பயனர்:ரஞ்சனி/மணல்தொட்டி
க. நவம் - இலங்கையில் தெணியகம், பொலிகண்டி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற்பெயர் கந்தையா நவரத்தினம். விசேட விஞ்ஞான ஆசிரிய பயிற்சி பெற்ற இவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இளங்கலைமாணிப் பட்டத்தையும், அதே பல்கலைகழகத்தில் விவசாயப் பொருளியலில் தமது முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெற்றவராவார். 1986 முதலாகக் கனடாவில் வசித்து வருகின்றார்.
வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வரும் புதிய கனேடியர்களது பல்கலைக் கழகப் பட்டங்கள், டிப்ளோமாக்களை கனடிய தராதரங்களுக்கு மதிப்பீடு செய்ய உதவும் நிறுவனத்தில் தகைமைப்பேற்று உறுதுணையாளராகக் கடமையாற்றி, ஓய்வு பெற்றவர். ஊடகவியலாளர், எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், நடிகர், நாடகர், கனடிய அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். பாடசாலை நாட்களிலிருந்தே எழுத ஆரம்பித்த இவர், சிறுகதைகள், நாடகங்களுக்கென அகில இலங்கை ரீதியாகப் பல பரிசில்களைப் பெற்றவர்.
கனடாவிலிருந்து வெளிவந்த 'நான்காவது பரிமாணம்' இலக்கிய இதழின் ஆசிரியர். 'உள்ளும் புறமும்' என்ற சிறுகதைத் தொகுதி, 'உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்' என்ற சர்வதேச அரசியல் கட்டுரைத் தொகுதி என்பன இதுவரை வெளிவந்த இவரது நூல்கள். 14 சக எழுத்தாளர்களது நூல்களை 'நான்காவது பரிமாணம்' வெளியீடுகளாக வெளியிட்டுள்ளார்
1965ஆம் ஆண்டு சிரித்திரன் சிரிகதைப் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்ற இவர், அதேயாண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் நடத்திய கல்லூரி மாணவர் சிறுகதைப் போட்டியில் 'தாயுள்ளம்' என்ற சிறுகதையை எழுதி இரண்டாம் பரிசுக்கான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். பத்திரிகையில் பிரசுரமான இவரது முதல் சிறுகதை 'விரதம்' – 1966இல் தினபதி நாளிதழில் வெளிவந்தது.
1973இல் இவர் எழுதித் தயாரித்து, நெறிப்படுத்திய 'இவர்கள் பைத்தியங்கள்' என்ற நாடகம் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தது. இதேபோன்று, 1974இல் இவர் எழுதித் தயாரித்து, நெறிப்படுத்திய 'இந்தத் தேசத்துக்காக' என்ற நாடகம் கல்வியமைச்சின் அகில இலங்கை நாடகப் போட்டியில் முதலிடத்துக்கான தங்கப் பதக்கம் பெற்றிருந்தது.
