வெங்கடேசு

ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேலாக எம்.சி.ஏ என்னும் முதுகலை கணிப்பான் பயன்பாட்டியல் பாடவகுப்பை மாணவர்களிடம் பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்று நடத்தியது.அக்கல்லூரிக்கு ஒரு மின்னஞ்சல் வசதிகூட அந்த நாளில் இல்லை என்பதை இப்பொழுது நினைத்து நான் வருந்துவதுண்டு.மின்னஞ்சல்,இணையம் பற்றி நேரடியாக அறியாமல் அந்த மாணவர்கள் என்ன அறிவைப் பெற்றிருப்பார்கள்?.கரும்பலகையில் கற்பதுஅல்ல இணையம் சார்ந்த கல்வி.அதனை முழுமையாக செய்முறை வழி கற்றால் பயன்பாடு மிகுதியாயிருக்கும்.அந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எத்தகைய செய்ம்முறை அறிவுப் பின்புலமும் இல்லாமல் வெளியேறி இருப்பார்கள் எனபதுதான் உண்மையாக இருக்கமுடியும்.

கணிப்பொறி,இணையம் இவை இன்று உலகில் தவிர்க்கமுடியாத கல்விப் புலங்களாகிவிட்டன.ஒருநாள் உலகில் இணையசேவை முற்றாகத் தடைப்பட்டால் உலக இயக்கமே நின்றுவிடும் என்ற அளவிற்கு இணையம் முதன்மை உடையதாகிவிட்டது. வானவூர்திப் பதிவு, தொடர்வண்டிப் பதிவு,பங்குச்சந்தை,வங்கிப் பணப்பரிமாற்றம்,நிறுவனங்களின் செயல்பாடுகள் யாவும் இணையத்தை நம்பியே இயங்குகின்றன.இவ்விணையத்தில் பலதுறையில் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் பணிபுரிகின்றனர்.எனக்கு வேண்டியவர்கள் பலர் கணிப்பொறித் துறையை நன்கு கற்று, அத்துறையில் வியத்தகு சாதனைகள் புரிந்துள்ளனர். சிலர் அடிப்படைக்கல்வி கூடப் பெறாமல் தாமே,கணிப்பொறி,இணையம் சார்ந்த அறிவுபெற்று மிகச்சிறந்த இணையப் பக்க வடிவமைப்பாளராகவும், மென்பொருள் உருவாக்குநர்களாகவும் உள்ளனர்.அவர்கள் செய்த பணிகள் தமிழ் மொழிக்கும்,தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. அத்தகு இளைஞர்களை அடையாளம் காட்டுவதால் கணிப்பொறி,இணையத்துறையில் உள்ள பலர் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்ற அடிப்படையில் சிலரை அடையாளம் காட்ட நினைக்கிறேன்.

திண்டிவனத்திற்கு அருகில் உள்ள சிற்றூர் தாதாபுரம்.வேளாண்மைத் தொழிலில் ஈடுப்பட்டிருந்த பெற்றோர் தம் மகன் வெங்கடேசுவைப் படிக்கவைக்க நினைத்தும் பொருள் வசதி இல்லாததால் திண்டிவனத்தில் மேல்நிலைக் கல்வி வரை படிக்கவைத்து,அதன்பிறகு தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரிடம் கணக்குகளைக் குறித்துவைக்கும் பணியாளனாகப் பணிக்கு அனுப்பிவைத்தனர்.பேருந்து உரிமையாளர் தம் கடைக்கு வந்த பணியாளனை இடைப்பட்ட நேரங்களில் கணிப்பொறிப் படிக்கும்படி பணம்கொடுத்து ஊக்கப்படுத்த, வெங்கடேசன் என்ற அந்த மாணவத் தொழிலாளிக்குக் கணிப்பொறி அறிமுகமானது.சிறிதளவு கணிப்பொறி கற்ற வெங்கடேசு சென்னை சென்றால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் சென்னைக்குப் பணிக்குச் சென்றார்.அச்சகம் ஒன்றில் பணி கிடைத்தது.இடைப்பட்ட நேரங்களில் பகுதிநேரமாகச் சில இதழ்களின் வடிவமைப்பாளர் பணியை மேற்கொண்டார்.நெற்றிகண்,சட்டப்பிரச்சனை உள்ளிட்ட இதழ்களை வடிவமைக்கவும் இணையத்தில் இவ்விதழ்களைத் தெரியச் செய்யவும் முயன்றார்.

