ARSSARU28
மருந்து
தொகுசித்த மருத்துவத்தில் உள் மருந்து 32, வெளி மருந்து 32 என 64 வகை மருத்து வடிவங்கள்(forms of medicine) உள்ளன.
மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்
மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்ப தினிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே
(-- திருமூலர் திருமந்திரம் --)
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.
அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டள்ளது
“உள்மருந்து சுரசஞ்சாறு குடிநீர் கற்கம் உட்களி அடை ஓர்சாமம் உயர்சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய் நான்கின் உயிர் மூன்று திங்களாகும் விள் மணப்பாகு நெய் இரசாயனம் இளகம் நால் மேவும் அறுதிங்கள் எண்ணெய் விரலிடும் உயர்ந்த மாத்திரை கடுகு பக்குவம் மிளிறும் தேனுாறல் தீநீர் கொள்ளாறும் ஓராண்டு மெழுகோடு குழம்பு ஐந்து கோப்பதங்கம் பத்தாகும் குருதிபொடி எழுபானோடு ஐந்தாண்டு நீறு கட்டு உருக்கு களங்கு நானுாறு எள்ளிடாச் சுண்ணம் ஐநுாறு கற்பம் சத்து குருகுளிகை மிக்க ஆயுள் என்று எவரும் மகிழ்ச்சித்தர் முப்பத்திரண்டக மருந்து இசைத்தவராய் உள்ளனவரோ”
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
அகமருந்துகளும் அவற்றின் எடுத்துக்காட்டுக்களும்
1.சுரசம் - இஞ்சி சுரசம் 2.சாறு - கற்றாழைச்சாறு 3.குடிநீர் - ஆடாதோடைக்குடிநீர் 4.கற்கம் -கீழாநெல்லிக்கற்கம் 5.உட்களி -கடுகு உட்களி 6.அடை - துாதுவளை அடை 7.சூரணம் - அமுக்கிராச்சூரணம் 8.பிட்டு 9.வடகம் -தாளிசாதி வடகம் 10.வெண்ணெய்- குங்கிலிய வெண்ணெய் 11.மணப்பாகு - மாதுளை மணப்பாகு 12.நெய் - ஆடாதோடைநெய் 13.இரசாயனம் - இஞ்சிஇரசாயனம் 14.இளகம்- கேசரிஇளகம் 15.எண்ணெய்- பூரஎண்ணெய் 16.மாத்திரை-பாலசஞ்சீவிமாத்திரை 17.கடுகு - 18.பக்குவம்- பாவனக்கடுக்காய் 19.தேனுாறல் -இஞ்சி 20.தீநீர்- ஓமம் 21.மெழுகு - கிளிஞ்சல் மெழுகு 22.குழம்பு- சாதிஜம்பீரக்குழம்பு 23.பதங்கம் -சாம்பிராணிப்பதங்கம் 24.செந்துாரம்- இரசசெந்துாரம் 25.நீறு அல்லது பற்பம்- முத்துப்பற்பம் 26.கட்டு- இரசக்கட்டு 27.உருக்கு - 28.களங்கு 29.சுண்ணம்- வெடியுப்பச்சுண்ணம் 30.கற்பம் 31.சத்து- கடுக்காய் சத்து 32.குருகுளிகை- இரசமணி
வெளி அல்லது புறமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டள்ளது
“வெளிமருந்தே கட்டு பற்று ஒற்றடம் பூச்சு வேது பொட்டணம் தொக்கணம் மென்புகை மைபொடி திமிர்தல் கலிக்கம் நசியம் ஊதல் மேவு நாசிகாபரணமும் களிம்பு சீலை நீர்வர்த்தி சுட்டிகை சலாகை பசை களி பொடி முறிச்சல் கீறல் காரம் அட்டை அறுவை கொம்புறிஞ்சல் குருதி கண்டு வாங்குதல் பீச்சு இவை வெளிமருந்து முப்பத்திரண்டென்று கூறினார் விண்ணுலவு சித்தராமால் மேல்வர்த்தியும் புகை பீச்சு மை நசியமும் மென்கலிக்கங்கள் ஓராண்டு ஒளிவர்த்தி பொடி நீர் நாசிகாபரணம் இவை ஒரு மூன்று திங்களாகும் உயர்சீலை களிம்பு இவைகள் ஆறுதிங்கள் ஆகுமென்று ஓதினாராய் உளருமரோ”
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
வெளி அல்லது புறமருந்துகள்