1983இல் ஸ்ரீலங்கா வர்த்தக, கப்பல் துறை அமைச்சு மற்றும் கலாச்சார அமைச்சு என்பன இணைந்து நடத்திய அகில இலங்கை ஆக்க இலக்கியப் போட்டியில் 'உள்ளும் புறமும்' என்ற இவரது சிறுகதைத் தொகுதிக்கு முதலிடத்துக்கான பரிசாக தங்கப் பதக்கமும் 5000 ரூபா ரொக்கப் பணமும் கிடைத்திருந்தது. சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், உருவகக் கதைகள் என்பவற்றை வெளியிட்ட தினபதி, சிரித்திரன், மல்லிகை, வீரகேசரி, தினகரன், வளர்மதி, ஊற்று போன்ற -ஈழத்து சஞ்சிகைகள், நாளிதழ்களிலும், தாயகம், தமிழோசை, ஈழநாடு, செந்தாமரை, மஞ்சரி, உலகத்தமிழர், சுதந்திரன், முழக்கம், வைகறை, தேசியம், தமிழர் தகவல் ஆண்டு இதழ்கள், ஆசீர்வாதம், உலகத் தமிழோசை, விளம்பரம், தாய் வீடு, காலச்சுவடு, காலம், நாளை, தூறல், பதிவுகள்.கொம், எழில்நிலா.கொம், ஜீவநதி போன்ற -கனேடிய, வெளிநாட்டு சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத் தளங்களிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகி உள்ளன. 1991இல் வெளியிடப்பட்ட இவரது 'உள்ளும் புறமும்' -கனடாவில் முதன் முதல் வெளியிடப்பட்ட தமிழ்ச் சிறுகதைத் தொகுதியாகும். இதேயாண்டில் வெளிவந்த 'உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்' - சர்வ தேச அரசியற் கட்டுரைகள் - கனடாவில் முதல் வெளியிடப்பட்ட தமிழ்க் கட்டுரைத் தொகுதிகளிலொன்றாகும் 'நான்காவது பரிமாணம்' கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் (1991-1993) 'நான்காவது பரிமாணம்' வெளியீடுகளாக இதுவரை வெளியிடப்பட்ட நூல்கள் - 1 நாவல், 4 கவிதைத் தொகுதிகள், 2 சிறுகதைத் தொகுதிகள், 2 கட்டுரைத் தொகுதி, 1 சுயசரிதை, 1 தகவற் தொகுதி, 1 அகராதி என 14 பிற படைப்பாளிகளின் நூலகளை இவர் வெளியிட்டுள்ளார். இவர் நடித்த நாடகங்கள் 21. நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் 9. எழுதிய நாடகப் பிரதிகள் 6. எழுதி, தயாரித்து, நெறிப்படுத்தி மொன்றியாலில் மேடையேற்றிய 'இனியொரு விதிசெய்வோம்' கனடாவின் முதலாவது தமிழ் சீரிய நாடகம் (1986). மனவெளி கலையாற்றுக் குழுவின் அரங்காடலுக்கென நெறிப்படுத்திய நாடகங்கள் 'அவன்.அவள்' (2000), 'ஊர்ப்போக்கு' (2003) (பிரதியாக்கம்: கவிஞர் சேரன்); கவிமொழிவு, 'முதுவேனிற்பதிகம்' (2012) (கவியாக்கம்: திருமாவளவன்) 'சகா' என்ற பெயரில் ஜூலை 2005 கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் முக்கிய நடிகர். 'உறவு' என்ற பெயரில் 2010 இல் கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் முக்கிய நடிகர் இலங்கையிலும் கனடாவிலும் 16 கவியரங்குகளைத் தலைமை தாங்கி நடத்தியவர். கணையாழி - கனடா சிறப்பிதழின் தொகுப்பாசிரியர் (2000) ரீவீஐ யின் நான்கு வருடகாலச் செய்தி ஆசிரியர். சீரீஆர் இன் சிறிதுகாலச் செய்தி ஆசிரியர். 2008ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதையும் தங்கப் பதக்கத்தையும் ‘கனடா தமிழர் தகவல் நிறுவனம்’ வழங்கிக் கௌரவித்துள்ளது. 'சொல் புதிது' அகராதித் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சொல்லாக்கக் குழுவின் ஆரம்பகால உறுப்பினர்; ஒருங்கிணைப்பாளர். ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பாளர் (20010, 2011); ரொறொன்ரோ, அனைத்துலகக் குறுந்திரைப்பட விழாவின் விமர்சகர் விருதுத் தேர்வாளர் (2009, 2010, 2012); ஈடுபாடும் ஆர்வமும் உள்ள ஏனைய துறைகள் - சங்கீதம், ஓவியம், விளையாட்டு. நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, கலாச்சாரத் துறைகள்சார் கட்டுரைகள், விமர்சனங்கள், முன்னுரைகள் எமுதியுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூலாய்வுரைகளையும் வெளியீட்டுரைகளையும் அறிமுகவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்