முனைவர் சு. அ. அன்னையப்பன்

சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட தொழுதாவூர் எனும் சிற்றூரில் பிறந்த இவர், சென்னை இலயோலா கல்லூரியில் இளங்கலைத் தமிழ்ப் பட்டமும் மாநிலக்கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பட்டமும் பெற்று, பின்னர் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வையும் (முதுமுனைவர் பட்ட மேலாய்வையும்) நிறைவு செய்துள்ளார். இவருடைய சொந்த ஊரான தொழுதாவூரில் முதல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் எனும் பெருமையும் இவருக்கு உண்டு. இவர் இலக்கண இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு, குறுந்தொகை காட்டும் அகமரபுகோட்பாடும் பண்பாடும், குறுந்தொகை காட்டும் மானுடம், குறுந்தொகை காட்டும் பண்டைத்தமிழரின் களவியல் நெறி, தமிழகமும் தொண்டைமண்டலமும், தொண்டைமண்டலப் புலவர்கள், தொண்டைமண்டலப் பண்பாட்டில் திரெளபதியம்மன், கூத்தாண்டவர் வழிபாடுகள் என ஆறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் நேரடியாகக் கையில்பெறும் நூல்களாகவும் மின்னூல்களாகவும் இணைய வழி நூல்களாகவும் வெளியிடப்பெற்றுள்ளன. அந்நூல்களுள் குறுந்தொகை காட்டும் மானுடம் எனும் நூல் 2015 – 2016-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் என்ற விருதினையும் தொண்டைமண்டலப் பண்பாட்டில் திரெளபதியம்மன், கூத்தாண்டவர் வழிபாடுகள் எனும் நூல் 2018 – 2019-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் என்ற விருதினையும் இந்த இரண்டு நூல்கள் இவருக்கு இவ்விருதினைப் பெற்றுத்தந்துள்ளன. குறுந்தொகை காட்டும் பண்டைத்தமிழரின் களவியல் நெறி எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் நிதி உதவி பெற்று வெளியிடப்பெற்றுள்ளது என்பது சிறப்பிற்குரியதாகும்.

இவர் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்; தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறிக்கொண்டு வருகிறார். இவர் தமிழர் இனம், தமிழர் மொழி, தமிழர் பண்பாடு, பண்டைத் தமிழர் வரலாறு போன்ற கூறுகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றிக் கொண்டும் உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறிக்கொண்டும் இருக்கிறார். பண்டைத் தமிழரின் உண்மை வரலாற்றைச் சான்றுகளோடு நிறுவிக் கொண்டு வருகிறார். பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் சமணர்கள், பெளத்தர்கள் ஆற்றிய கல்விப் பணிகள், சித்த மருத்துவப் பணிகள், இலக்கியப் பணிகள், இலக்கணப் பணிகள் ஆகியவற்றைப் பறைசாற்றிக் கொண்டு வருகிறார். சமணர்களே தமிழ் மொழியில் இருந்த பழைய இலக்கண இலக்கியங்களை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்; அதைப் போன்றே மீண்டும் இலக்கண இலக்கியங்களை இயற்றியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்குச் சான்று பண்டைத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் சான்றுகளாகும். இவர் பண்டைத் தமிழருக்கு மதம் என்ற சொல்லும், கடவுள் என்ற சொல்லும், பக்தி என்ற சொல்லும் தெரியாது என்று கூறியிருக்கிறார். இச்சொற்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டுச் சொற்கள்; பண்டைய தமிழர்கள் இயற்கையோடு இழைந்த வாழ்வினை வாழ்ந்தார்கள் என்று புதிய ஆய்வுச் செய்திகளைக் கூறிக் கொண்டு வருகிறார்.