இருந்தாலும், வெங்கல ராஜன் மீது தனி பற்றுடையவர்களாக இருந்தாலும், இந்த அறக்கட்டளையோடு தொடர்பு கொண்டு வெங்கல ராஜனின் வழி வழி சொந்தங்கள் என்னும் தொகுப்பில் இணைந்து பணியாற்ற நாங்கள் பல்வேறு வழிகளில் இத்தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருகிறோம்.

மட்டுமின்றி மாணவர்கள் உள்ளத்தில் நம் பகுதியில் ஒரு மன்னன் வாழ்ந்திருக்கிறான் என்ற தகவலை தெரிவித்து தலைமுறைப் பற்றினை வளர்க்கும் விதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாமன்னன் வெங்கல ராஜன் ஜெயந்தி விழாவில் பல்வேறு போட்டிகள் மூலம் அவர்களை பங்கெடுக்கச் செய்து வெங்கலராஜன் பெருமைகளை சாற்றி வருகின்றோம். அப்பகுதியை வெங்கலராஜபுரம் என்று எல்லோரும் அழைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வெங்கலராஜன் வரலாற்றுக் கதை

இன்றைய குமரி மாவட்டம் வெங்கல ராஜன் இந்த மண்ணிற்கு வந்தபோது பல்வேறு குறு நில மன்னர்களின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது குறிப்பாக வள்ளுவ நாடு நாஞ்சில் நாடு போலும் பல்வேறு சிறு சிறு நாடுகளை உள்ளடக்கிய ஒரு சேரமண்டலமாக இது வரலாற்றால் அறிய முடிகிறது வெங்கல ராஜன் வெங்கல கோட்டை கட்டி அரண்மனை அமைத்து ஆண்ட பகுதி குமரி நாட்டின் ஒரு பகுதி இலங்கையில் இருந்து தன் பரிவாரங்களோடு குமரி நாட்டிற்கு வந்து சேர்ந்த வெங்கல ராஜன் இன்றைய மணக்குடிக்கும் கோவளத்திற்கும் இடைப்பட்ட முகிலன் குடியிருப்பு என்னும் ஊரின் உட்பட்ட முரம்பு என்னும் பகுதியில் தன் அரண்மனையை அமைத்தான் மாட மாளிகை கூட கோபுரம் கூடவே கோட்டை சுவர் எழுப்பி அக்கோட்டைக்கு வெண்கல கதவு இட்டான்.

துறை முகத்தழகி சங்கு முகத்தழகி என்னும் பருவ மங்கையர் இருவரையும் மிகச்சிறந்த முறையில் பண்பாடு மாறாமல் வளர்த்து வந்தான் வெங்கல ராஜன்

இருவரும் முத்திரை பதித்த அழகிகள் என்றால் அது மிகையாகாது. காண்பவர்கள் கண்களையும் கருத்தையும் கவரும் இளமங்கயர் இருவரும் கலையிலும் கல்வியிலும் கற்றுத் தேர்ந்த வில்வித்தை வாள்வித்தை போலும் வீர விளையாட்டுகளிலும் மிகச்சிறந்தவர்களாக மிளிர்ந்தனர்.

பண்பாடு மாறாத மனோ தைரியம் மிக்க மங்கையர்களாக இருவரும் வளர்ந்து வந்தனர். ஆனாலும் தன் பிள்ளைகள் வளர வளர வெங்கராஜன் மனதில் பயமும் வளர ஆரம்பித்தது.

அழகே ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சினான். ஆகவே தன் புதல்விகள் இருவரிடமும் தாங்கள் புதிய இடங்களுக்கு அனுமதி இன்றி செல்லக்கூடாது என்றும், குறிப்பாக கோட்டையை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளை இட்டு கண்ணும் கருத்துமாக இருவரையும் காத்து வந்தான்.

நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். வெங்கலராஜனின் ஆட்சிப் பகுதி குறைவானதாக இருந்தாலும் வாழ்க்கை முறை நிறைவானதாக இருந்தது. தான் இலங்கை புத்தளத்தில் வாழ்ந்த வாழ்க்கையை, கடைபிடித்து வந்த ஆட்சி முறையை, குமரி நாட்டிலும் கடைபிடிக்கத் தொடங்கினான்.

ரசவாத வித்தை மூலம் இரும்பை பொன்னாக்கும் இரகசியத்தை கற்றுத் தேர்ந்த கலை நுணுக்கமிக்க பலரும் அவனது அரண்மனையில் இருந்தனர். அவர்கள் மூலம் விராலி என்னும் செடியின் இலைகளை பிடுங்கி அவற்றில் கிடைக்கும் சாறினை தனியாக எடுத்துக் காய்த்து ஒரு பக்குவம் வருகின்றபோது அந்த சாற்றுக்குள் ரசம் கலந்து, அதற்குள் இரும்பினை வைத்து அதனை தங்கமாக மாற்றும் ரசவாத வேலையை செய்தனர்.

ஆகவே வெங்கலராஜன் ஆட்சிக்குட்பட்ட பகுதி வளமும் வல்லமையும் உடையதாக இருந்தது. ஆனாலும் வெங்கல ராஜன் மற்றும் அவனுடைய சுற்றத்தார் அனைவருக்கும் தலைமுறை தலைமுறையாக ஊர் விட்டு ஊர் சென்று வாழுகிற அலைச்சல் வாழ்க்கையே அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

வெங்கலராஜன் தன் மரபின் குண இயல்புகளை காத்து வந்தார். அரண்மனை அதைச் சுற்றிலும் குடியிருப்புகள், அகன்ற வீதிகள், அத்தனையும் கட்டி முடித்தவன் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து அடுத்த இடம் அகன்று போக பாதைகள் அமைத்தான்.

