பயனர்:முனைவர் கி.முருகேசன்/மணல்தொட்டி

வாரச் சந்தை - சிறுகதை

எங்கு பாத்தாலும் ஒரே சத்தம். யார் என்ன விலை சொல்லுறாங்கன்னே புரியல. ஞாயிறு மெதுவா மேற்கில் சாயும் நேரம் அது. வெயில் வேற மொகத்தச் சுழிக்கிற மாதிரி அடிக்குது. ஆங்காங்கே சிறுசிறு கடைகள். ஒரு நாள் பொலப்புக்கு நூத்துக்கு பத்து வட்டிக்கு பணம் வாங்கி வாரச் சந்தையில் வியாபாரம் பண்ணும் கடைகாரர்களும் அங்கு உண்டு. கூலிக்கு வந்த வட மாநிலத்தவர்களின் பிராதன அங்காடியாக அந்த வாரச் சந்தை இருக்கும். அவர்களிடம் வியாபாரம் செய்ய அங்கிருக்கும் கடைகாரர்களும் கோச்ஸிங் கிளாஸ் போகாமலே, கொஞ்சம் ‘இந்தி’ வார்த்தைகளைத் தெரிந்துதான் வைத்திருந்தனர். மொழி என்பது என்ன? படித்தால் வருவதா... இல்லை. அன்பு கொண்டு பேசி பழகுவதால் வருவதுதானே! வயதான பாட்டிங்க தலையில் முக்காடு போட்டுக்கிட்டு விரித்து வைத்த சாக்குப் பையில் வெண்டைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்றவற்றை கூறு கூறாகப் போட்டுவச்சு, எந்தக் கூறு எடுத்தாலும் பத்து ரூவா...... பத்து ரூவா... எனக் கூவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இடுப்பில் ஒரு மஞ்சப்பை வேற சொருகி இருந்தது. அது அவர்களின் கள்ளாப் பெட்டி. கூறு பத்து ரூவ......! கூறு பத்து ரூவா என்று ஒருபக்கச் சத்தம். மற்றொரு பக்கம் தக்காளி கிலோ இருபது ரூபா .... இருபது ரூபா.. என்ற சத்தம். இந்தச் சத்தத்துக் இடையே பத்து ரூவாய்க்கு மூன்று என (பச்ஜி, போண்டா, வடை) பலகாரக் கடைக்காரர் ஒரு பக்கம். மூன்று சட்டை வாங்கினால் இருநூறு ரூபாய்தான்..... என்று துணிக்கடைக்காரரும், கீரைக் கட்டு பத்து ரூவா என கீரைக் கடைக்கார அக்காவின் சத்தமும். இவர்களுக்கிடையே சத்தமே இல்லாமல் விரல்களின் வழியே அபிநயம் காட்டும் பூக்கட்டைக்கார அக்காவின் பூ வியாபாரம் என அன்றைய நாள் திருவிழாவாகவே இருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் வெளிச்சத்தைக் காணாமல் ஒலியை மட்டுமே உணரும் பார்வையற்றோரின் பாட்டுக் கச்சேரியும் அந்தச் சந்தையை மேலும் அழகு படுத்தியது. இவர்கள் பாடலுக்கு மயங்கியும் நிலைமை உணர்ந்தும் ஐந்து, பத்து என ரூபாய்களை அவர்கள் உண்டியலில் சிலர் போடுவார்கள். இந்தமாதிரியான கருணை உள்ளத்தையும் அங்கு காணமுடியும். ஒல்லியான தேகம், உருண்டையான கண்கள். கீச்சென்ற குரலில், பல்வேறு சத்தங்களுக்கிடையே அக்கா.... அம்மா.... கிலோ இருபது ரூபாய்..... என்று கையில் உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு கத்தியபடி நின்றாள் மாதவி. சற்று சருகாய் காய்ந்து போன மாதிரியான முகம். வகிடெடுத்து தலைமுடியை ஜடையாகப் பின்னி, அதில் ஒரு முழம் மல்லிகைப் பூவைச் சூடியிருந்தாள். வயது இருபத்தொன்றுதான் இருக்கும். ஒவ்வொரு வாரங்களும் கடந்து போகத்தான் செய்தன. இருபத்தி மூன்று வயதில் கல்யாணம் நடந்தது. கணவன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போனதால் எவ்வளவு