Athiyan Srinivasan
எனது பெயர் அதியன் சீனிவாசன், கோயம்பத்தூரில் பிறந்து புனேயில் வசித்து வரும் ஒரு தமிழன். மிக வேகமாக வளர்ந்துவரும் இக்கால தலைமுறையில் சிறிது வளர முயற்சித்துக் கொண்டிருக்கும் நான் பிறந்த காலகட்டத்தில் இதுபோன்ற அதிவிரைவு தகவல் பெறும் தளங்களும், அமைப்புகளும் இல்லை. தற்போது எனது வயது 32. நான் சிறு வயதாக இருந்தபோது கிடைத்த தொழில்நுட்ப வரலாறு அனைத்தும் கடிதம் சம்பந்தப்பட்டவைதான். ஆனால், தற்போது நொடிக்கு நொடி தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம்.
அந்த வகையில் தினமும் செய்தித்தாள் படிப்பது அன்றாட விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் முக்கியப்பங்கு வகிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. உலகம் அறியும் செய்திகளை முன்னின்று அறியவும், அதை மற்றவருக்கு தெரியப்படுத்தவும் வேண்டும். அத்துடன் உள்ளதை தைரியமாக சொல்லவும் ஒரு மனப்பாங்கு வேண்டும். அந்த மனப்பாங்கு என்னிடம் உள்ளது என்று எண்ணிதான் இதழியல் துறையினை எடுத்தேன். ஒரு பத்திரிக்கையாளனாக, இதழியல் வேலை செய்பவராக என்னை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எனது விருப்பங்கள் : புத்தகம் படித்தல், இணையதள உலவுதல், உணவுப் பிரியன், இணையதள பதிவிடுதல்
அன்றைய காலகட்டம்தொட்டு இன்றைய காலகட்டம் வரை இருப்பவர்கள், அதாவது என்போன்று 25 முதல் 35 வயதுவரை உள்ளவர்களுக்குத் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி நன்று தெரிந்திருக்கும். அவ்வகையில் இணையமும் அதன் பயன்பாடும் அளவற்ற எல்லையினைக் கொண்டு, இன்றளவும் விரிந்துகொண்டிருக்கிறது. மேற்கூறிய எனது விருப்பங்களில் பதிவிடுதல் எனது முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் பயனுள்ள செய்திகளைப் பகிரும் செயல்களுள் ஒன்று. நமக்குத் தெரிந்தவற்றினை தெளிவாகவும், இலவசமாகவும், மற்றவருக்குப் புரியும் வகையிலும், எளிமையாகவும் கொண்டு சேர்ப்பது நமது அறிவினை மட்டுமல்லாது, அதனைப் படிப்பவரின் அல்லது தெரிந்துகொண்டவரின் அறிவினையும் சேர்த்துப் பெருக்கும்.
இந்த ஒரு பயன் போதாதா? அதற்காகத் தான் நான் விக்கிப்பீடியாவினை தேர்வு செய்து எனது பங்கீட்டினை வழங்க முற்பட்டுள்ளேன். இது எனது சிறிய முயற்சி மட்டுமே. கிடைக்கும் சிறிய வேளைகளில் என்னால் முடிந்த தகவல்களைத் தொகுத்து கட்டுரைகளாக கொடுக்க வேண்டுமென எண்ணினேன். அதனடிப்படையில் பிற கட்டுரைகளையும், ஏற்கனவே போதுமான தகவல்கள் கொண்டுள்ள பல ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தும் எனது பங்களிப்பினை நல்க விரும்புகிறேன்.
நான் கத்துக்குட்டியாக இருப்பினும், என்னை நல்வழிப்படுத்துவது இதனை படிப்பவரின் கைகளில்தான் உள்ளது. ஏனெனில் உங்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள்தான் படைப்பாளிகளின் கரங்களை ஓங்கச் செய்யும். எனது கட்டுரைகள் பற்றிய உங்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் செய்தி அனுப்பவும், நான் அவற்றினை தலைவணங்கி ஏற்றுக்கொள்வேன்.