மட்டுமின்றி, கோட்டை ஒன்று கட்டவும் விரும்பினான். இக்கோட்டை இன்றும் வெங்கல ராஜன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

கோட்டை கட்ட வேண்டும் என்றால் அதற்கு ஆட்பலம் வேண்டும் அந்த ஆட்பலம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைய வேண்டியதில்லை காரணம் அவனது முன்னோர்கள் ஆண்ட குரும்பூர் பகுதியில் அறிமுகமான பலரும் வாழ்ந்து வந்தனர் எனவே அங்கு சென்று கோட்டை அமைப்பதற்குரிய ஆட்களை கொண்டு வர வேண்டும் என்று தன் பரிவாரங்களோடு புறப்பட்டு குறும்பூர் நோக்கி பயணமானான்.

அந்த நேரத்தில் பறக்கை என்னும் இன்றைய ஊரில் பட்ஷி ராஜா கோயில் என்று ஒன்று இருக்கிறது அதுவே இன்று கிருஷ்ணன் கோயில் என்று அழைக்கப்படுவதாகவும் இருக்கலாம்

குமரி மண்டலத்தில் குறிப்பாக சொல்வதானால் பறக்கை பட்சி ராஜா கோயில் திருவிழா என்பது சுற்று வட்டார மக்களை சுண்டி இழுக்கும் திருவிழா. இளம் மங்கையர்களும் வாலிபர்களும் வந்து கூடுவர். வகை வகையான உணவு வகைகள் விற்கப்படும். எந்த பொருட்கள் வேண்டுமானாலும் அந்த திருவிழாவில் வாங்கி அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட விழாவில் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்று நீண்ட நாட்களாக துறைமுகத்தழகியும் சங்கு முகத்தழகியும் விரும்பினர். இந்த விருப்பம் நிறைவேறும் பொருட்டு அப்போது அந்த விழா அங்கு நடந்தது.

அதனை அறிந்த மங்கையர் இருவரும் நம் தந்தை இங்கு இருந்தால் அந்த விழாவிற்கு செல்ல அனுமதிக்க மாட்டார் அல்லது தனியாகச் செல்ல விட மாட்டார் பாதுகாவலுக்கு பலரையும் அழைத்துக் கொண்டு ஒரு விழாவை மனம் போல் ரசிப்பது என்பது இயலாத காரியம். எனவே தந்தை வெங்கலராஜன் இப்போது கோட்டை கட்டும் பணியாள்களை கூட்டி வருவதற்கு குரும்பூர் போயிருக்கிறார்… இது நல்ல நேரம் அவர் நேரில் இல்லை என்பதால் அவரிடம் அனுமதி பெற இயலவில்லை என்று நாம் சொல்லிக் கொள்ளலாம் - என்று புறப்பட்டனர்.

இரண்டு இளம் மங்கையரும் தன் அழகை சுமந்தபடி பறக்கை பட்சி ராஜா கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராட்டு விழாவை கண்டு ரசிக்க பறந்து போயினர்.

நெருக்கமான இலைகள் உடைய செடியில் பூத்திருக்கும் இரண்டு மலர்கள் மட்டுமே பார்ப்பவர் கண்களை மிரட்டும். அதுபோல துறைமுகத்தழகியையும் சங்கு முகத்தழகியையும் பார்த்தவர்கள் பார்த்தபடி மயங்கினர். அடைய வேண்டும் என்ற ஆசை பார்ப்பவர்க்கு தோன்றவே செய்யும். அதிலும் குறிப்பாக அவ்விழாவுக்கு வந்திருந்த வஞ்சி நாட்டு இளவரசன் இராமவர்மன் இவ்விருவரையும் கண்டு மனம் மயங்கினான். உள்ளம் இருவருள் ஒருவரை அதாவது துறைமுகத்தழகியை அடைய வேண்டும் என்று துடித்தது. ஆகவே இந்த இளம் மங்கையர் இருவரும் யார் என்று அருகிருந்த அமைச்சனிடம் கேட்டு தெரிந்தான். இவர்கள் வெங்கலராஜனின் பிள்ளைகள் என்று கூறினான். எப்படியும் இந்த அழகியை என் அரண்மனையின் அந்தப்புரத்துக்கு கொண்டு வா - என்று கட்டளையிட்டான் வஞ்சி நாட்டு இளவரசன்.

அழகே ஆபத்தானது என்பதை அறியாத இருவரும் காணக் கிடைக்காத திருவிழாவை கண்டு மகிழ்ந்து ஊர் திரும்பினர். கோட்டை கட்டும் பணியாளர்களை அழைத்து வருவதற்காக குரும்பூர் சென்ற தந்தை வெங்கலராஜனும் அரண்மனை திரும்பினா ன்.

திருவிழாவில் தான் கண்டதை ஒருவருக்கொருவர் பெருமையோடும் புதுமையோடும் பேசி மகிழ்ந்தனர். இந்த அனுபவம் அந்த ஆரணங்கு இருவருக்கும் புதுமையானதாகவும் புதிதாகவும் இருந்தது. ஆகவே ஒவ்வொரு நாளும் பறக்கை திருவிழா ஒரு பேசு பொருளானது.

மகிழ்ச்சியின் எல்லையில் தமக்கையும் தங்கையும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் போது கோட்டைக்கு வெளியே ஓலையோடு ஒருவன் வந்து நிற்பதை கண்டனர். தந்தையிடம் சென்று யாரோ ஒருவர் ஓலையோடு வந்த நிற்கிறார் - என்று சேதி சொல்ல, வெங்கலராஜன் ஓலையை வாங்கிப் படித்தான்.

