Arivazhagankaivalyam
வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நான் அடையும் வெற்றிகள் அனைத்திற்கும் காரணமாக நான் நினைப்பது என் தந்தையார் திரு.ச.கைவல்யம் அவர்களின் வழி நடத்தலும் அன்பும் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மாறாத மனித நேயத்தையும், இன உணர்வையும், தமிழின் இனிமையையும் எனக்கு உணர்த்திய அவரின் பாதங்களில் இருந்து தொடங்குகிறது என் தமிழ்ப் பயணம்.
தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன் என்றே என்னை உங்களிடம் அறிமுகம் செய்வேன், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன், அரசு அலுவலர் மகனாக வளர்ந்தேன், ஒரு முழுமை பெற்ற மனிதனாக வளர நினைக்கிறேன், காரைக்குடி அருகில் இருக்கும், சிராவயல் மருதங்குடி எனது சொந்த ஊர், தந்தை வழித் தாத்தா ஒரு பெரியார் வழி வந்த பண்பாளர், தந்தையார் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர், தாயார் பாசமுள்ள ஒரு தமிழ் நங்கை, தலை மகன் நான், தங்கை ஒருத்தி (மைவிழி), தம்பி ஒருவன் (அன்பழகன்), தங்கை அமெரிக்காவில் போஸ்டன் நகரில் வசிக்கிறார், தங்கைக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் ஆதவன், இளையவள் அமிழ்தினி, மைத்துனர் சோமு.கதிரவன் ஒரு கணிப்பொறி கட்டமைப்பாளர், தம்பி உணவக மேலாண்மை அலுவலராக மங்களூரில் பணியாற்றுகிறான்.
காதல் மணம் புரிந்த கணம் முதல் இமைப்பொழுதும் பிரியாமல் என் இதயமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு மனைவி சுமதி, பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி, தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது.