இயல்வாணன் என்ற புனைபெயரையுடைய ஈழத்துப் படைப்பாளி சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன் ஆவார். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.இவர் பாடசாலை ஆசிரியராக,அதிபராகக் கடமை ஆற்றி, தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக கடமை புரிகிறார். சிறுகதை,நாவல்,கவிதை,விமர்சனம்,பத்தி எழுத்து,புகைப்படத்துறை,பத்திரிகைத்துறை என்பன இவர் ஈடுபாடு கொண்ட துறைகளாகும். நூற்றுக் கணக்கான கட்டுரைகளை பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.இலக்கியம்,சமூகவியல், புவியியல்,அரசியல்,சூழலியல் சார்ந்து இவரது கட்டுரைகள் காணப்படுகின்றன.இலக்கிய விமர்சனத் துறையில் தடம் பதித்து வரும் இவர் பிரதேச நிகழ்வுகளையும்,மனிதர்களையும்,காட்சிகளையும் புகைப்படம் பிடித்து ஆவணப்படுத்தி வருகின்றார். 20 வருடங்களுக்கும் மேலாகப் பத்திரிகையாளனாகவும் செயற்பட்டு வருகின்றார்.பல பத்தி எழுத்துக்களையும் உதயன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் சிறுவர் பத்தி, யாரொடு நோவோம்? சமூகவியல் பத்தி என்பன குறிப்பிடத்தக்கவை. பல சிறுகதைகளையும் இவர் படைத்துள்ளார்.தாகம்,புகை,பயிரில் புழு,முடவன் நடை,சரிவு,முடிந்த ஒரு இரவும் முடியாத ஒருபகலும்,புலர்காலையின் வலி,பந்தயக்குதிரை முதலியன குறிப்பிடத்தக்கன. இவரது புலர்காலையின் வலி சிறுகதை பூபாளராகங்கள் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. [1]பல கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார்.கவிதை சஞ்சிகை நடத்திய மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டியில் இவரது வாழ்வைப் பற்றிய தேடல் கவிதை இரண்டாம் இடத்தைப் பெற்றது. சுவடுகள் என்ற நாவலையும் இவர் எழுதியுள்ளார்.இது 1992இல் மீரா வெளியீடாக வெளியிடப்பட்டது. இவர் எழுதிய உகைப்பு குறுநாவல் தமிழக சுபமங்களா சஞ்சிகை தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து உலகளாவிய ஈழத்து எழுத்தாளரிடையே நடத்திய குறுநாவல் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றது. அற்றுப் போன அழகு(கட்டுரைகள்),செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் (சிறுவர் இலக்கியம்) , பாக்கியம் பாட்டியின் விண்வெளிப் பயணம்(சிறுவர் நவீனம்), புலர்காலையின் வலி(சிறுகதைத் தொகுதி), யாரும் பாடலாம் என்னை (கவிதைத் தொகுதி) என்பன நூலுருப் பெற்றுள்ளன. இயல்வாணன் படைப்புகள்: ஓர் ஆய்வு என்ற தலைப்பில் செல்வராசா ஜான்சன் என்ற மாணவன் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் சிறப்பு கலைமாணி பட்டத்துக்காக ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார். ஸ்ரீகுமரனின் சிறுவர் இலக்கிய முயற்சிகள் என்ற தலைப்பில் குகதாசசர்மா சிவகுமார் என்ற மாணவன் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் முதுமாணி பட்டத்துக்காக ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Iyalvaanan&oldid=3680927" இலிருந்து மீள்விக்கப்பட்டது