அந்த ஓலையில் எழுதப்பட்ட சொற்கள் அவனை சுட்டு சாம்பலாக்கின. தான் குரும்பூர் சென்றபோது தன் மங்கையர் இருவரும் கோட்டைக்குள் தான் இருந்தார்களா என்பதை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்தான். மக்கள் இருவரையும் அழைத்துப் பேசினான்.

நான் இல்லாத போது என் அனுமதியும் பெறாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் - என்று கேட்டான். அதற்கு அவர்கள் இருவரும் பறக்கை பட்சி ராஜா கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழா அதிசயமான ஒன்று என்று அறிந்து அதைக் காண்பதற்காக சென்றோம். மன்னியுங்கள் - என்றார்கள். இனி மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது எல்லாம் முடிந்தது என்று தலையில் கை வைத்தான் வெங்கலராஜன். என்ன நிகழ்ந்தது என்று அறியாமல் மக்கள் இருவரும் மதி மயங்கினர்.

கொண்டு வந்த ஓலையில் தான் ஏதோ ஒரு குண்டு இருக்கிறது - என்று எண்ணி தந்தையை பார்த்தனர். வெங்கல ராஜன் ஓலையை தன் மக்களிடமே கொடுத்து, படித்துப் பாருங்கள் - என்றான். ஓலையின் வாசகம் இதுதான்.

வெங்கல ராஜனுக்கு வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன் எழுதிக் கொள்வது உன் பெண்கள் இருவரின் அழகிலும் நான் பெரிதும் மயங்கி நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக உன் மூத்த மகள் துறைமுகத் தழகியை அடைய வேண்டும் என்ற ஆசை என்னை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே உடனடியாக உன் மூத்த மகள் துறைமுகதழகியை என் அந்தப்புரத்திற்கு அனுப்பி வை - மடலை படித்து முடித்த மங்கையின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது.

ஆராட்டு விழா சென்று அகப்பட்டோம் அல்லல் பட்டோம் என்று மனம் வருந்தினாள் துறைமுகத் தழகி. தந்தை தன் மகளின் கண்ணீரை படித்தார் மகளோ வந்த கடிதத்தை படித்தாள்.

படித்து முடித்ததும் வெங்கல ராஜன் ஒற்றனை அழைத்து, தன் மகளை அவன் மனைவியாக ஆக்க அழைக்கவில்லை அந்தப்புரத்துக்கு ஏவல் செய்யும் ஆளாக்க விரும்பியே உன்னை அனுப்பி இருக்கிறான். முடியாது என்று சொல் போ என்றான்.

காலம் மெல்ல மெல்ல நடந்தது குரும்பூர் நகரில் இருந்து கூட்டி வந்த பணியாட்கள் கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை உள்ள தன் நிலப்பரப்பை வரையறை செய்ய கோட்டை கட்டத் தொடங்கினர்.

இருபுறமும் இருந்து மணலை எடுத்து முதலில் கோட்டை அமைப்பை உருவாக்கினர் கடற்கரையில் கற்களைக் கொண்டும் சுண்ணாம்பு சுதை கொண்டும் கோட்டை கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேவைப்படும் கற்களை கடற்கரையில் மண்ணை அகழ்ந்தால் கிடைக்கும் மணலால் ஆன இறுக்கமான மணல் கற்களை வெட்டி எடுத்து கோட்டையை கட்டினான் வெங்கல ராஜன்.

இக்கற்களை கொண்டு இந்தப் பகுதியில் இருப்பவர்களின் வீடுகள் இன்றும் சீவக்கற்கள் எனும் பெயரில் கட்டப்படுகின்றன.

கோட்டை கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு நாள் ராமவர்மனின் படை வீரர்கள் ஒவ்வொரு பிரிவாக வந்து முரம்பில் கட்டப்பட்டிருந்த அரண்மனை கோட்டையை சுற்றிலும் அணிவகுக்கத் தொடங்கினர். இந்த செய்தியை அறிந்து வந்த வெங்கலராஜன் தன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வெளியே இருந்து விலைகொடுத்து வாங்கி வந்த உணவுப் பொருள்களை கோட்டைக்குள் பதுக்கத் தொடங்கினான்.

அதன் பின் தன்னையும் தன்னை நம்பியும் வாழ்கிற மக்களை கோட்டைக்குள்ளே குடியமர்த்தினான். ஒரு நாள் காலை ரவிவர்மன் தன் படைகளோடு கோட்டையை சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கினான் வஞ்சி நாட்டுக்கு அஞ்சி ஓட மனமின்றி வெங்கல ராஜன் கோட்டைக்குள் இருந்தபடியே தன்குடிகளையும் உள்ளே அமர வைத்து வெண்கல கதவினை உள்ளிருந்தபடியே பூட்டிக் கொண்டான்.

இது ஒன்றும் ஆள்பவர்களின் கோழைத்தனம் ஆகாது இதுவும் ஓர் போர் தந்திரமே என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள்.

உள்ளிருந்து கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த வஞ்சி நாட்டு வீரர்களை கவனித்துக் கொண்டிருந்தான் வெங்கல ராஜன். கோட்டை கதவும் திறக்கவில்லை வஞ்சிநாட்டு வீரர்களும் அகன்று போகவில்லை போரும் நடக்கவில்லை. ஏன் என்றால் துறைமுகத்தழகியை உயிரோடு அழைத்துப் போக வேண்டும் என்பதே படைக்கு இடப்பட்ட கட்டளை இதனை காப்பாற்ற வீரர்கள் பன்னெடும் நாட்களாக கோட்டையை சுற்றிலும் நின்றனர்.

