வேல்முருகன் .ப
இவர் தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிசேர்வைபட்டியில் பிறந்தவர். அதே ஊரில் தொடக்கக் கல்வி பயின்றவர். பின்பு சற்று அருகிலுள்ள எரசக்கநாயக்கனூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்து, அதன்பின் சற்றுத் தொலைவில் உள்ள இராயப்பன்பட்டியில் இருக்கின்ற புனித அலோசியஸ் மேனிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, மிகத் தொலைவிலுள்ள மதுரை மாவட்டத்தின் வைகை வடகரையில் நூற்றாண்டைக் கடந்த கல்வி நிறுவனமான அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ தமிழ் இலக்கியம் பயின்றவர். மதுரைத் தெப்பக்குளத்திற்கு வடபுறம் உள்ள தியாகராசர் கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தில் எம்.பில் பயின்றவர். யு.ஜி.சி நடத்திய் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, திண்டுக்கலுக்கு அருகிலுள்ள காந்திகிராமியப் பல்கலைக்கழகத் தமிழ் உயராய்வு மையத்தில் யு.ஜி.சி நிதியுதவியுடன் முனைவர் பட்டம்(பிஎச்.டி) ஆய்வு முடித்தவர்(2001). எஸ்.எல்.இ.டி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் வழி எம்.ஏ(வரலாறு)., எம்.சி.ஜே(இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல்) பட்டம் பெற்றுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் வழி எம்.ஏ(மொழியியல்)பயின்று வருகின்றார். இந்திமொழி,கணினி,காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் படிப்பு பயின்றுள்ளார்.
1999 - ஆம் ஆண்டு கல்லூரியில் பயிற்றுவிக்கும் உதவிப் பேராசிரியர் பணியை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் ஆரம்பித்தார். 2001 முதல் 2006 முடிய கோவையிலுள்ள டாக்டர் ஜி ஆர் தாமோதரன் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 2006 -2008 கல்வியாண்டுகளில் பொள்ளாச்சியில் இருக்கின்ற என் ஜி எம் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக பி.ஏ.,எம்.ஏ சுயநிதிப்பிரிவுகளுக்குச் செயலாற்றினார். 2008-2009 கல்வியாண்டு முதல் மதுரைத் தெப்பக்குளத்திற்கு வடபுறம் உள்ள தியாகராசர் கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி செய்து வருகிறார். ஆக 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரி ஆசிரியப் பணி அனுபவம் உடையவர். அதே போல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வு மாண்வர்களுக்கு நெறியாளராக இருந்து வருகிறார்.