முயற்சித்தும் அவளால் திருத்த முடியல. சொந்தக்காரங்க; குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் யென்று ஏதேதோ..! சொல்லி நரக வாழ்க்கையைத் தொடரவே செய்தனர். மூன்று ஆண்டுகள் மாமியாருடன் வாரச் சந்தைக்கு சென்று கிழங்கு வியாபாரம் செய்து வந்தாள். மாதவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாது. பெண் குழந்தை என்றவுடன் இவள்மீதான அன்பு மாமியாருக்குச் சற்றே குறைந்தது. கணவனும் அதிகமாக குடித்ததில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டான். கணவனின் வைத்திய செலவு, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு என அனைத்தும் இவள் தலைமீது பெரும் பாரமாக விழுந்தது. கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டாள். அக்கா... கிலோ இருபது ரூபாய்தான். எத்தனை கிலோக்கா வேணும் யென்று மாதவி பேசி வியாபாரம் செய்யும் போதே, அந்த வார்த்தைகளில் இருந்த தத்தளிப்பு குடும்ப நிலைமையைக் கண்ணாடியாக கண்களில் காட்டியது. தனது வாழ்க்கைதான் இப்படியாகிவிட்டது. மகளின் வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மாதவியின் மனதில் அலையாடத்தான் செய்தது. அதனால் மணிமேகலையை அன்போடும் அரவனைப்போடும் வளர்த்து வந்தாள். மணிமேகலை அறிவு நிறைந்தவளாக வளர வேண்டும் என்பதற்காக ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள். அவள் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த போது, அருகேயுள்ள நகரத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்த்துவிட்டது மட்டுமின்றி அங்கேயே அரசினர் மாணவியர் விடுதியில் தங்கவும் வைத்தாள். வாரச் சந்தை முடிந்து மறுநாள் காலையில் விடுதிக்குச் செல்வதை மாதவி வழக்கமாகக் கொண்டிருந்தாள். அன்று சரியாக எட்டு மணி இருக்கும், விடுதியின் வாசலில் நின்று கொண்டு, வார்டனிடம் நான்... மணிமேகலையின் அம்மா; அவளைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். உனக்கு வேற வேலையே இல்லையா? என்று வார்டன் கத்தினார். மன்னிச்சிக்கோங்க அக்கா. ஞாயித்துக்கிழமை வாரச் சந்தை; அதான் வர முடியிறது இல்ல. சரி... சரி.. நீ என்ன சொன்னாலும் கேக்க மாட்ட. உம் பொலப்பு அப்புடி என்று கூறியவாறே, உக்காரு வரச் சொல்லுறேன் என முணுமுணுத்துக் கொண்டே சென்றாள். மணிமேகலை தூரத்தில் வரும்போதே இவளுக்கு அப்படியே அள்ளி எடுத்து கொஞ்சவேண்டும் போல் இருந்தது. அம்மா எப்டிம்மா இருக்கே? அப்பாவுக்கு எப்டிம்மா இருக்கு? என்னைப் பத்திக் கேட்டாரா அம்மா? என்றவளிடம் எப்படிச் சொல்வாள் அப்பாவின் சிறுநீர், மலம் என அனைத்தையும் நான் அள்ளுகிறேன் என்பதை. அப்பத்தா உன்கூட சந்தைக்கு வருதாம்மா? பாவம் எப்படி அவளுக்குப் புரிய வைப்பது. தன்னையும் கணவனையும் விட்டுவிட்டு எங்கோ தொலைந்து போனதை. கண்களில் வழிந்த நீரை முந்தானையில் துடைத்தாள். சரிம்மா நான் உங்கிட்ட அரிசி முறுக்கு