திடீரென்று ஒரு நாள் போர்பறை அதிர்ந்தது. அப்படி என்றால் இனி பொறுத்தது போதும் எழுந்து போருக்கு போங்கள் என்று பொருளாகும். இதனை அறிந்த வெங்கல ராஜனும் அவனது துணைவியும் ஆசை மகள்களும் மிகவும் துயரப்பட்டனர். தன் குடிகளை காப்பாற்ற முடியாத மன்னன் எப்படி தன்னை மன்னன் என்று நிரூபிக்க முடியும். காவலனாக இருக்க வேண்டிய மன்னன் கலங்கினான். தன் தந்தையின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட துறைமுகத்து அழகி மனம் வருந்தினாள். வெங்கல ராஜனோ தன் மகளை வஞ்சி மன்னன் விரும்பும் படியாக அனுப்புவதற்கு தயாராக இல்லை. தன் பண்பாட்டையும் தன் பாரம்பரியத்தையும் தன் பெருமையையும் காப்பாற்ற வேண்டும் என்று தத்தளித்தான். தந்தையின் தவிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த துறைமுகத்து அழகி எல்லாம் என்னால் வந்தது, எனவே முடிவும் என்னால் தான் வர முடியும் என்று எண்ணி தந்தையிடம் சென்று, தந்தையே தங்கள் தவிப்பை நான் அறிவேன் உங்களைப் போன்ற அன்பும் அறிவும் உடையவர்களை நான் சந்தித்தது இல்லை. ஒரு மாபெரும் வீரன் நீங்கள். வீரனுக்கு அழகு விவேகம் எந்தக் காரணம் கொண்டும் அந்த மன்னனின் ஆசைக்கு நான் இணங்க மாட்டேன் ஆனால் எத்தனை நாள் தான் இந்தக் கோட்டைக்குள் மக்களை கூட்டி வைத்துக் கொண்டு உணவு கொடுத்து காப்பாற்ற முடியும் எனவே தாங்கள் என் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே தூக்கி எறியுங்கள் அதனை பார்த்தாவது வஞ்சி மன்னன் அஞ்சி ஓடுவான் - என்று தைரியமாக தன் தந்தையிடம் கூறினாள்.

எண்ணற்ற கேள்விகள். விடையற்ற வினாக்கள். இத்தனைக்கும் இடையே ஒரு முடிவோடு வாளை எடுத்த வெங்கல ராஜன் தன் மகளை வெட்டி தலையினை தூக்கி கோட்டைக்கு வெளியே எறிந்தான். வருவாள் என்று எண்ணி மகிழ்ந்து நின்ற மன்னன் கைகளில் தலை ஒன்று விழுவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினான்.

கண்ணியத்தையும் தான் விரும்பும் கற்பையும் காத்து நிற்க வேண்டும் என்கிற உணர்வு உடைய பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன் - என்று புலம்பிக்கொண்டே தன் படைகளோடுஅஞ்சி விடைபெற்றான் வஞ்சி மன்னன்.

காதலை கட்டாயப்படுத்தி வாங்க முடியாது. அதனை அதிகாரத்தாலும் அடைய முடியாது. என்பதை துறைமுகத்தழகியின் கற்பின் மேன்மை காட்டுகின்றது.

எதிரிகள் எதிர்க்க முடியாமல் அடங்கிப் போனதை அறிந்த பின் வெங்கலக்கோட்டை கதவு திறந்து மக்களும் மன்னனும் தன் இளவரசியின் தலையை தூக்கி வைத்து அழுது புலம்பி, உடலையும் தலையையும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகளை அடக்கி அதன் மேல் தன் அழகு மகளை படுக்க வைத்து எரியுட்டி காடேற்றி முடித்தான். இன்றும் இந்த பகுதிக்கு காடேற்றி என்னும் பெயரே நிலைத்திருக்கிறது.

தன் மகளை இழந்து இல்லத்திற்கு வந்த மன்னன் அவளுக்கு ஆலயம் அமைத்து கன்னி தெய்வமாக வழிபடவும் செய்தான்.

மானத்தை இழந்து அவமானத்தை சுமக்க விடாமல் தடுத்தது துறை முகத்து அழகியின் உயிர். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் அன்னார் என்னும் வள்ளுவத்தின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழும் தமிழ் குடியின் தன்னிகரற்ற தலைவி துறைமுகத்து அழகி.

காலம் உருண்டு ஓடியது நீண்ட நாட்கள் வெங்கல ராஜனால் வெங்கல ராஜபுரத்து அரண்மனையில் வாழப் பிடிக்கவில்லை. மகளின் பிரிவும் நினைவும் மனதை வருத்தியது. ஆனாலும் கோட்டையை கட்டி முடித்தான். அப்போது அவன் எதிர்பார்க்காத விதத்தில் இயற்கை தன் கரங்களை உயர்த்தி கடந்து போ என்று கட்டளை இட்டது.

ஒரு நாள் இரவு 60 அடி உயரத்துக்கு அரபிக்கடல் ஆர்ப்பரித்து எழுந்து உலகையே விழுங்க வந்தது. இன்று சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் ஆதிக்கத்தை எதிர்க்க இயலாமல் அரண்மனையும் கோட்டையும் குடிகள் வாழ்ந்த வீடுகளும் மிகவும் சிரமப்பட்டு கட்டிய நீண்ட கோட்டையும் நினைத்து முடிக்கும் முன்னே அழிந்து முடிந்தது.

