இலக்கியச் சாரல் - நூல் விமர்சனம் (புலமி )

தொகு

தலை இறங்காக் கிரீடமாகவே தமிழ் இலக்கியங்களும் அதன் பாற்பட்ட நூல்களும் இன்றும் உலகலாவித் தம்மை வேரூன்றிக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்கவியலாத பெருங்கூற்றாக திகழ்வது , தமிழின் தொன்மையும் அதன் வழி நிற்கும் மரபும் எத்தகைய செம்மையைத் தன்னகத்தே கொண்டது என்பதை நாம் தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது.இலக்கியங்களின் பால் விருப்பம் கொண்ட சுவைஞர்களால் மட்டுமே அவற்றின் தன்மையை உற்று நோக்கவும் , அவ்வழி நின்று ஆராயவும் முடியும்.நமக்கு கிடைத்திருக்கும் மிகவும் தொன்மை வாய்ந்த முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றானது என்றாலும் அதற்கு முன்னும் தொன்மையுடைய சான்றாக இதுவரை எவ்வகை நூல்களையும் நாம் காணக்கிடைக்கவில்லை என்றே தோன்றவேண்டுகிறது.இவை ஆராய்ச்சிக்குட்ப்பட்டது எனினும் ஒரு தமிழராய் , தமிழியல் வழி செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கும் இது ஐயத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும் அல்லவா.அவரவர் பணிகளிடையே ஐயப்படுவதென்பது கடந்து செல்லக்கூடிய ஒரு விடயமாகிவிட்டதாலோ என்னவோ சராசரியாகவே நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறோம்.கற்றுக்கொள்ள வேண்டியவற்றையும் , அவை வழியாக தெரிந்துகொள்ளவேண்டியவற்றையும் ஏதேனும் ஒரு வகையிலாவது கைக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.


நாவல்களையும் , கதைகளையும் படிப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கும் மக்கள் அமைந்த தற்கால சமூகத்தில் இலக்கியங்கள் பற்றியும் அவற்றின் இயல்பினைப் பற்றியும் எவ்விதத்திலும் ஊட்டிக்கொடுக்கமுடியாது.எங்கோ ஆரம்பித்த புள்ளியினை மீண்டும் பின்னோக்கிச் சென்று தொட்டுவிடுவதும் அவ்வளவு எளிதான காரியமும் அல்ல.ஒரு குறுக்குவழியாக இலக்கியங்கள் சார்ந்த ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஓரளவிற்கு அவ்விதம் தகுதியாக்கிவிடுகிறது என்றால் மறுக்கமுடிவதில்லை.ஆர்வலர்களின் மத்தியில் கொடுக்கப்படும் எந்தவொரு கூற்றும் அதன் கிளைவழிகளில் வேர்விடக் காத்திருக்கும் என்பதை கொடுப்பவர் முன்னமே அறிவாரோ இல்லையோ பெறுபவர் பின்னராவது அறிந்துவிடுவதுண்டு.இந்த விதியினை மையமாக வைத்து இலக்கியங்கள் சார்ந்து வரும் ஆராய்ச்சிக்கட்டுரைகளை உள்ளடக்கிய ஓர் உதாரண நூலினைப் பற்றிய கருத்துக்களே இக்கட்டுரையின் முழுமுதற் நோக்கமாகும்.


முதற்படியாக தொல்காப்பிய பொருளதிகாரத்தில் செவிலித்தாயின் கூற்றையும் அவர்தம் மரபும் சங்க இலக்கியம் சார்ந்து வருதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரையாகும்.அகத்திணை மாந்தர்களுள் பெண்மக்களாகிய தலைவி ,தோழி ,செவிலித்தாய் ,நற்றாய் ஆகியோரிலிருந்து நூலின் ஆசிரியர் செவிலித்தாயின் பண்புகளையும் , கடமைகளையும் தக்க உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்.செவிலித்தாய் என்பவள் நற்றாயின் தோழியாக , தலைவிக்கு உயிர்த்தோழியாக வருபவளின் தாயாக இலக்கிய நூல்களில் சொல்லப்படுகிறாள்.பொதுவாக தலைவி ,தோழி ,நற்றாய் இம்மூவரையே அதிகமாய் கேள்வியுற்றிருப்போம் ஆனால் செவிலித்தாய் குறித்தான இக்கட்டுரை சிறப்பான தகவல்களை தருவதோடு மேலும் செவிலித்தாயின் குணநலன்களையும் வியக்கும்படிக் காட்டுகிறது.


