வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் (வந்தே) ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் - அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:As6411_tamil&oldid=35045" இலிருந்து மீள்விக்கப்பட்டது