மனிதர்களில் பலர் தப்பிப் பிழைத்தனர் சிலர் தப்பிக்க இயலாமல் உயிரை இழந்து உடலும் காணாமல் உறவுகள் வருந்தும்படி அரித்து கொண்டு போன இயற்கையோடு அகன்று போனார்கள்.

கடல் சூழ்ந்த நிலப்பரப்பு மீண்டும் தான் இருக்கிறேன் என்று நிமிர்ந்து நின்றது. கடல் எதுவும் நடக்காதது போல் கிடந்தது.

வெங்கல ராஜன் தன்னை போகும் இடம் எல்லாம் துரத்தும் இயற்கைக்கு அஞ்சி அங்கிருந்து அகன்று போக எத்தனித் தான். தன் மக்களுக்கும் தன் அரசின் அதிகாரிகளுக்கும் கட்டளை இட்டான். இனி என் மகள் இளையவள் ஒருத்தியோடு இங்கிருந்து அழிந்து போக நான் விரும்பவில்லை. இயற்கையும் நமது முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை இட்டுத் தடுக்கிறது. ஆகவே மீண்டும் என் முன்னோர்கள் வாழ்ந்து இலங்கைக்கு போகும் முன் வாழ்ந்த நிலப் பரப்பான குரும்பூர் சென்று வாழ்வதே நன்று என்று கூறினான் . எல்லோரும் அதுவே சரி என்று ஆமோதித்தனர் ஆகவே மறுநாள் முதலே எஞ்சிய பொருட்களும் பொருட்களை சுமந்த உயிர்களும் புறப்படத் தயாராயினர். மாமன்னன் வெங்கல ராஜன் தன் மக்களை காப்பதற்காக அங்கிருந்து விடை பெற்று குரும்பூர் நோக்கி படை நடத்தினான். தன் மனைவி தன் மகள் சங்கு முகத்து அழகி மற்றும் அமைச்சர்கள் கலைஞர்கள் கவிஞர்கள் அறிஞர்கள் அத்தனை பேரும் நடையாய் நகர்ந்து சென்றனர். வெங்கல ராசபுரம் இயற்கையின் சூழ்ச்சியால் வீழ்ந்தது. மகளின் நினைவை மட்டும் சுமந்தபடி வெங்கல ரசன் தனக்கு வேண்டியவர்களோடும் தன் வழி வழி வந்த சொந்தங்களோடும் பிரியா விடை பெற்று சென்றான்.

குரும்பூர் சென்று சேர்ந்த வெங்கல ராஜனின் மக்களும் அமைச்சர்களும் தங்களுக்குரிய இடங்களை தனது படையாட்கள் மூலம் அமைக்கத் தொடங்கினர். அங்கும் கோட்டை கட்டி, கோட்டைக்குள்ளே கொத்தளம் அமைத்து, சுற்றிலும் தெருக்கள் அமைத்து, தெருக்களின் இருபுறமும் இல்லங்களை அமைத்து தனது மக்களை தங்க வைத்தான்.

காலம் மிகச்சிறந்த உலை மூடி. அது பழைய நினைவுகளை மறக்க வைக்கும் ஆற்றல் உடையது. வெங்கல ராஜபுரம் புரத்தில் நடந்த துயரங்களை மறந்து இழந்த மகளையும் நினைப்பதை விட்டு இருக்கும் மகளுக்காகவும் மக்களுக்காகவும் வாழத் தொடங்கினான் வெங்கல ராஜன்.

மகிழ்ச்சி மெல்ல மெல்ல சூரியனாய் உதிக்கத் தொடங்கியது சந்தோஷத் தாமரை மலரத் தொடங்கியது. இனி நமக்கு இங்கு இடர் எதுவும் இல்லை என்று எண்ணியபடி தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனது அதிகாரத்தை நிலை நாட்டினான் வெங்கல ராஜன்.

குரும்பூர் நகரத்தைச் சுற்றிலும் வாழ்ந்த மக்களுக்கும் தன்னோடு வந்த மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் தலைவனாக மாறினான் வெங்கல ராஜன்.

காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. ஒரு நாள் வெங்கலராஜனின் செல்ல மகள் சங்கு முகத்தழகி கோட்டைக்கு அருகே இருந்த அருஞ்சுனையில் நீர் எடுத்து வரச் சென்றாள். அங்குதான் நீராடவும் செய்வாள். ஒரு நாள் சங்கு முகத்தழகி நீராடி விட்டு அகன்று போனதற்குப் பிறகு அந்த வழியே வந்த நளராஜன் என்னும் பக்கத்து நாட்டு மன்னன் தண்ணீரில் மிதக்கும் முடி ஒன்றை கண்டான். இத்தனை நீளமான முடி உடைய பெண் நிச்சயம் உலக அழகியாகவே இருப்பாள். எனவே அவளைக் காண வேண்டும் என்று விரும்பினான்.

வழக்கம் போல மறுநாளும் சங்கு முகத்தழகி தண்ணீர் எடுப்பதற்காக அருஞ்சுனைக்குச் சென்றாள் அந்த சுனையில் அவள் நீர் எடுக்கும் அழகை மறைந்திருந்து பார்த்தான் பகைநாட்டு மன்னன். தண்ணீரை அங்கும் இங்கும் தன் தாமரை விரல்களால் தள்ளிவிட்டபடி குடத்தில் நீர் எடுக்கும் அழகை குனிந்து கவனித்தான். அப்போது அவள் கூந்தல் தலையினின்றும் விழுந்து தண்ணீரில் விழுதுகள் போல் அசைவதை கண்டு மனம் அசைந்தான்.