1.கட்டு - இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர் முதலியவற்றில் வேகவைத்தோ கட்டுதல் 2.பற்று- சரக்குகளை நீர்மப்பொருள் விட்டு அரைத்து சுடவைத்தோ சுடவைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புதல் 3.ஒற்றடம்-சரக்குகளை சூடுபடுத்தி துணியில் முடிந்து நோயுள்ள இடங்களில் ஒற்றுதல் 4.பூச்சு-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல் 5.வேது- சரக்குகளை எடுத்து கொதிக்க வைத்து அதனின்று எழும் ஆவியை நவதுவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக இழுத்தல் 6.பொட்டணம்- சரக்குகளை துணியில் முடிந்து சுடவைத்த நெய்ப்புப் பொருட்களில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடமிடுதல் 7.தொக்கணம்- இது மர்த்தனம் எனப்படும். இது வெறுங்கையால் பிடிப்பதும் தைலங்களை தடவிப்பிடிப்பதும் என இரு வகைப்படும் 8.புகை-சரக்குகளை நெருப்பிலிட்டு எழும் புகையைப்பிடித்தல் அல்லது குடித்தல் அல்லத புண் முதலியவற்றுக்கு தாக்கும் படி செய்தல் 9.மை- உ-ம் நீலாஞ்சனமை 10.பொடிதிமிர்தல்- உடம்பில் தேய்த்து உருட்டி உதிர்த்தல் உ-ம் மஞ்சள் பொடி 11.கலிக்கம் - சில சரக்குகளை சில சாறுகளால் அரைத்த உருட்டி மாத்திரையாக்கி தேனிலாவது வேறு சாற்றிலாவது உரைத்து கண்ணில் போடுதல் 12.நசியம்- இலைச்சாறு அல்லது தைலம் அல்லது மாத்திரைகளை தாய்ப்பாலுடன் உரைத்து மூக்கிலிடுதல் 13.ஊதல்- (ஆக்கிராணம்) சரக்குகளை வாயிலிட்டு மென்று காது முதலியவற்றில் ஊதல் 14.நாசிகாபரணம்-சரக்குகளை இடித்து மூக்கிலிடுவது 15.களிம்பு- உ-ம் வங்கவிரணக்களிம்பு வங்கக்களிம்பு 16.சீலை- குழம்பில் துணித்தண்டை தோய்த்து விரணங்களுக்கு உபயோகிப்பது 17.நீர்- விரணங்களை கழுவுவதற்கு உபயோகிக்கும் நீர்மப்பொருட்கள் 18.வர்த்தி - ஆறாத விரணங்களுக்கும் புரையோடும் விரணங்களுக்கும் வைப்பது 19.சுட்டிகை - சுடுகை எனப்படும் 20.சலாகை- கட்டிகள் புரைகள் சிலைப்புண் பவுத்திரம் போன்றவற்றின் நோய் நிலைமையை அறிய உதவும் உலோகக்கருவிகள் 21.பசை - உ-ம் கார்போகிப்பசை 22.களி - நீர் விட்டு அரைத்த சரக்குகளை கரண்டியிலிட்டு சுடவைத்தோ சுடவைக்காமலோ கட்டுதல் 23.பொடி - சரக்குகளை பொடித்து எடுத்து கொள்ளுதல் 24.முறிச்சல் - எலும்புகள் பிறழ்ந்து இருந்தால் அதனை சரியான நிலைக்கு மாற்றுதல் 25.கீறல் - கட்டி பரு கொப்புளம் ஆகியவற்றில் தங்கியுள்ள சீழ் இரத்தம் நீர் என்பவற்றை நீக்க கீறிவிடல் 26.காரம் - விரணத்தை ஆற்றுவதற்காக தோற்றவிப்பதற்காக பயன்படுத்தப்படும் சில நச்சுமருந்துகளும் அதன் கட்டுகளும் 27.அட்டை விடல்- நோயுற்று வீங்கின இடங்களில் தீய இரத்தத்தை அகற்றுவதற்காக அட்டை விடல் 28.அறுவை- தேவையில்லாதவற்றை அறுத்து நீக்கி தைத்து செம்மைப்படுத்தல் 29.கொம்பு கட்டல் - உடைந்த உறுப்புக்களை இணைத்து மீண்டும் ஒட்டும்படி மரச்சட்டம் கட்டி வடல் 30.உறிஞ்சல் - விரணங்களிலுள்ள சீழ் குருதி என்பவற்றை உறிஞ்சி எடுத்தல் 31.குருதி வாங்குதல்- இரத்தக்குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தல் 32.பீச்சு- மலம் வெளிப்படாவிடில் குழாய் மூலமாக நீர்மப்பொருட்களை உட்செலுத்துதல்
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)