அடுத்து தமிழரின் மறைநூலாகக் கருதப்படும் திருக்குறள் குறித்து எழும்பியிருக்கும் ஐயப்பாடான கேள்விகளை நூலாசிரியர் முன்வைப்பதோடு , பொருட்பாலில் அமைந்த வரைவின் மகளிர் என்னும் தொண்ணூற்றி இரண்டாவது அதிகாரத்தில் ,


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதில் பிணந்தழீஇ யற்று . (குறள் : 913)


மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் குறளுக்கு எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகளில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருப்பதையும் , குறிப்பாக "இருட்டறையில் ஏதில் பிணம் " என்பதற்கான பொருளானது தக்க சான்றுகளோடு நிறுவ முயற்சிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உவமையினுக்கு பொருள் கூறியிருக்கும் பல்வேறு ஆசிரியர்களின் கூற்றுகளை கண்முன்னே கொண்டுவருகிறது இக்கட்டுரை.ஆகையால் இவ்வுவமைக்கான கருத்தானது சமூக ஆய்வியல் மற்றும் சடங்கியல் ஆய்வுகள் மூலமாக ஓரளவேனும் கண்டறியப்படலாம் என்பது ஆசிரியரின் இறுதிக்கருத்தாக தரப்படுகிறது.அதுவரையில் உரையாசிரியர்களைப் பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை எனக் கொள்ளப்படுகிறது.


சிலம்பு காரணமாக எழுந்து ஐம்பெரும்காப்பியங்களுல் ஒன்றாக தமிழ் கூறும் மக்களின் பண்பாட்டினையும் , வாழ்வியல் நெறிகளையும் முறையாகக் கொண்டு இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கும் பல்வேறு திருவிளையாடல்கள்சார்ந்து வரும் யுக்திகளை அறியத் தந்திருப்பது தனிச்சிறப்பாக இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது.மேலும் சிலம்பு காட்டும் இலக்கியங்கள் குறித்தும் உதாரணங்களோடு சிறக்கிறது "சிலம்பில் திருவிளையாடல்கள் "கட்டுரை.


வேண்டுதல்கள் பற்றியும் மூவகை வழிபாடுகள் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் மனித மனங்களின் போக்கு மற்றும் அவர்களின் வேண்டுதல்கள் குறித்தான தன்மைகளையும் விவரிக்கிறது.வழிபாடுகளின் தன்மை யாதெனப்படுவதானது , அவரவர் மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் இறைவனுக்கான கருவறையையே சார்ந்ததாகும் .அதுகாறும் நூலாசிரியர் எடுத்தாண்டிருக்கும் உதாரணங்கள் சாலச்சிறந்தவைகளாகும் .


சங்கப்பாடல்கள் பலவும் பல்வேறு சூழ்நிலைகளில் நின்று பலதரப்பட்ட காலநிலைகளில் புலவர் பெருமக்களால் எழுதப்பட்டவையாகும்.அவைகள் முறையே (உ.ம்) பத்துப்பாட்டு , எட்டுத்தொகையாக சான்றோர் பலரால் தொகுக்கப்பட்டுக் கிடைக்கப்பெற்றுள்ளோம். அத்தனிப்பாடல்களின் பாடுபொருள்கள் ,பாடல்களில் கண்சிமிட்டும் சொல்விளையாட்டுகள் மற்றும் காலங்காலமாக உணரப்படும் மரபினை புதுமையாக எடுத்துரைக்கும் பாங்கையும் தனிப்பாடல்கள் குறித்து வரையப்பட்டிருக்கும் கட்டுரை விளக்குகிறது.