அடைந்தால் இவளையே அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனாலும் அவனுடைய அமைச்சர்கள் கொடுத்த அறிவுரை அவனைத் தடுத்தது. ஏற்கனவே குமரி மண்டலத்தில் வெங்கல இராசபுரத்தில் கோட்டை கட்டி ஆண்ட இலங்கை புத்தளத்தை பரிபாலனம் செய்த மன்னன் வெங்கலராசனின் மகளே இவள்.

மூத்த மகளை ஆசைப்பட்ட ஒரு மன்னனால் இழந்து கோட்டை கொத்தளங்களை விட்டு மனம் அமைதி பெறுவதற்காக அவனது முன்னோர்கள் வாழ்ந்த பகுதியான குரும்பூருக்கு வந்து கோட்டை கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இந்த குறுநில மன்னன் அன்பும் அறிவும் ஒழுக்கமும் உயர் பண்பும் உடையவன் என்பதை மறவாதே - என்றான்.

எனவே இந்தப் பெண்ணின் மீது நீ வைத்த ஆசையை மீட்டு எடுத்துக் கொள் என்று கூறி தடுத்தான் அமைச்சர். உடனாக மன்னன் நளராஜன் அமைச்சரை அகன்று போகச் சொல்லி மாய மாந்திரீகம் தெரிந்த ஒருவனை அழைத்து நானாக விரும்பினால் அது ஆபத்து என்பதை அறிவேன் அவளாக விரும்பும் படி ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார் அதற்கு மாந்திரீகவாதி சூழ்ச்சியால் மட்டுமே இந்த மங்கை நல்லாளை நீ மணம் முடிக்க முடியும் என்று சொல்லி என்ன செய்ய வேண்டும் என்பதையும் காதினில் ஓதினான்.

ஒன்று இரண்டு நாட்களுக்குப் பிறகு தன்னை தயார் படுத்திக் கொண்ட மன்னன் நள ராசன் இரவு நேரத்தில் தன் அரண்மனையில் சங்கு முகத்தழகியை அடையும் ஆசையில் மாந்திரீகம் செய்யத் தொடங்கினான்.

மந்திரவாதி சொன்னது இதுதான் - நான் எப்படியேனும் ஒரு தங்க மாம்பழத்தை என் மந்திர சக்தியால் அதனை அவள் கைகளில் கிடைக்கும் படி செய்து விடுவேன் மீதியை நீ பார்த்துக்கொள் என்றான்.

நேரம் விடிந்தது. பொழுது புலர்ந்தது. மன்னனுடைய காவலன் தன்னுடைய நாடு மட்டுமின்றி குரும்பூர் என்னும் குறுநில பகுதி முழுவதற்கும் சேர்த்து பறை அடித்து, இதனால் மக்களுக்குத் தெரிவிப்பது என்ன என்றால் மன்னனின் தங்க மாம்பழம் ஒன்று தவறிவிட்டது. யாரோ ஒரு திருடன் அதனை எடுத்துச் சென்றிருக்கிறான். எடுத்தவன் கொடுத்தால் மன்னிக்கப்படுவான். எடுத்தவனை காட்டிக் கொடுப்பதற்கு பரிசும் உண்டு என்று கூறி முரசறைந்தான்.

அந்த நேரத்தில் தன் குடத்தினை கைகளில் ஏந்தி வழக்கம் போல் தண்ணீர் எடுப்பதற்காக அருஞ்சுனையை நோக்கி நடந்தாள் சங்கு முகத்தழகி. வழக்கம் போல் தண்ணீரில் குடத்தை கழுவி அதன் அகன்ற வாய் வழியே தண்ணீரை மொண்டு எடுத்தாள். அப்போது மந்திரவாதியின் சூழ்ச்சியால் பக்கத்தில் இருந்த மாமரம் ஒன்றிலிருந்து மாம்பழம் ஒன்று அவளை அறியாமல் குடத்துள் விழுந்தது.

அதையும் சேர்த்துக் கொண்டு அரண்மனை நோக்கி நடந்தாள் சங்கு முகத்தழகி. ஊருக்குள்ளே எல்லா இடமும் பறை அடித்து பறைசாற்றிய செய்தியை அனைவரும் அறிந்தனர். மன்னனின் தங்க மாம்பழம் தவறி போனதை அறிந்து வருந்தாதவர் இல்லை.

மன்னனோ மாலை வந்ததும் இன்னும் தங்க மாம்பழம் என்னிடம் வந்து சேரவில்லை, எடுத்தவர் யார் என்றும் யாரும் தெரிவிக்கவும் இல்லை, எனவே வீடு வீடாகச் சென்று நம் படை வீரர்கள் சோதனை செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டான்.

எல்லா வீடுகளுக்கும் சென்று வந்த வீரர்கள் வெங்கல ராஜன் மகள் சங்கு முகத்தழகி கொண்டு வந்த குடத்தையும் சோதனை செய்தனர். உள்ளே அவளுக்கே அறியாமல் மந்திர சக்தியால் கிடந்த தங்க மாம்பழம் காவலற்கைக்குள் அகப்பட்டது. உடனடியாக சங்கு முகத்தழகி அங்கிருந்து கைது செய்யப்பட்டு மன்னன் முன்னே நிறுத்தப்பட்டாள்.