வருவாய் குறைவு. பணி அதிகம்.பி.பி.ஏ.அஞ்சல்வழிப் படிப்பு தடைப்பட்டது.தன் ஊருக்கு அருகில் உள்ள புதுச்சேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிகிடைத்து 2000 ஆம் ஆண்டில் இணைகின்றார்.5 ஆண்டுகளில் கடுமையான உழைப்பு,முயற்சியால் தாம் பணிபுரிந்த நிறுவனத்தில் நம்பிக்கைக்குரியவரானார்.சராசரி பணியாளராக இல்லாமல் ஒரு நிறுவனத்தை உருவாக்கவும்,மேலாண்மை செய்யவுமான திறம் பெற்ற வெங்கடேசு தாமே ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறார்.பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கும்படியாகவும்,பலர் இவர் செய்துதரும் வேலைக்குக் காத்திருக்கவுமான நிலையை உருவாக்குகிறார்.மூன்றாண்டுகளில் இவருடைய நிறுவனத்தின் சேவையைப் பெற்ற நிறுவனத்தால் இவர் நிறுவனம் வாங்கப்படும் நிலைக்கு இவர் நிறுவனப்பணி இருந்தது.

இணையம் வழியாக உலகின் பல பாகங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து தருவதே இவர் நிறுவனப் பணியாகும். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப,உரிய காலத்தில் இவர் பணிசெய்து கொடுத்ததால் இவர் நிறுவனம் உலக அளவில் நம்பிக்கைக்குரியதாக மாறியது.315 மொழிகளில் மொழிபெயர்க்கும் சேவையை இவரின் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.உலகின் புகழ்பெற்ற மருந்து நிறுவனங்கள்,மகிழ்வுந்து நிறுவனங்கள் இவர் மொழிபெய்ப்புப்பணிக்குக் காத்திருந்தன(இணையம் வழி மொழிபெயர்ப்புப் பற்றிய பல தகவல்கள் வெங்கடேசுவிடம் உள்ளன).உலகத்தரத்திற்கு இவரின் நிறுவன மொழிபெயர்ப்புப் பணி இருந்தது.இணையத்தின் உதவியால் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேசுவிற்குத் தமிழுக்குப் பணி செய்யும் விருப்பம் ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களைக் கணிப்பொறியில் வலைப்பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.இவ் வலைப்பதிவுகளைத் திரட்ட,திரட்டி ஓரிடத்தில்காட்ட உலக அளவில் ஒவ்வொரு மொழியிலும் திரட்டிகள் உள்ளன.ஆங்கிலத்தில் Technorati.com , Bloglines.com உள்ளிட்ட திரட்டிகள் உலகம் முழுவதும் உள்ள பதிவர்கள் எழுதும் செய்திகளைத் திரட்டும் பணியில் உள்ளன.தமிழில் இப்பணியைத் தமிழ்மணம்,தேன்கூடு,தமிழ்வெளி உள்ளிட்ட திரட்டிகள் செய்கின்றன. இத்திரட்டிகளின் பணியை உற்று நோக்கிய வெங்கடேசு தாமும் ஒரு திரட்டியை இவற்றைவிட மேம்பட்ட கூடுதல் வசதிகளுடன் உருவாக்க நினைத்தார்.புதுச்சேரியில் தொடங்கப்பட்ட புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கம் பல நண்பர்களை வெங்கடேசுவிற்குத் தந்தது.வினையூக்கி,மா.சிவக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் இவரின் முயற்சியை ஊக்கப்படுத்த புதுச்சேரியில் எழுதும் வலைப்பதிவுகளை மட்டும் தொகுக்கும்படியாகத் "திரட்டியை" உருவாக்கினார்.உலகம் முழுவதிலிருந்தும் பலர் இவர் திரட்டியில் தங்கள் பதிவுகளை இணைத்தனர்.ஏறத்தாழ மூன்று மாதங்களில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பதிவுகளை இணைக்க விண்ணப்பித்தனர்.இவர்கள் எழுதும் எழுத்துகளின் தரம் அறிந்து எறத்தாழ1800 பேர் எழுதும் எழுத்துகள் மட்டும் உடனடியாகத் திரட்டும்படி தம் திரட்டியை வடிவமைத்துள்ளார்.தகவல்களைத் திரட்டித் தரும் பணியைச் செய்யும் தன் தளத்திற்குத் "திரட்டி" எனத் தமிழ்ப்பெயர் வைத்துள்ளது சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.

இந்த கட்டுரை என்னைப்பற்றி முனைவர் மு. இளங்கோவன் அவர்களால் தமிழ் ஓசை இதழில் வெளியிடப்பட்டது.

தொடுப்புகள்

தொகு

திரட்டி.காம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Agevenkat&oldid=689280" இலிருந்து மீள்விக்கப்பட்டது