வாங்கியார சொன்னேனே வாங்கிட்டு வந்தியா? இல்லடாச் செல்லம். சந்தைக்கு அரிசி முறுக்கு கொண்டுட்டு வருவாங்கல்ல அந்த அக்காவோட மகளுக்கு வீட்டுல ஏதோ பிரச்சனையாம் அதான் வரல நான் அடுத்தமொற வர்ரப்போ வாங்கி வாரேன். இங்கே பாரு! அம்மா உனக்கு என்ன வாங்கியாந்திருக்கேன் தெரியுமா? என்று சொன்னவுடன் மணிமேகலைக்கு சந்தோஷம் தாங்கல. ‘ஜாமன்றி பாக்ஸை’ பார்த்தவுடன் வெடுக்கென வாங்கி; அதைப் பல்லால் கடித்துப் பிரித்துப் பார்த்து அதிலுள்ளவற்றை எடுத்து மகிழ்ச்சி பொங்க மாதவியை இருகத் தழுவி முத்தமிட்டாள். அம்மா! ஸ்கூல்ல மணியடிச்சிருவாங்க நான் போகட்டுமா? என்ற மணிமேகலையின் வார்த்தைகள் மாதவிக்கு வேதனையைத் தந்தது. சரிடா நீ போயிட்டு நல்லா படிக்கணும் ம்.....! சரிம்மா! என்றவள் கையசைத்து டாட்டா... என்றவாறே வேகமாக பள்ளியை நோக்கி நடந்தாள். மாதவியின் மனதில் எதையோ பறிகொடுத்த ஏக்கத்துடன் அங்கிருந்து பேருந்து நிலையத்துக்கு நடந்தே சென்றாள். பேருந்தில் உக்கார்ந்தவுடன், நடத்துனரிடம் இருபது ரூபாய் நோட்ட கொடுத்து, அண்ணே... அண்ணே! புகார் சாலைக்கு ஒரு டிக்கெட் கொடுங்க என்றாள். ஏம்மா...! என் உசிர வாங்குரத்துக்குன்னே வருவியா? இந்தா இந்த கிழிஞ்ச நோட்ட உண்டியல்ல போடு. என்று கோபத்துடன் கத்தினார் நடத்துனர். அண்ணே... அண்ணே! என்கிட்ட இந்த பணம் மட்டும் தாண்ணே இருக்கு. இப்பத்தான் என் மகளுக்கு கொஞ்சம் பொருளெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வந்தேன். வேற காசு இல்லண்ணே! அடுத்த வாரம் வர்ரப்போ வேணா கொடுக்குறேன் அண்ணே; என்றாள். உன்னால எனக்குப் பெரிய தலைவலியாப் போச்சு. போ...போ.. உன் ஊரு வந்துருச்சி இறங்கு என்றபடி அடுத்தடுத்த பயணரிடம் டிக்கெட் கொடுத்துக்கொட்டிருந்தார். அந்தப் பேருந்தில்; “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே, ஒண்ணுந் தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை, உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே, என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை, உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே!” என்ற சினிமாப் பாடல் இசைக்கத்தான் செய்தது. சற்றே! மாதவியின் கண்கள் கலங்கத்தான் செய்தன. வேறு காசு ஏது? அடுத்த வாரம் சந்தைக்கு வட்டிக்காரனிடம் ஐந்தாயிரம் கடன் வாங்கினால் வியாபாரத்தை முடித்துவிட்டு பின்னர், அந்த அசலையும் வட்டியையும் காட்டியது போக மீதம் உள்ள பணத்தில்தான் குடும்பம் நடக்குது. அவள் ஒன்றும் வட்டி காட்டாமல் வெளிநாடு செல்லும் அளவுக்குத் திறமையானவள் கிடையாது. இந்த வாரச் சந்தைகளில் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களின் உழைப்பில் யார்யாரோ வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர. இன்னும் எத்தனையோ மாதவிகள் வாரச் சந்தைகளில் பொலப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் விடியலை எதிர்நோக்கி....