மன்னன் நடராஜன் சங்கு முகத்தழகியை பார்த்து ஏ அழகிய பெண்ணை உன் அழகைவிட தங்க மாம்பழம் உயர்ந்தது அல்ல. நீ என்னோடு வாழ்வதற்கு இசைந்தால் நான் வழக்கை தள்ளுபடி செய்து உன்னை வாழ்க்கையில் இணைத்துக் கொள்கிறேன். என்றதும் சங்கு முகத்தழகி வாராத கோபம் வந்தது போல் எழுந்து நின்று என்னை அடைய வேண்டும் என்ற ஆசையில் குற்றக் கூண்டில் நிற்க வைத்த மன்னனே உன் குலம் அழியும் படியாக நீ என்னை துன்புறுத்தாதே.

ஏற்கனவே வராத துன்பம் வந்து வருந்திய வாழ்க்கையை சுமப்பவள் நான்- என்று சொன்னாள். அவனோ தன்னோடு வாழ மறுத்த காரணத்தால் ஊரைக் கூட்டி ஊர் நடுவில் அவளை நிறுத்தி தண்டிக்க விரும்பினான். ஊர் கூடியது. எல்லோரும் சுற்றி நிற்க சங்கு முகத்தழகியைப் பார்த்து மன்னனின் தங்க மாம்பழத்தை கவர்ந்ததை ஒத்துக் கொண்டால் உயிர் பிழைத்துப் போகலாம் இல்லையென்றால் உன்னை சிரசேதம் செய்து விடுவேன் என்று கட்டளை இட்டான்.

சங்குமுகத்தழகியோ சிறிதும் வருந்தாமல் உலகம் கேட்கும் படி உரக்கச் சிரித்தாள். மானத்தோடு வாழும் குடியில் பிறந்த சான்றோன் மகள் நான் என் தந்தை மானம் காப்பதற்காக என் தமக்கையை இழந்து வந்தவர். நான் மட்டும் உனது சூழ்ச்சியில் சிக்கி என் மானத்தையும் தன்மானத்தையும் அவமானத்தையும் தாங்கி வாழ்வேன் என்று எண்ணாதே. எத்தனை துயர் வந்து சூழ்ந்த போதும் அத்தனை துயரத்தையும் தாங்கிக் கொள்ளுகிற மனோ தைரியம் உடைய சான்றோன் வெங்கல ராஜனின் வீரமகள் நான்.

எனக்கும் உன் தங்க மாம்பழத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் களவு செய்து வந்தது அல்ல இந்த தங்க மாம்பழம் இதை நான் களவு செய்தேன் என்று நீ உண்மையாக நம்பி என் உயிரை எடுத்துக் கொள்வாய் என்றால் இந்த ஊரை மணல் மூடி தின்றுவிடும் என்பதை நினைவில் கொள். என்று பாண்டிய மன்னனிடம் முறையிட்ட கண்ணகி போல முறையிட்டாள் சங்கு முகத்தழகி.

இப்போது இவளை இப்படியே விட்டுவிட்டால் அது மன்னனுக்கு அழகல்ல. அவன் மானத்துக்கும் சிறப்பல்ல என்பதை நினைத்து நள ராசன் அவளது தலையை வெட்டுவதற்கு வீரர்களை அனுப்பினான்.

சற்றே தடுத்த சங்கு முகத்தழகி அந்தத் தங்க மாம்பழத்தை எடுத்து இது தங்க மாம்பழம் அல்ல இங்கு இந்தப் பழம் எப்படி வந்தது என்பது நான் அறியாததே. ஆனால் அதை நீ அறிவாய். சூழ்ச்சி வென்றது என்றால் நான் வணங்கும் இறைவன் கற்குவேல் ஐயன் என்னை காக்காமல் விட்டான் என்ற குறையை சுமப்பான். என் குலத்தார்கள் பழி சுமந்து வாழ நான் உயிர் சுமந்து வாழ விரும்பவில்லை என்னை வெட்டினால் என்னை வெட்டவும் இந்தப் பகுதி வெடித்து சிதறி மண்மூடி போகவும் கற்குவேல் ஐயன் துணை நிற்பான் என்று கூறி முடிக்கவும் தலையை சீவி முடித்தனர் வீரர்கள்.

தலையற்ற உடலோடு விழுந்தாள் சங்கு முகத்தழகி. கைகள் கட்டப்பட்ட நிலையில் வெங்கல ராஜன் மூர்ச்சி த்து விழுந்தான்.

அவள் அழைத்த ஒலி கேட்ட குலதெய்வம் ஓங்கி நின்று சுழன்று காற்றாக அடித்தது. அந்தப் பகுதி முழுவதையும் அழித்து முடித்து சுற்றிலும் மண் மூடி நடுவில் கற்குவேல் ஐயனும் அருகே அருஞ் சுனையும் போக அனைத்தும் அழிந்தன.

சுற்றிலும் மணல் மேடானது. வீடுகள் அழிந்தன. வீணர்கள் ஒழிந்தனர். வெங்கல ராஜன் தன் வீரர்களுக்கு கட்டளையிட்டான் உடனாக இந்த நளராசனின் உயிரை குடிக்க வேண்டும் புறப்படுங்கள் என்றான்.

வெங்கல ராஜனின் வீரர்கள் சுற்றி நின்று போர் தொடுத்து நள ராஜனை மணல்மேட்டின் மேற்கு பகுதிக்கு இழுத்துச் சென்று வெட்டி வீழ்த்தி ஓடிய ரத்தம் மணலில் விழ அந்த மணலை அள்ளி உடலெல்லாம் பூசிக்கொண்டு ஆர்ப்பரித்தனர். இரு படைகளுக்கும் இடையே நடந்த போரில் வெங்கல ராஜன் வீழ்ந்துமடிந்தான்.