பொதுவாக இலக்கியங்கள் யாவுமே அறமெனும் தர்மசிந்தனையை போதிகின்றன எனலாம்.அதிலும் நமது தமிழ் இலக்கியங்கள் தனிமனித செம்மையாக்கத்தை அடிப்படையாக வைத்தே தாம் உருப்பெற்றுள்ளன.மானுடவியல் என்பது வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகவே வடிவமாக்கப்படுகிறது."மானுடம் அறிவோம்" கட்டுரையில் மானுடவியல் குறித்துவரும் தத்துவநெறிகளை இலக்கியச் சான்றுகள் கொண்டு அருமை சேர்த்திருப்பது நலம் . மனிதர்களைப் படிக்க நேரம் இல்லையெனினும் மனித நெறிகள் அறியவாவது நேரம் ஒதுக்கலாம்.


தமிழரின் திருநாளாகக் தைத்திருநாள் கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே.அத்திருநாளின் பலவகைச் சிறப்புகளை உணர்த்தி அவற்றின் வழியாக நாம் புரிந்துகொள்ளக்கூடிய செய்திகள் பலவும் இக்கட்டுரை தாங்கிவருகிறது.இதனில் தாங்கப்படும் கருத்துக்கள் நமது தமிழ் மரபின் தொன்றுதொட்ட வழக்கங்களின் சீர்மிகு பண்புநெறிகளை எடுத்துரைப்பதில் முழுகவனமும் செலுத்தியிருக்கிறது.


வாய்மொழி இலக்கியங்களான கதைகளும் , பாடல்களும் எழுத்துக்களாக தத்தம் மெருகேறியுள்ளன.அவற்றுள் சிறுகதையானது தனியிடத்தைப் பிடித்திருப்பதைக் காட்டும் கண்ணாடியாக "சிறுகதை :கற்றலும் கற்பித்தலும் "கட்டுரை திகழ்கிறது.கூற விழையும் நோக்கங்கள் மற்றும் அவற்றிற்கான யுக்திகள் மேலும் அவற்றின் பின்னணிகள் உணர்த்தும் குறிப்புகள் பலவும் சொல்லிப்போகிறது கட்டுரை.சிறுகதையின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் சிறுகதை முன்னோடிகள் குறித்தும் இதன் பக்கங்களில் காணமுடிகிறது.


இறுதியாக பயண இலக்கியம் குறித்தான தனித்துவத்தை அழகாய் மிளிரச்செய்கிறது நூலாசிரியரின் இலக்கிய பயணமொன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை.வாசிக்கும்போதே காட்சிகள் கண்முன்னே விரிவதைக் காணலாம்.


இந்நூலானது பல்வேறு இலக்கிய வடிவங்களை முன்வைத்து அவற்றின்பால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தனித்தன்மையாகவே விளங்குகிறது.தமிழர்களின் நெறி,மரபு மற்றும் வாழ்வியல் பற்றியான அனைத்துவகை செய்திகளையும் ஒவ்வொரு கட்டுரைகளும் தத்தம் செம்மையாக நிறைவு செய்திருக்கிறது.சடங்குகள் மற்றும் சமூகவியல் ஆய்வுகளினின்றும் உதாரணங்களைக் காட்டியிருப்பது சிந்தனைக்குரியது.அதுமட்டுமல்லாது சிந்திக்கத் தூண்டும் விதமாகவும் மேலும் பல தகவல்கள் குறித்தான தேடலையும் தந்துவிட்டுப்போகிறது இந்நூல்.


ஏற்பது என்பது முழுவதும் ஆராய்ந்தபின்னே ஏற்கவேண்டியதாகும்.அவ்வண்ணமே ஒவ்வொரு நூல்களும் தமது ஆசிரியர்கள் வாயிலாக உணர்த்தப்படும் யாவும் ஆராய்தற்குரியதே . இப்படியான ஆர்வங்களைத் தூண்டும் தனிச்சிறப்பினோடு ஓர் உதாரண நூலாகவே விளங்குகிறது . இதனமைந்த கட்டுரைகள் பெருமழைத்துளிகள் அல்லவே எனினும் சாரல்களாய் அதிலும் இலக்கியச் சாரல்களாய் உணரப்படுவனவாய் உள்ளன.நனையலாமே.


(நூல் :இலக்கியச் சாரல் , ஆசிரியர் :முனைவர் கு.ஞானசம்பந்தம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:புலமி&oldid=1593431" இலிருந்து மீள்விக்கப்பட்டது