கணபதி சுந்தரநாச்சியார்புரம்


முன்னுரை:

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே"என்னும் பாரதியின் வரிகளுக்கு இணங்க எனது தாய் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். அதைப்போலவே நான் பிறந்த எனது அழகிய, வளமான, பசுமையான, குளுமையான, இனிமையான எனது கிராமத்தை மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தில் எந்தக் கிராமமும் பெற்றிராத சிறப்புகளை எனது கிராமம் 'கணபதி சுந்தர நாச்சியார் புரம்' பெற்றுள்ளது. எனது கிராமம் பற்றிய சிறப்புகளை உங்கள் இடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஊர் அமைவிடம்:

எனது கிராமம், புகழ்பெற்ற ரமண மகரிஷி பிறந்த மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில், நாய்களுக்குப் பெயர் பெற்ற இராஜபாளையம் வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.  சரியாக இராஜபாளையம் நகரில் இருந்து மேற்குத் திசையில், பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஊரின் தெற்குப் பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இராஜபாளையம் தென்காசி நெடுஞ்சாலை - 208 செல்கிறது.  

ஊரின் எல்லை:

ஊரின் மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குப் பகுதியில் சேந்தன் ஏரி கண்மாயும், வடக்குப் பகுதியில் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வேளாண் நிலங்களும் தென்னந்தோப்புகளும் மாந்தோப்புகளும், தெற்குப் பகுதியில் சுடுகாடும் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஊரின் சிறப்புகள்:

எங்கள் ஊரில் விநாயகர் (கணபதி) திருக்கோவிலும், ஸ்ரீ சுந்தர நாச்சியார் அம்மன் திருக்கோவிலும் அமைந்துள்ளதால், 'கணபதி சுந்தர நாச்சியார்புரம்' என்னும் காரணப்பெயர் எங்கள் ஊருக்கு உண்டாயிற்று. இந்தியாவிலேயே மிகவும் நீளமான கிராமத்தின் பெயர், எங்கள் ஊரின் பெயர்தான். எங்கள் ஊரின் பெயரைப் போன்றதொரு வேறொரு ஊர் எங்கும் கிடையாது. எங்கள் ஊரில் சுமார் 2000 மக்கள் வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் வேளாண் பணிகளிலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இளைஞர்கள் பலர், அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். எங்கள் ஊரில் ஒரே சமூகத்தைச் சார்ந்த மக்கள்தான் வசிக்கிறார்கள். எங்கள் ஊர்  குக்கிராமம்தான் என்றாலும், இது தனி ஊராட்சியாகச் செயல்படுகிறது. இங்கு  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திருமண மண்டபம், நியாய விலைக் கடை, கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன் பெற ஏதுவாக விளையாட்டு மைதானமோ, நூலகமோ கிடையாது.

உற்பத்தியாகும் பொருள்கள்:

எங்கள் கிராமத்தில் நெல், கரும்பு, வாழை, மா, தென்னை ஆகிய பயிர்கள் மிகுதியாக விளைவிக்கப்படுகின்றன. மிகுதியான மக்கள் கால்நடைகளை வளர்க்கின்றனர். எங்கள் கிராமத்தில் கூட்டுறவு பால் கொள்முதல் நிலையம் இருக்கிறது. எங்கள் கிராமம் எந்தவிதத் தொழிற்சாலைகளும் இன்றி, இயற்கை அழகு கெடாமல் தூய்மையாக இருக்கின்றது.

வரலாற்றுச் சிறப்புகள்:

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையர் தற்போது நாங்கள் வசித்து வரும் கிராமம் இருக்கின்ற இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'சுந்தர நாச்சியார்புரம்' என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். அடிக்கடி நடைபெற்ற சமூக மோதல்களைத் தடுக்க எண்ணிய சேத்தூர்  ஜமீன்தார், எங்களது சமூகத்தார் வசிக்க, தனியாக இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம்தான் தற்போது நாங்கள் வசிக்கும் கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமமாகக் காட்சியளிக்கிறது. அப்போது விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த உழவர்களால் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த இடமே தற்போது சுந்தர நாச்சியார் அம்மன் திருக்கோவிலாகத் திகழ்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த பெண் தெய்வமாக, சுந்தர நாச்சியார் அம்மன் கிராம மக்களால் வணங்கப்படுகிறார்.  ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுந்தர நாச்சியார் அம்மனுக்குக் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் தைத்திருநாள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஒழுக்கமும் கிராமத்துக் கட்டுப்பாடும் அதிகமாக இருந்துள்ளது. தற்போது நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தால் சமூகக் கட்டுப்பாடு சீர்குலைந்து, ஊழல்கறை படிந்து காணப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மிதமிஞ்சிய மணல் திருட்டும் மரங்கள் அழிப்பும் தொடர்ந்ததால் ஊரின் அழகு பாழாய்க் கிடக்கிறது.

முடிவுரை:

எத்துணை சமூக மாற்றங்கள் ஏற்பட்டாலும், மேடு பள்ளங்கள் இருந்தாலும் எங்கள் கிராமம் தனி அழகோடுதான் இன்றும் காட்சி தருகிறது.  எங்கள் கிராமத்தின் அழகு வருங்காலத் தலைமுறையான எங்கள் கையில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். எங்கள் கிராமத்தின் புகழைக் காப்போம்.  'ஊர் கூடி இழுத்தால் தேர் ஓடிப்போகும்' என்பார்கள். அதற்கு ஏற்ப நாம் அனைவரும் சேர்ந்து, நம் கிராமத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மலர்_மகேந்திரன்&oldid=3284503" இலிருந்து மீள்விக்கப்பட்டது