Era kumar
இரா. குமார். தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்துள்ள கீழப்புளியங்குடி கிராமத்தில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்தவர். தந்தை ராமசாமி பிள்ளை. தாய் பராசக்தி. பெரிய வேளாண்குடும்பம்.
சிறு வயதிலேயே தமிழ் மீது கொண்ட பற்றால், கல்லூரிக்கல்வியில் தமிழ் இலக்கியம் பயின்றார். விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலையும் சென்னை மாநிலக்கல்லூரியில் முதுகலையும் பயின்ற இவர், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறையில், அக இலக்கணத்தில் ஆய்வு செய்து, ஆய்வுநிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்தவுடன் 1984 ம் ஆண்டு மே 2ம் நாள், தினமலர் நாளிதழின் சென்னை பதிப்பில் பிழைதிருத்துநராக பத்திரிகை பணியை தொடங்கினார்.ஆர்வம், அயராத உழைப்பு காரணமாக, இதழியல் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டு, ஒரே ஆண்டில், தினமலர் நெல்லை பதிப்பின் செய்திப்பிரிவுக்கு பொறுப்பாளர் ஆனார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்து வரும் இவர், தினகரன் நாளிதழின் இணையாசிரியாகவும் பணியாற்றியுள்ளார். இப்போது, தின இதழ் நாளிதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.
இலங்கையில் போர் நடந்தபோது அங்கு பலமுறை சென்று செய்தி சேகரித்த அனுபவம் பெற்றவர்.இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று முக்கிய செய்திகளைத் திரட்டி வந்த அனுபவம் இவருக்கு உண்டு. இதழியல் துறையில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றிருப்பவர்.
இவரது நட்பு வட்டம், பத்திரிக்கைத் துறையைத் தாண்டி பரந்துபட்டது.பல மூத்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் அன்பையும் ஆழ்ந்த நட்பையும் பெற்றிருப்பவர். பல அரசியல் தலைவர்களின் அன்பையும் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர், பத்திரிகையாளர், நிர்வாகி என பன்முகத் திறமை வாய்ந்த இவர் இதுவரை 8 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கல்லுரியில் படிக்கின்ற காலத்திலேயே “இருட்டுச் சுவடு” என்ற புதுக்கவிதை நூலை வெளியிட்டவர் . காரைக்குடி கம்பன் கழகம் உட்பட பல இடங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்
”அருள்தொண்டர் அறுபத்து மூவர்”, ”சிவவாசகம்” ஆகிய நூல்களை எழுதி இவர்ஆற்றிய பணியினைப் பாராட்டி, திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர்களும் தருமையாதீனம் கட்டளைத் தம்பிரான், குமாரசாமித் தம்பிரான் அவர்களும் இணைந்து, “இறைத்தமிழ் வேந்தர்” என்ற பட்டம் அளித்து இவரை சிறப்பித்தனர்.
இந்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனம், 2014ம் ஆண்டில், சிறந்த எழுத்தாளர் விருதும் பொற்கிழியும் வழங்கி இவரை சிறப்பித்தது
இவர் எழுதி வெளிட்ட நூல்களின் விபரம்
========================
தொகு1. இருட்டுச்சுவடு (புதுக்கவிதைகள் தொகுப்பு ) 1983ம் ஆண்டு வெளியிடப் பட்டது
2. அருள் தொண்டர் அறுபத்து மூவர் (பெரிய புராணம் முழுவதும் புதுக்கவிதை நடையில்) 2009 ம் ஆண்டு வெளியீடு.
3.நடைமுறை இதழியல்(சென்னைப் பல்கலைக்கழகம் ,.லயோலா கல்லூரி உட்பட..பல கல்லூரிகளில்..இதழியல்துறை மாணவர்களுக்கான பாடநூல்)2010 ம் ஆண்டு வெளியீடு
4.நனவோடை நினைவுகள் (புகழ் பெற்ற கலைஞர்கள் , கவிஞர்கள், அரசியல் தலைவர்களுடன் உரையாடிய சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு)2011 ம் ஆண்டு வெளியிடப் பட்டது
5. அறுபத்து மூவருள் ஐவர் (வணிக மரபைச் சேர்ந்த ஐந்து நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு புதுக்கவிதை நடையில்) 2012ம் ஆண்டு வெளியீடு
6. செம்மொழிச் சிலம்பு (புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம்) 2013ம் ஆண்டு வெளியீடு
7. சிவவாசகம் (திருவாசகத்தில் திளைத்ததால் பிறந்த, சிவன் மீதான நூறு பாடல்களின் தொகுப்பு) 2014 ல் வெளிடப்பட்டது
8. பக்திப் பயிர் வளர்த்த பதின்மூவர் (வேளாண்மரபைச் சேர்ந்த 13 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, புதுக்கவிதை நடையில் ) சிவவாசகத்தோடு வெளியிடப்பட்டது .
இது வரை வெளியிட்ட எட்டு நூல்களும் வெவ்வேறு தளத்தில் அமைந்வை என்பது தனிச்சிறப்பு .
இவரின் மொழியில் தம்மை புதுப்பித்துக்கொள்ள பல்வேறு இலக்கியங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.