அந்த மணல்மேட்டில் வெங்கல ராஜனால் வெட்டி வீழ்த்தப்பட்ட நள ராஜன் உதிரம் ஓடக் கிடந்தான்.

இன்றும் அந்த நாளை கள்ளர் வெட்டு என்னும் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றார்கள். வெங்கலராஜனின் வழி வழியாக வந்த சொந்தங்கள்.

யாரெல்லாம் கற்குவேல் ஐயனை குலதெய்வம் ஆகவும் இறந்துபட்ட வெங்கல ராஜனின் பெண்கள் இருவரையும் கன்னித் தெய்வங்களாகவும் வைத்து வணங்குகிறார்களோ அவர்கள் எல்லாம் வெங்கல ராஜனின் வழிவழி சொந்தங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்றும் குரும்பூர் தேரிக்குடியிருப்பில் அருஞ்சுனையும், அருகே கற்குவேல் அய்யனாரும் இருந்து அருள்பாலித்து வருகிறார்.

அருஞ்சுனை காத்த ஐயனார் என்றும், கற்குவேல் அய்யனார் என்றும் அழைக்கப்படும் தெய்வம் ஒருவரே. இந்த இடம் காயாமொழிக்கு அருகில் உள்ளது.

இன்றும் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் உள்ள முகிலன் குடியிருப்பைச் சார்ந்த நாடான்குட்டி என்ற நாராயணன் நாடாரும், கிண்ணிக்கண்ணன் விளை வைத்தியனார் (அண்ணாவியார்) குடும்பத்தாரும் துறைமுகத்தழகிக்கும், சங்குமுகத்தழகிக்கும் கோயில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

நன்றி…

மன்னன் வெங்கல ராஜன் அறக்கட்டளை என்னும் பெயரில் சுமார் 10 ஆண்டுகளாக வெங்கல ராஜபுரம் (கோயில்விளை) என்னும் முகவரியில் நடத்தி வருகின்றோம்.

இந்த அறக்கட்டளையின் நோக்கம், மன்னன் வெங்கல ராஜனின் புகழைப் பரப்புவது. அறியாதார் மத்தியில் அவரது பெருமைகளை வரலாற்றை தெரியப்படுத்துவது.

பழமை மாறாமல் புதிய தலைமுறைக்கு வெங்கல ராஜன் வரலாற்றை எழுத்து; செயல்; கலை வடிவங்களில் வெளிப்படுத்த வேண்டும். இந்த அமைப்பானது சுமார் 10 ஆண்டுகளாக இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு இப்பகுதியில் வாழும் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் வாழும் வெங்கலராஜனின் வழி வழி சொந்தங்கள் என்று நம்புகிறவர்களையும் அமைப்பில் இணைத்து வருகின்றோம்.

வெங்கலராஜனின் வரலாறு பெரிதும் கலை வடிவங்கள் வழியாகவும், செவிவழிச் செய்திகள் வழியாகவும், அவர் வாழ்ந்த இடங்களில் காணும் வரலாற்று எச்சங்கள் மூலமாகவும், அறிந்து அதனை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்து வரு.

ஏற்கனவே வெங்கல ராஜனைப் பற்றி பாடல் வடிவிலும் நாடக வடிவிலும் நாவல் வடிவிலும் வெளிவந்த நூல்களை எழுதிய எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டும். தொடர்ந்து புதிய வரலாற்று நூல்களும் புதினங்களும் அக்காலத்து மொழி நடை மாறாமல் எழுதப்பட்ட நாவல்களும் வெளி வருவதற்கு வசதியாக மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். அந்த நூல்களை அறக்கட்டளை மூலம் வெளியிடவும் வேண்டும். மட்டுமின்றி மேடை நாடகங்கள் நடத்தி அவரது பெருமையை பார் அறியச் செய்த நாடகத் துறை நண்பர்களை கௌரவித்து புதிய இடங்களில் வெங்கல ராஜன் பற்றிய நாடகங்களை அரங்கேற்றம் செய்யவும் முயற்சி செய்ய வேண்டும்.

இந்த வரலாறு, குறிப்பாக குமரி மண்டலத்தின் வெங்கல ராஜபுரத்தில் வேரூன்றி பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதனை அறியலாம் கடற்கரையில் வெங்கல ராஜன் கட்டிய கோட்டைச் சிதைவுகளை சீர் செய்து மீண்டும் இப்பொகுதியில் வரலாற்றுப் பகுதியை மக்களுக்கு நினைவூட்டும் படி அரசு கடற்கரையில் ஒரு மாதிரி கோட்டையினை அமைத்து தர வேண்டும்.

கடற்கரையில் தொடங்கி வெங்கல ராஜபுரம் வரை ஏற்கனவே இருந்த இப்போதும் பயன்படுத்த முடியாமல் இருக்கும் பாதையை சீர் செய்து சாலை அமைத்து தர அரசினை வேண்ட வேண்டும்.

மேற்கு கடற்கரை சாலை சந்திக்கிற வெங்கல ராஜபுரம் சந்திப்பில் அவருக்கு மணிமண்டபமும் திரு உருவச் சிலையும் அமைத்துத் தர விண்ணப்பிக்க வேண்டும்.

வெங்கலராஜன் கோட்டை சாலை என்று இப்போது இருக்கின்ற சாலையை பொற்றையடி தொடங்கி கடற்கரை முடிய கட்டித் தருமாறு விண்ணப்பிக்க வேண்டும்

கவிஞர் நீலம். மதுமயன், தலைவர், மன்னன் வெங்கலராஜன் அறக்கட்டளை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நீலம்.மதுமயன்&oldid=3813513" இலிருந்து மீள்விக்கப்பட்டது